அதிமுக – உண்மை என்ன?

ஓகஸ்ட் 5, 2017

அதிமுகவில் என்ன தான் நடக்கிறது? எதிர்காலத்தில் என்ன ஆகும்? – கொஞ்சம் விளக்கமுடியுமா அனாதி? – காவ்யா முத்தரசன்.

நான்கு வருடங்களுக்கும் ஒன்றுமே நடக்காது என்று நம்பலாம். ஏனென்றால் இன்றைய நிலையில் பன்னீரோ, எடப்பாடி அவர்களோ, தினகரனோ ஆட்சியைக் கலைத்து விட்டு பொதுமக்களிடம் ஓட்டுக் கேட்கச் சென்றால் ஒருவரும் ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது அவர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதுமட்டுமல்ல ஆட்சியைக் கலைத்து விடவும் மாட்டார்கள். தினமும் பத்திரிக்கைகளுக்குச் செய்தி கிடைத்த வண்ணம் இருக்கும். தமிழகம் பரபரப்பாய் இருக்கும். மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் மத்திய அரசின் விருப்பத்தின் படியே நடக்கும். மத்திய அரசிடம் வலுவான ஐடி, ஊழல், சிபிஐ மூன்றும் இருக்கும் வரையிலும், தவறு செய்தவர்கள் பதவியில் இருக்கும் வரையிலும் அதிமுக அடிமையாகத்தான் இருக்க முடியும். பாதிக்கப்படப்போவது தமிழகம் மட்டுமே.

சசிகலாவை வைத்து கட்சியைப் பலப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் டெல்லி சுல்தானேட்டினால் அது முடியாமல் போய் விட்டது. எப்போதும் டெல்லியின் மனதுக்கு கோணல் வராதவாறு நடந்து கொள்ள வேண்டும். இருப்பினும் ஒரு சிலரின் பேராசையினாலும், அவர்கள் செய்த தவறினாலும் அதிமுகவின் இன்றைய நிலை காற்றில் வைத்த சூடம் போல ஆகி விட்டது. சூடம் காற்றில் ஆவியாகி விடும். அது பற்றிய சந்தேகமே வேண்டாம். அது காலத்தின் கட்டாயமாகக் கூட இருக்கலாம்.

அதிமுகவிற்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கிறது. பதவி ஆசை இல்லாமல், மாபெரும் இயக்கத்தைக் கட்டிக் காத்திட(ஒன்றும் ஆகப்போவதில்லை) அதிமுக தலைமையில் யாராவது ஒருவர் மூலம் ஒன்று சேர்ந்திட வேண்டும். ஆனால் மாட்டார்கள். சசிகலா இருந்தார் என்றால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. ஆனாலும் எதுவோ ஒரு புள்ளியில் இணைந்தால் கொஞ்சம் நஞ்சமிருக்கும் அதிமுகவினரின் ஓட்டு வங்கி காப்பாற்றக்கூடும்.

தற்போது களத்தில் நிற்கும் சில அரசியல்கட்சிகளுக்கு அதிமுக சூடத்தின் விளைவாக ஓட்டு வங்கி பிரிந்து விடும் போலத் தெரிகின்றது. திமுக செயல்தலைவருக்கு லட்டாகக் கிடைத்திருக்கும் வாய்ப்பை ஏன் நழுவ விடுகிறார் என்று தான் புரியவில்லை. வாசல் தேடி வந்திருக்கும் வாய்ப்பை வசதியாக ஏற்க மறுக்கிறார். இனி அப்படி ஒரு சான்ஸ் கிடைக்குமா? என்பதெல்லாம் காலத்தின் கையில் இருக்கிறது. இதுவே கலைஞராக இருந்திருந்தால் இன்னேரம் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும். சரி அது போகட்டும். தலைக்கு மேல் பல கூரான கத்திகளைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கும் திமுகவின் நிலையும் பரிதாபத்துக்கு உரியதுதான்.

உப்பு என்றாலும் ஊழல் என்றாலும் ஒன்றுதான். தண்ணீர் குடித்தே ஆக வேண்டிய தருணம் வந்தே தீரும் என்பது அதிமுகவின் வரலாறு மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதிமுக இனி வரலாற்றில் படிக்கப்பட வேண்டிய பாடமா இல்லை நிகழ்காலத்தில் நடக்க இருக்கும் செய்தியா என்பது அதன் தற்போதைய தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய விஷயம்.

பிஜேபிக்கு ஒரு சிறிய குறிப்பு : நரசிம்மராவ் ஆட்சியில் உர ஊழல் என்று ஒன்று நடந்ததே அதை ஏன் எவரும் கண்டு கொள்ளவே இல்லை?

– அனாதி

அந்த உர ஊழல் பற்றிய சிறு குறிப்பு கீழே – ( நன்றி : மதிமுக இணையதளம் -ஆசிரியர் செந்திலதிபன்)

நரசிம்மராவ் காலத்தில் இன்னொரு பேர் பெற்ற ஊழல் ‘யூரியா’ ஊழல்; இந்திய அரசின் தேசிய உர நிறுவனம் ( NFL ), துருக்கியில் கார்சன் டானிஸ் மான்லிக் டுரிகாம் சமாயி டிகார்கட் லிமிடெட்(!) என்ற நிறுவனத்திடமிருந்து இரண்டு இலட்சம் டன் யூரியா வாங்கிட 1995, அக்டோபரில் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தம் போடப்பட்ட உடனேயே, தேசிய உர நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒப்புதலுடன், கார்சன் கம்பெனிக்கு உரத்துக்கான முழுத் தொகையைக் கொடுத்து விட்டது. ஆனால், ‘யூரியா’ மட்டும் இறக்குமதி ஆகவில்லை. கார்சன் கம்பெனியின் ஏஜெண்ட், ‘சாய்கிருஷ்ண இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் ஹைதராபாத் ‘ஏ என் இசர்ட் கிரிண்ட்லேஸ்’ வங்கியில் கணக்கு இருந்தது. அந்தக் கணக்கில் ‘துருக்கி’ நாட்டு கார்சன் கம்பெனி மூலம் கமிஷன் பணம் ஹவலா மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதாவது, ‘யூரியா’ இறக்குமதி செய்யாமலேயே இறக்குமதி ஆனதாகக் காட்டி, கமிஷன் தொகை கறக்கப்பட்டது. இந்த யூரியா ஊழலை விசாரித்த சிபிஐ, கார்சன் நிறுவனம் ஒரு ‘உப்புமா’ கம்பெனி என்றும் கண்டு பிடித்தது. இதில் ஆதாயம் அடைந்த பிரதமர் நரசிம்மராவ் உறவினர் பி.சஞ்சீவராவ், மத்திய அமைச்சராக இருந்த ராம் லக்கன் சிங் யாதவ் மகன் பிரகாஷ்சந்திர யாதவ், தேசிய உர நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சி.கே.இராமகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இணைப்பு:

உர ஊழல் – சிறு குறிப்பு


ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறாரா?

ஜனவரி 19, 2017

தன் புதுப்பட வெளியீட்டு நெருங்குகிற வேளைகளில் ரஜின் தன் திருவாய் மலர்ந்தருள்வது வாடிக்கை. தமிழகத்தில் அசாதரண நிலை நிலவுகிறது. குடும்ப ஆட்சிகள் நடைபெறுகின்றன என்று அரசியல் பேசி இருக்கிறார்.

குடும்ப ஆட்சி நடந்த போது அவர்களின் திரைப்படத்தில் நடித்தார். கோடிகளில் சம்பளம் வாங்கினார். அப்போது குடும்ப அரசியல் நடைபெறுகிறது என்று தெரியவில்லையா? அவர்கள் கொடுத்த சம்பளம் குடும்ப ஆட்சியிலிருந்து வந்தது என்று தெரியவில்லையா?

சினிமாவில் மகள்கள், மருமகன்கள், சம்பந்திகள், சம்பந்திகளின் உறவினர்கள் என்று தங்களுக்குள்ளே படம் தயாரிப்பார்கள், விற்பார்கள், லாபம் சம்பாதிப்பார்கள். அது மட்டும் சரி. சினிமாவில் புதியவர்களை நுழைய விடுகின்றீர்களா? கண்ணுக்குத் தெரியாத ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒழித்துக் கட்டுகின்றார்கள்.

தாங்கள் ஒரே குடும்பத்துக்குள் செய்தால் எங்களுக்கு சினிமா தவிர்த்து வேறு ஏதும் தெரியாது என்று பேசுவார்கள்.

அதே போலத்தான் அரசியலும். அரசியல் செய்தவர்களுக்கு அரசியல் தவிர்த்து வேறு ஏதும் தெரியாது என்பார்கள். சினிமாவில் குடும்பமே இருக்கலாம் என்கிற போது அரசியலில் இருந்தால் என்ன தவறு? ஏனிந்த எரிச்சல் உங்களுக்கு?

இனி உங்கள் பேச்சை சுத்த தமிழர்கள் எவரும் நம்பி ஏமாற மாட்டார்கள்.

கிமலரும் குகடனும் வரிந்து கட்டிக் கொண்டு அதிமுகவிற்கு எதிராக எழுதுகின்றார்கள். கூபா அரசியலுக்கு வரும் போது வேறு எவரும் வரக்கூடாதா? என்னங்க சார் உங்க பத்திரிக்கை தர்மம்?

ஒருவர் எழுதி இருக்கிறார் மணி அடித்தவர் வாத்தியார் ஆகலாமா? என. ஆரிய தர்மத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் தமிழர் சமூகத்தில் அப்படி இல்லை. தமிழர்களுக்குள் சிண்டு முடிந்து விட்டு குளிர்காய்வதிலும் தமிழகத்திற்கு தமிழர் அல்லாது ஆரியரோ அல்லது வேறு ஆட்களோ தலைவராகத்தான் வர வேண்டுமென்று நினைத்து சூதுகளைச் செய்து செய்திகளைப் பரப்பி வரும் கெடுமதியாளர்கள் தின்று கொண்டிருப்பது ஒவ்வொரு தமிழனும் கொடுக்கும் காசுதான். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைக்கும் சில ஆரியப்பத்திரிக்கைகளை அடையாளம் கண்டுகொண்டு தமிழர்கள் நடத்தும் பத்திரிக்கைகளை வாங்கிப் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இத்தகைய சூதுக்களை இப்போதெல்லாம் வெகு தெளிவாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் சூதும் வாதும் நிறைச் செய்திகளை தினம்தோறும் வெளியிடுகிறார்கள்.

ஒரு தமிழச்சி தலைவராக ஆவதா என்று வயித்தெரிச்சலில் தினம்தோறும் அதிமுக உடைப்பு என சில்வண்டுகளின் ரீங்காரத்தை செய்திகளாக்கி பொய்யுரைப் பரப்பி வருகின்றார்கள்.

அதற்கு ஒரு சில கபாலிகளும் துணை போகின்றார்கள். ஒவ்வொரு தமிழனும் கொடுத்த காசில் தின்று கொழுப்பெழுத்து செய் நன்றி மறந்து தீங்கு செய்ய நினைத்திடும் தீய சக்திகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

காமராஜர் என்ற தமிழர் ஆட்சியில் இருந்த போது நடந்த மக்கள் நல திட்டங்களைப் போல சுத்த தமிழரான அதிமுக செயலாளரும், தற்போதைய முதன் மந்திரியும் செய்வார்கள் என நம்பலாம்.

தேமுதிகவிலிருந்து பிரிந்து போனவர்களின் தற்போதைய நிலை என்னவென்று அனைவருக்கும் தெரியும். இதே நிலைதான் சுய நலசக்திகளுக்கு துணை போகும் புரியாதவர்களுக்கு ஏற்படும். சக்தி நிறைந்த அதிமுகவை உடைக்க ஆசைப்படும் குள்ள நரிக்கூட்டத்தாரின் நயவஞ்சக சிந்தனைகளைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

ஜெயலலிதாவை அடித்து உதைத்து சேலையைக் கிழித்து எரிந்தபோது இன்றைக்கு அரசியல் பேசி, தர்மம் நியாயம் பேசும் எவரும் சென்று காப்பாற்றவில்லை. வேஸ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கார்டனின் கேட்டில் விடிய விடிய கண் விழித்து பாதுகாத்து நின்றவர்கள் இன்று பேசுகிறார்கள். கேட்பதற்கு எரிச்சல் வருகிறது. அய்யோ அய்யோ என்று அலருகின்றார்கள்.

அதிமுக ஆதரவாளன் என்று நினைக்கலாம். ஆனால் அதுவல்ல உண்மை. தமிழ் நாட்டினை தமிழர் ஆள வேண்டும் அவ்வளவுதான். அரசியலில் ஊழல் துஷ்பிரயோகம் என்பதெல்லாம் நமக்குள்ளே இருப்பது.

இத்தனை நாள் ஏமாந்தது போதும். சூது செய்யும் பகல் வேஷக்காரர்களையும், தன் இனத்தை மட்டுமே உயர் பொறுப்பில் வைத்திட நினைத்திடும் கூட்டத்தாரையும் புரிந்து கொள்ள வேண்டும்.

என் சாமியைக் கும்பிட எனக்கெதுக்கு ஒரு ஆள் என என்று தமிழர்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்கின்றார்களோ அன்று ஆரம்பிக்கும் தமிழர்களுக்கான விடியல். வட இந்தியாவில் ஒவ்வொருவரும் தானே பூஜை செய்யலாம். அங்கிருக்கும் கடவுள் அதை ஒத்துக் கொள்கிறார். ஆனால் தென்னிந்தியாவில் அந்தக் கடவுள் ஒத்துக் கொள்ள மாட்டாரா?

– அனாதி


அனாதிக்கு மேகாவின் வேண்டுகோள்

ஜனவரி 4, 2017

அன்பு நண்பா அனாதி,

எப்போதாவது வந்து ஏதாவது எழுதி வைத்து விடுகிறாய். நமக்கு அரசியல் எல்லாம் செட்டாகாது அனாதி. அரசி இயல் தான் நமக்குச் செட்டாகும்.

சதா இப்போது விஜய் டிவியில் உதட்டைச் சுழித்துக் கொண்டு கிக்காட்டிக் கொண்டிருக்கிறாரே அதைப் பார்ப்பதை விடவா நமக்கு இந்த அரசியல் முக்கியம்?

உன் ரகசிய சினேகிதிகளின் கதைகளை அவிழ்த்து விடு நண்பா? தயவு செய்து இனி அரசியல் பதிவுகளை எழுதாதே. கிளுகிளுப்பாகவே இல்லை.

– மேகா, சென்னை


ஆத்மா சாந்தியடையட்டும்

திசெம்பர் 8, 2016

முன்னாள் முதல்வரும் மனம் கவர்ந்த சிறந்த நடிப்புத் தேவதையும், மனிதாபிமானமிக்கவருமான ஜெ அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

அனாதிக்கும் குஞ்சுவுக்கும் ஒரு உரையாடல்:

”ஏம்பா அனாதி நாளிதழ்களில் ஒருவர் கூட ஆபிச்சுவரி விளம்பரம் கொடுக்கவில்லையே பார்த்தாயா?”

”ஆமாம் அதற்கென்ன?”

”என்னப்பா இப்படி பட்டென்று சொல்லி விட்டாய். அதற்குள்ளாவாகவா மறந்து விட்டார்கள்?”

“அரசியலில் அதிகாரத்துக்கு மட்டுமே மரியாதை குஞ்சு?”

– அனாதி மற்றும் குஞ்சு


சென்னையில் வெள்ளமும் அரசியல்வாதிகளும்

மே 30, 2016

சென்னையில் வெள்ளம் பற்றி பதிவு ஏதும் ஏன் எழுதவில்லை என்றொரு வாசகி மெயிலில் கேள்வி கேட்டிருந்தார். அனாதி பிளாக்கின் வாசகர்கள் அரசியல் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் இந்தப் பதிவு.

வெள்ளம் என்பது இயற்கைச் சீற்றம். அதை மேலாண்மை செய்வது என்பது எவராலும் முடியாது.

தமிழக அரசு வெள்ளப்பிரச்சினையைச் சரியாகத்தான் செய்தார்களா? என்று கேள்வி கேட்டு பதில் சொல்வது என்பது இயலாத ஒன்று. அரசு தன்னால் முடிந்த வரை தன்னிடம் இருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டு சமாளித்திருக்கும். அரசினால் அவ்வளவுதான் முடியும்.

ஆனால் அரசியல்வாதிகள் ஆளும் அரசைக் குற்றம் சொல்லி மக்கள் மத்தியில் வெறுப்பினை விதைக்கும் விதமாகத்தான் நடந்து கொள்வார்கள். எந்த அரசியல்வாதிக்கட்சிகளும் அரசுடன் இணைந்து செயல்பட மாட்டார்கள். ஒவ்வொரு நிகழ்விலும் அரசுக்கு எதிரான கருத்தினைத்தான் வைப்பார்கள். இதுதான் உண்மை. இந்த வெள்ளத்தின் போது அதை மிக அருமையாகச் செய்தது திமுக கட்சி. தற்போது நடந்த சட்டசபைத்தேர்தலின் முடிவுகள் அதைக் காட்டுகின்றன.

ஆகவே இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்படும் போது அரசின் உதவிகள் தாமதமாகத்தான் வந்து சேரும். மக்கள் தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள் என்போர் மக்களைக் கொன்றொழிக்க வந்த சுய நலக்கூட்டம். அவ்வளவுதான் விஷயம்.

ஒரே ஒரு கட்சி, ஒரே ஒரு சின்னம், யாரோ ஒரு வேட்பாளர் என்பது மாற்றம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான மக்கள் பிரதி நிதி சட்டசபையில் மக்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசுவார். இல்லையெனில் இந்தியா என்றும் மாறவே மாறாது.

– அனாதி


செங்கோட்டையனுக்கு பதவி வாங்க – விகடன் உதவி

மே 26, 2016

பத்திரிக்கைத் தர்மம் என்பது பற்றி விகடன் தனது அறிக்கையை வெளியிட்டு இருப்பதைக் கீழே படிக்கவும். மீடியாக்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது இந்தச் செய்தியின் மூலம் உங்களுக்குப் புரிய வரும்.

234 தொகுதியிலும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு கவலைப்படும் விகடன் தோற்றுப் போனவர்களின் நிலையைப் பற்றி எழுதுமா? 234 கோடியாவது தோற்றுப்போனவர்கள் செலவழித்திருப்பார்கள் தானே? அதைப் பற்றி விகடனுக்கு என்ன கவலை? அவர்கள் எல்லாம் போண்டியாகி இருப்பார்களே? அது விகடனுக்குத் தெரியுமா?

செங்கோட்டையனின் மகன் வைத்திருக்கும் கல்லூரி வசூல் பற்றி ஏன் வாயே திறக்கவில்லை இந்த விகடன்? தனது ஆரம்பகால இளம்பிராயத்து வாழ்க்கையில் காவல்துறை கைது செய்தால் 10 தேங்காய்களைக் கொண்டு போய் கொடுத்து விட்டு வெளியில் வந்து விடுவார் இவர் என்று அவரின் கட்சிக்காரர்கள் சிலாகித்துப் பேசுவார்கள். அதுமட்டுமா மிகவும் குறைந்த வயதில் மினிஸ்டர் ஆனவர் இவர். ஆடிய ஆட்டங்களுக்கு அளவேது என்கிறார்கள் அவரது ஒரு சில கட்சிக்காரர்கள். செங்கோட்டையனுக்கு பணப்பிரச்சினை என்று எழுதியிருப்பது சுத்தப் பொய். இந்தச் செய்தியை அம்மாவின் கவனத்துக்குக் கொண்டு சென்று அமைச்சர் பதவி வாங்கிட வேண்டுமென்ற சுய நலத்தால் எழுதப்பட்டது என்றே தெரிகிறது.

அதிமுகவில் யாருக்கும் முக்கியத்துவம் கிடையவே கிடையாது. அங்கு அம்மா மட்டுமே கட்சி, அம்மா மட்டுமே கழகம். எவராவது வளர்ந்து வந்தால் உடனே அனைத்தும் பிடுங்கப்படும் என்று அதிமுககாரர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் ஏழை ஒருவனுக்கும் வாய்ப்புக் கொடுக்கும் கட்சி எதுவென்றால் அது அதிமுகதான்.

அதிமுகவில் விசுவாசமும், நன்றியும், நல்ல செயலும் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கட்சியைப் பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டு தனிகாட்டு ஆட்சி நடத்துவது என்பது திமுகவில் வேண்டுமானால் நடக்கும், அதிமுகவில் நடக்கவே நடக்காது.

அதிமுக என்ன திமுகவா? குடும்பம் குடும்பமாய் தமிழகத்தைக் கூறு போட்டு வைத்துக் கொண்டு தனியாட்சி செய்வதற்கு? அம்மாவின் கழகத்தில் அம்மாவே ராணி. கட்டுப்பாடும், ஒழுங்கும் இருந்தால் வளர்ச்சி அடையலாம். இல்லையெனில் குப்பைக்கூடைக்கும் கூட லாயக்கில்லாதவர்கள் ஆகி விடுவார்கள்.

விகடன் தன் நிலை தவறிப் போய் வெகு நாட்களாகின்றன. மக்களின் ஏகோபித்த ஆதரவினை விகடனின் இந்தச் செயல் இழந்து விடும். ஆனாலும் என்ன? முட்டாள் மக்கள் இருக்கும் வரையில் அரசியலும், சினிமாவும், பத்திரிக்கைகளும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

இனி விகடன் செய்தி :

கொங்கு மண்டலத்தையே ஒருகாலத்தில் அதிர வைத்துக் கொண்டிருந்த செங்கோட்டையன், இப்போது மவுனமாகிவிட்டார். ‘ தேர்தலை எதிர்கொள்ள பணமில்லாமல் கடன் வாங்கித்தான் செலவு செய்தார்’ என புலம்புகின்றனர் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினர்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நேரடி குட்-புக்கில் இடம் பெற்றிருந்தவர் செங்கோட்டையன். தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா செல்லும் இடங்களில், முக்கிய பாயிண்டுகளில் இரட்டை இலை சின்னம் பொறித்த அட்டையைக் கையில் தாங்கிக் கொண்டு நிற்பார். அவர் எந்த இடத்தில் நிற்கிறாரோ, அந்த இடத்தில்தான் ஜெயலலிதா பேசுவார். அந்தளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக வலம் வந்தவருக்கு, கடந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே குடும்பத்தால் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, கார்டன் வட்டாரத்தில் இருந்து தனித்துவிடப்பட்டார். இருப்பினும், கட்சி நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்பதை அவர் தவிர்க்கவில்லை. இந்தத் தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட செங்கோட்டையனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா.

“அவர் அமைச்சராக கொடிகட்டிப் பறந்த காலம் என்பது 91 முதல் 96-ம் ஆண்டு வரையில் மட்டும்தான். முதல்வரின் வெறிபிடித்த பக்தனாகவே இருந்தார் என்பது அம்மாவுக்கும் தெரியும்.  2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அண்ணனுக்கு வேளாண்மைத் துறையை ஒதுக்கினார். அதுவும் சில மாதங்கள்தான். குடும்பப் பிரச்னையைக் காரணம் காட்டி ஒதுக்கி வைத்துவிட்டார் அம்மா. இதற்கு முழுக் காரணமும் தம்பிதுரைதான். அம்மாவின் குட்-புக்கில் அண்ணன் இருப்பதை அவர் விரும்பவில்லை. சொல்லப் போனால் 96-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிதாக எந்தப் பதவியிலும் அவர் இல்லை. இந்தமுறை வேட்பாளராக அறிவித்தபோது, ‘செலவுக்கு என்ன செய்வது?’ என யோசித்துக் கொண்டிருந்தார். பாரம்பரிய சொத்துக்கள் இருந்தாலும், அத்தனையும் வீடு, நிலங்களாக உள்ளன. செலவு செய்வதற்கு பணமாக எதுவும் இல்லை. நீலாம்பூரில் உள்ள கதிர் கல்லூரியும் நல்லமுறையில் இயங்கவில்லை. அந்தக் கல்லூரியும் நஷ்டத்தில்தான் இயங்குகிறது.

இந்தமுறை வேட்பாளராக அம்மா அறிவித்தபோது, பதற்றத்தில்தான் இருந்தார் அண்ணன். ‘ தொண்டர்களுக்கு எதாவது செய்தாக வேண்டும்’ என்பதுதான் அவருடைய கவலையாக இருந்தது. நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்கள் அனைவரிடமும் பத்து லட்சம், இருபது லட்சம் என கடன் வாங்கித்தான் செலவு செய்தார். அவருடைய குடும்ப சொத்துக்களை உறவுக்காரர்கள் பிரித்து எடுத்துக் கொண்டார்கள். அவருக்கென்று நிலங்களும் வீடும்தான் உள்ளது. ரொக்கமாக பணம் எதுவும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் பாரம்பரிய நிலங்கள் சிலவற்றையும் விற்றுவிட்டார். இதை வெளியில் சொன்னால் நம்ப மாட்டார்கள். பெரும் கடன் சுமையோடு தூக்கமில்லாமல் தவித்து வருகிறார். இந்தமுறை அம்மா கைவிட மாட்டார் என நம்பிக்கையோடு இருக்கிறார்” என்கின்றனர்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில், ‘செங்கோட்டையன் வருகிறார்’ என்றாலே கொங்கு மண்டல கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒருவித அலறல் இருக்கும். அந்தளவுக்கு பவர் பாலிடிக்ஸால் கோலோச்சிக் கொண்டிருந்தவர், இப்போது கார்டனின் கண்பார்வைக்காக காத்துக் கிடக்கிறார்.

ஆ.விஜயானந்த்

கட்டுரை உதவி : விகடன் ( நன்றி )


ஸ்டாலினின் மூவ் – ஜெயிக்குமா?

மே 18, 2016

2016 தேர்தலில் இளம் வாக்காளர்கள் அல்லது படித்த வாக்காளர்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற பிம்பத்தை ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம் உடைத்திருக்கிறது எனவும்,

ஜெ போட்ட பிரித்தாளும் கணக்கு அவருக்கே பிரச்சினையாக வரக்கூடும் என்கிற கணக்கும்,

ஜெ அவர்களின் அன்னதானம் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற ஒரு கணக்கும்,

ஜெ வளைத்த தர்மம் மீண்டும் நிமிரும் என்பதால் அவருக்கு தண்டனை உண்டு என்கிற கணக்கும்,

ஸ்டாலினுக்கு ச்சீயெம் போஸ்டெல்லாம் கிடைக்கவே கிடைக்காது என்ற ஜாதக கணக்கும்

இப்படி பலப்பல கணக்குகளுக்கு விடை இன்னும் 24 மணி நேரத்தில் கிடைக்கும்.

பார்ப்போம்…

– அனாதி


%d bloggers like this: