ஸ்பெக்ட்ரம் ஊழலின் முன்னோடியான ஊழல் – தொடரும் ஊழல்கள் – தண்டிக்க முடியாத இந்தியச் சட்டங்கள்

ர்க்காரியா கமிஷன் விசாரித்த ஊழல்களில் வீராணம் ஊழல் மிக முக்கியமானது. ஊழல் செய்வதற்காகவே விதிமுறைகளை மாற்றியதாகவும், அதை எதிர்த்த  அமைச்சர்கள் மிரட்டப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னை நகரில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக வீராணம்  ஏரியில் இருந்து குழாய்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. இதுதான் வீராணம் திட்டம்.

சென்னை நகரிலிருந்து 222 கி.மீ. தூரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது வீராணம் ஏரி. அங்கிருந்து சுத்திகரிக்கப்படாத நீரை எடுத்து, நெய்வேலிக்கு அருகிலுள்ள  வடக்குத்து என்ற இடத்தில் அமைக்கப்பட இருந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து, சென்னை மாநகருக்கு 198 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதித்து, அதன்  மூலமாக குடிநீரை சென்னைக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டம். இதற்காக பல நூறு கோடியில் திட்டம் தீட்டப்பட்டது.

ஐம்பதுகளில், பொதுப்பணிக்கான ஒப்பந்தம் வழங்குவதை ஒரு சில பொறியாளர்கள் முடிவெடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. 1954-ம் ஆண்டு, சுந்தரம் என்ற  ஐ.சி.எஸ். அதிகாரி, இது போல, தனிநபர் ஒருவருக்கு அதிகாரம் வழங்குவது மக்களாட்சி முறைக்கு உகந்ததல்ல என்றும், நான்கு துறைகளின் பொறியாளர்கள் அடங்கிய  குழு ஒன்றை அமைத்து முடிவெடுக்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.

காமராஜர் காலத்தில், கக்கன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, பொறியாளர்கள் குழுவை அமைத்து, அதன் மூலம் முடிவெடுக்கலாம் என்று நடைமுறையைக்  கொண்டு வந்தார். இதுபோல, பொறியாளர்கள் குழுவை அமைத்ததனால்தான் காமராஜர், ‘பெருந்தலைவர்’ ஆனார்.

காங்கிரஸ் ஆட்சி போனதும் தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரானார். ‘எல்லா முடிவையும் பொறியாளர்கள் எடுத்தால், அரசியல்வாதிகள் எ துக்கு இருக்கோம்’ என்று தோன்றியதோ என்னவோ… ‘பொறியாளர்களிடம் கருத்தை மட்டும் கேட்டுக்கொண்டு, முடிவை அரசு எடுக்கலாம்’ என்று புது நடைமுறையை  உருவாக்க நினைக்கிறார்.

இதற்கு நடுவே, வீராணம் குழாய் அமைக்க வேண்டிய திட்டத்தைப் பற்றி பேச்சு கிளம்புகிறது. ‘வீராணம் போன்ற திட்டத்தில் இன்ஜினீயர்கள் கருத்தைக் கேட்டு, முடிவை  நாம எடுப்போம்’ என்று திட்டமிட்டார்.

இது தொடர்பான அரசாணையைத் திருத்தி புதிய அரசாணை வெளிவருகிறது.

குழாய் அமைக்க விரும்புவோர் வரலாம் என்று டெண்டர் வெளியிடப்படுகிறது. இந்த டெண்டரில், ஐந்து நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன. இறுதியில் ‘சத்தியநாராயணா  பிரதர்ஸ்’ என்ற நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. செல்போன் சேவை நடத்தும் நிறுவனங்களை எல்லாம் விட்டுவிட்டு, கட்டுமானப் பணிகளில் உள்ள, யூனிடெக், ஸ்வான்  போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை கொடுத்தவர்களல்லவா? அதே டெக்னிக்தான் இங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

சத்தியநாராயணா நிறுவனத்தோடு ஏறக்குறைய சமநிலையில் இருந்த தாராப்பூர் நிறுவனத்தோடோ, போட்டியிட்ட மற்ற நிறுவனங்களான இண்டியன் ஹ்யூம் பைப்ஸ், கேரளா  ப்ரேமோ பைப் மற்றும் யுனிவர்சல் பைப்பிங் கன்ஸ்ட்ரக்ஷன் போன்ற நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, டெண்டர் கொடுத்த விலையைக் குறைப்பதற்கான எந்த  முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இதற்குப் பிறகு, ‘சத்திய நாராயணா நிறுவனம், கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களை நேரில் ஆய்வு செய்து, அந்த நிறுவனங்களிடம் இத்திட்டத்திற்குத்  தேவையான குழாய்களைத் தயாரிக்கும் அளவுக்கு வசதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கலாம்’ என்று  பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் குறிப்பு எழுதுகிறார்.


இந்தக் குறிப்பை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்சாவிடம் அளிக்கிறார். அவர் தலைமைப் பொறியாளரை அழைத்து, ‘முதலில்,  வேலைக்கான ஆணையை வழங்கிவிட்டு, அதன் பிறகு தகுதி இருக்கிறதா என்று பார்ப்போம். முதலமைச்சர் விருப்பப்படி நடந்து கொள்ளுங்க. அவ்ளோதான்… சொல்லி ட்டேன்’ என்று கூறுகிறார். அதன் பிறகு, இந்தக் கோப்பு, அப்போதைய நிதித் துறைச் செயலாளரிடம் போகிறது.

இப்போது இருப்பதுபோல, ஆட்சியாளர்களுக்கு காது கிழியும் வகையில் ஜால்ரா அடிக்கும் அதிகாரிகள் அப்போது இல்லை. அப்போதைய நிதித்துறைச் செயலாளர்,  கோப்புகளை விரிவாக ஆராய்ந்து  அறிக்கையை அளிக்கிறார். அவர் தனது அறிக்கையில், ‘‘முதலில் இந்நிறுவனங்களின் தொழிற்சாலைகளை நேரில் சென்று ஆய்வு  செய்தால்தான், இவர்கள் கூறும் வசதிகள் இல்லாவிட்டால் டெண்டரை நிராகரிக்க முடியும். மேலும், வெளிநாட்டில் உள்ள தொழிற்சாலையை நேரில் ஆய்வு செய்தால்,  அந்த நிறுவனங்களோடு, நேரடியாக ஒப்பந்தம் செய்து, அரசுக்கான செலவை குறைக்கவும் வழி இருக்கும்’’ என்று கூறுகிறார்.

மேலும், ‘சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம், அது நிறுவ இருக்கும் தொழிற்சாலைக்காக 75 சதவிகிதத் தொகையை வட்டியில்லாத முன்பணமாக வழங்க வேண்டும் என்று  கேட்பது, முறையற்ற செயல். ஆகவே, அனைத்து நிறுவனங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தலாம்’ என்று எழுதுகிறார். இவர் நிதித்துறைச் செயலராக இருந்தால் இவர்  சொன்னதையெல்லாம் கேட்க வேண்டுமா என்ன? இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் அளித்த டெண்டர் தாற்காலிகமாக ஏற்றுக் கொள் ளப்பட்டது என்று முடிவெடுக்கப்படுகிறது.

இதன் பிறகு, பொதுப்பணித்துறை அமைச்சர் சாதிக் பாட்சா, கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வநாதன், மற்றும் தலைமைப் பொறியாளர் உசேன் ஆகியோர் ஈரான்,  மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளுக்குச் சென்று தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதற்காகச் செல் கிறார்கள். அவர்களும் வெளிநாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டாமா?!

நன்றாக ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வந்த தலைமைப் பொறியாளர் உசேன், ‘சுருக்கமான அறிக்கை’ ஒன்றை சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கையும் தொழில்நுட்ப அறிக்கை  போல இல்லாமல், ‘சுற்றுப்பயணக் குறிப்பு’ போல இருந்தது என்று நீதிபதி சர்க்காரியா குறிப்பிடுகிறார். அவர்கள் ஃபேக்டரியை பார்க்கவா சென்றார்கள்? வெளிநாட்டுக்கு  ‘இன்பச் சுற்றுலா’ அல்லவா சென்றார்கள். அப்புறம் எப்படி தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பிக்க முடியும்?

சுற்றுப்பயணம் முடிந்ததும், சத்தியநாராயணா பிரதர்ஸுக்கு ஆணை வழங்கலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது. தாற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட டெண்டர், நிரந் தரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொழிற்சாலை அமைப்பதற்காக 75 சதவிகித முன்பணத்தைவட்டியில்லாமல் வழங்க உத்தரவிடப்படுகிறது. நிதித்துறைச் செயலாளர்  அப்போதும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘முன்பணம் வழங்கக் கூடாது’ என்று கூறுகிறார். ஓரளவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு தனது பணி முடிந்ததாக அவர் நினைத் திருக்கக் கூடும்.

இதுதொடர்பாக நடந்த விசாரணைகளில், ‘‘வீராணம் திட்டத்தில் கருணாநிதி எடுத்த நடவடிக்கை, அதன் நோக்கம் என்ன என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது’’ என்று நீதிபதி  சர்க்காரியா குறிப்பிடுகிறார். மேலும், ‘‘வீராணம் திட்டத்திற்காக முடிந்துபோன ஒரு கோப்புக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டதும், விதிகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டதும்  இத்திருத்தத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது’’ என்கிறார் சர்க்காரியா.

இந்த ஆணையத்தின் முன் சாட்சியளித்த நிர்வாகப் பொறியாளர் சிவராமன், “முதலமைச்சர் விருப்பப்படி சத்தியநாராயணா பிரதர்ஸ் அனுப்பிய டெண்டரை பரிந்துரை  செய்யவில்லை என்றால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். உலகிலுள்ள எல்லா நாடுகளில் இருந்தும் டெண்டர்கள் கேட்ட பிறகு, குறிப்பாக ஒரு டெண்டரை  தாற்காலிகமாக ஏற்றுக் கொள்வதை என்னுடைய 31 ஆண்டுகாலப் பணி அனுபவத்தில் நான் பார்த்ததில்லை. வீராணம் திட்டத்தில்தான் இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டி ருக்கிறது’’ என்று கூறியிருந்தார். இதிலிருந்தே இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒவ்வொருவரும் எப்படி மிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.

சரி! இவ்ளோ கஷ்டப்பட்டு, சத்திய நாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கருணாநிதியும், பொதுப்பணித்துறை அமைச்சர் சாதிக் பாட்சாவும், எதற்காக இப்படி வரிந்து கட் டிக்கொண்டு வேலை பார்த்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறதல்லவா? இதற்கான விடையை அந்நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியநாராயணாவின் மகன், புருஷோத்தம்  தனது அறிக்கையில் விளக்குகிறார். அதை அடுத்த இதழில் காண்போம்!

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டருக்கும், மிஸ்டர் தஞ்சை ஆச்சிமுத்துவுக்கும். பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குமுதம் நிர்வாகம் அனுமதிக்கும் என்ற நம்பிக்கையோடும் இக்கட்டுரை மாத்திரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நிர்வாகம் விரும்பவில்லை எனில் நீக்கப்படும்.

One Response to ஸ்பெக்ட்ரம் ஊழலின் முன்னோடியான ஊழல் – தொடரும் ஊழல்கள் – தண்டிக்க முடியாத இந்தியச் சட்டங்கள்

  1. thendral சொல்கிறார்:

    aathaaadi…..karunaanithi periya “MALAI PAAMBAA” iruppaaru pola irukkae…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: