இந்தியத்தாயும் இந்தியப் பெண்ணும்(18+ மட்டும்)

பிப்ரவரி 28, 2011

அன்பு நண்பர்களே,

இந்தியா ஆன்மீக பூமி என்கிறோம். பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், நம் பூமியினை அன்னை பூமி என்றழைக்கின்றோம். நதிகள் ஒவ்வொன்றுக்கும் பெண்களின் பெயரை வைத்திருக்கிறோம். கற்பு வாழ்க்கை வாழ்கிறோம். தர்மம், நியாயம், நீதி பற்றியெல்லாம் பேசுகின்றோம். ஆனால் உண்மையோ வேறாக அல்லவா இருக்கிறது.

பொய்யும், திருட்டும், கொலையும், கொள்ளையும், ஊழலையும் செய்யும் தலைவர்களை நாம் கொண்டாடுகிறோம். ஊழல் செய்தே, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும் தொழிலதிபர்களை நாம் வாழ்த்துகிறோம். பெண்களைப் போற்றும் நாம் அவளை நிர்வாணப்படுத்தி, கொடுமைப்படுத்தி அனுபவிக்கிறோம். சமூக வாழ்க்கையில் நடைமுறையில் வேறொருவராக காட்சியளிக்கும் நாம், பொதுவில் தூயவனாக நாடகம் போடுகின்றோம். சொல்லும் செயலும் வேறாக இருக்கும் நமக்கு வாழ்வியலில் பிடிப்பு எப்படி வரும். சந்தோஷமான வாழ்க்கையை எப்படி வாழ முடியும்?

இன்றைய காலத்தில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூலமாய் மனிதன் இருக்கிறான். அவனே பிரச்சினைக்கும் காரணகர்த்தாவாய் இருக்கிறான். அவனே பிரச்சினையும் தீர்வாகவும் இருக்கிறான். வாழ்க்கையை சிக்கலில் கொண்டு போய் சிக்க வைத்து விட்டு, கார்ப்பொரேட் சாமியார்களிடம் நிம்மதி தேடி ஓடுகின்றான்.

இதோ கீழே பாருங்கள். மனிதனின் சொல்லும் செயலும் வேறு வேறாக இருப்பதை. இதை விட வேறு உதாரணம் உங்களுக்குத் தேவையா?

கொடுமை…

– பஞ்சரு பலராமன்

 


காமெடி பீஸ் : தேர்தல் கமிஷன்

பிப்ரவரி 28, 2011

தமிழக தேர்தலில் பலரும் எதிர்பார்த்த கூட்டணிகள் அமைந்து வருகின்றன. அதே போல எதிர்பார்த்த ரிசல்ட்டும் கிடைக்கும் என்றே நம்புகிறோம். நாங்கள் முன்பே காங்கிரஸ் திமுகவை அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபடும் என்று எழுதி இருந்தோம். குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருந்த திமுகவை விட, உலகெங்கும் குதிரையோட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்வதை நம்ப நாங்கள் தயாரில்லை. ஸ்பெக்ட்ரம் திமுகவின் சமாதி என்று காங்கிரஸ் முடிவு கட்டி இருக்கிறது போலும்.

இதோ தேமுதிக அதிமுகவுடன் இணைந்து விட்டது. காங்கிரஸ்ஸுக்கு திமுக தலைவர் வைத்த ஒவ்வொரு செக்கிலும் சிக்காமல், காங்கிரஸ் இன்னும் திமிறிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் திமுகவினருக்கு பெரும் ஆப்பு தயாராக இருக்கிறதோ என்று கூட தோன்றுகிறது. வசமாய் சிக்கிக் கொண்டது திமுக என்றும் கருத வேண்டியிருக்கிறது.

காங்கிரஸ்ஸூக்குத் தேவை 80 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி, ஆறு அமைச்சர்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் உலா வருகின்றன. ஆனால் அது தற்கொலைக்குச் சமானம் என்று திமுக தலைவர் சொன்னதாகவும் செய்திகள் வருகின்றன.

இத்தைகைய ஒரு சூழலில் எதிர்கட்சியினரின் அணி வகுப்பு, திமுகவினருக்கு மிகுந்த அச்சத்தை தருவதாகவும், அம்மா ஜெயித்து வந்தால் திமுகவினரின் கதி அதோகதியாகி விடும் என்று அதிமுகவினர் சொல்கின்றார்கள். திமுகவின் பெருந்தலைகளுக்கு எதிரான அத்தனை வழக்குகளும் இப்போதே அதிமுக தலைவியிடம் வந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். என்ன நடக்குமோ தெரியாது?

ஆனால் தேர்தல் கமிஷனின் காமெடிகள் தான் எரிச்சலை ஊட்டுவதாய் இருக்கிறது.

பணப்பட்டுவாடாவை யார் தடுப்பது? என்று தேர்தல் கமிஷனைக் கேளுங்கள். அவர்கள் போலீஸாரை காட்டுவார்கள். ஆனால் போலீஸாரே அந்த வேலையைச் செய்தால்,  தேர்தல் கமிஷனால் அதைத் தடுக்க முடியுமா? இப்படிப்பட்ட ஒரு அதிகாரத்தை வைத்திருக்கும் தேர்தல் கமிஷன் ஒரு காமெடி பீஸ் தானே?

இதுவரை தேர்தலில் அத்துமீறல்களே நடக்கவில்லையா? ஏதாவது ஒரு கடுமையான நடவடிக்கையாவது இந்த தேர்தல் கமிஷன் எடுத்ததா? பத்திரிக்கைகள் அனைத்தும் ஆதாரங்களைக் கொட்டினவே திருமங்கலம் தேர்தலில். கமிஷன் என்ன செய்து கிழித்தது?  கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வீராப்பு பேசி வருகிறது தேர்தல் கமிஷன்.

பணக்கட்டுகள் ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு வெகுபத்திரமாய் பதுக்கப்பட்டிருப்பதாகவும், அது சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் படி அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாகவும் அதிகார வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். இருப்பினும் மக்கள் காசினை வாங்கிக் கொண்டு இவ்வளவுதானா என்று கேட்கப் போகின்றார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்களாம். ஆக இத்தேர்தல் திமுகவினரை திகிலடையச் செய்யும் தேர்தலாக அமையப்போகிறது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இந்த திகிலில் காமெடி பீஸ் : தேர்தல் கமிஷன்.

– பஞ்சரு பலராமன்


சினிமா வாழ்க்கை

பிப்ரவரி 27, 2011

சினிமாவை நம்பிய பலரில் ஒரு சிலரே வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கின்றார்கள். அதில் மிகவும் பாவப்பட்டவர்களாய் இருப்பது தயாரிப்பாளர்கள் தான். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் சென்னையில் எங்கு திரும்பினாலும் நடிக, நடிகைகளின் வீடுகளும், இயக்குனர்களின் வீடுகளும் பிரம்மாண்டமாய் இருக்கும். இது மணிரத்னம் வீடு, இது இயக்குனர் சங்கர் வீடு என்றுச் சொல்வார்கள். ஆனால் எந்த தயாரிப்பாளருக்காவது நிரந்தர வீடு என்று ஒன்றினைக் காட்ட முடியுமா? ஒரு சிலரைத் தவிர பெரும்பாலும் இருக்காது. ஏன் இந்த நிலைமை?

இயக்குனர்களும், நடிகர்களுமே காரணம் என்று தயாரிப்பாளர்கள் சொல்வார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் இல்லாதவர்களாய் குடிக்கும், குட்டிக்கும் அதிகப்படியான காசுக்கும் ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் தான் நடு ரோட்டில் நிற்கின்றார்கள். புத்திசாலிகளைக் கண்டுபிடித்து அவர்களை தன்னோடு சேர்த்துக் கொள்ளும் தயாரிப்பாளர்கள் வெற்றியைக் குவிக்கின்றார்கள். ஒன்றுக்கும் உதவாத வெத்து வேட்டுகளை நம்புவர்கள் நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.

ஒவ்வொருக்கும் ஒரு விதமான விலையை சினிமாவில் சொல்கின்றார்கள். அது பெரும்பாலும் குடி அல்லது குட்டியாய் இருக்கிறது.

சினிமாவில் இருக்கும் சிலர் பெண் மீது மோகம் கொண்டலையும் பித்தன்களாய் திரிவதையும் சினிமா உலகத்தார் அடிக்கடி கிசுகிசுப்பார்கள். தமிழில் மிகப் பிரபலமான இயக்குனர் ஒருவர் தன் படங்களில் நடிக்கும் நடிகையை அடுத்த படத்தில் நடிக்க வைக்க மாட்டார். ஏனென்றால் அந்த நடிகை அவரின் அடுத்த படத்தில் நடிக்க வர மாட்டார் எத்தனை கோடிகள் கொட்டினாலும். அந்தளவுக்கு செக்ஸில் வன்முறையை பிரயோகப்படுத்துவாராம். இந்த இயக்குனரின் காரியத்தால் ஒரு நல்ல குடும்பம் விவாகரத்து வரை சென்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சினிமா உலகில் நடக்கும் அதிபயங்கரம் மந்திர தந்திரம் சூனியம் வைப்பது எல்லாம் வெகு சாதாரணமாய் நடக்கிறது என்றுச் சொல்கின்றார்கள்.

எது எப்படிப் போனாலும் சூதும், வாதும் நிரம்பி ததும்பி வழியும் நரகத்தின் கொட்டிலாய் சினிமா உலகத்தின் மறுபக்கம் தெரிகிறது. ஆனால் அது ஒரு ஆபத்தான மிருகங்கள் அலையும் ஒரு செங்கடலாய் எனக்குத் தெரிகிறது. கடலில் பயணம் செய்ய விரும்புவோர் எதிர்ப்படும் ஆபத்துக்களை சந்தித்து மீள வேண்டும் அல்லது மரணிக்க வேண்டும்.

– குஞ்சாமணி


பூலோக சொர்க்கம் எங்கே?

பிப்ரவரி 24, 2011

அலாரம் , வாட்டர் ஹீட்டர் சுடு நீரில் பாத்டப்பில் குளியல், பாடி ஸ்பிரே தூவ, அயர்ன் செய்த உடுப்புகள், பாக்கெட் பாலில் காஃபி, மின் விசிறி, பவுடர், மேக்கப், லிப்ஸ்டிக், இட்லி, உரம் வளர்த்த காய்கறிகள், எண்ணெய் உணவுகள், லெதர் செருப்பு, கார், செல்போன், வாட்ச், லேப்டாப், கார், பைக் என்று நகர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நவ நாகரீக மனிதர்களுக்கு இன்று வரை புரியவே புரியாத, தெரியவே தெரியாத பூலோக சொர்க்க வாழ்க்கை பற்றிய பதிவுதான் கீழே வர இருப்பது.

கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

http://www.thesundayindian.com/article.php?category_id=32&article_id=13

இது சண்டே இந்தியனில் வெளியான ஒரு கட்டுரை. படித்து விட்டு பெருமூச்சு விடுங்கள். ஏனென்றால் நாமெல்லாம் வாழ்வது மெட்டீரியல்ஸ் வாழ்க்கை. இவர்கள் வாழ்வது இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. நம் வாழ்க்கை சிறந்ததா? இல்லை இவர்களின் வாழ்க்கை சிறந்ததா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். சொர்க்கம் என்பது நோயின்றி வாழ்வது என்பார்கள். அது நகரத்தில் இருக்கிறதா இல்லை இங்கு இருக்கிறதா என்பது தான் கேள்வி.

– அனாதி

நன்றி : சண்டே இந்தியன்

பளிங்கு போன்ற ஒரு கிராமம்

மாசுபட்ட இந்தியாவில் தூய்மைக்கோர் கலங்கரைவிளக்காக இருக்கிறது மேகாலயா மாநிலத்தின் மாலின்னாங் என்ற கிராமம். ஆசியாவின் தூய்மையான கிராமம் என்றழைக்கப்படும் இக்கிராமத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் துலால் மிஸ்ரா

துலால் மிஸ்ரா | ஜனவரி 23, 2011 17:12

வேகமாக வளர்ந்துவரும் இந்தியா உலகம் மாசுபடுதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கி லிருந்து 90 கிமீ தூரத்திலுள்ள மாலின்னாங் என்ற கிராமம் இதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்த கிராமத்தை டிஸ்கவர் இந்தியா பத்திரிகை 2003&ஆம் ஆண்டு ஆசியாவின் ஆகத் தூய்மையான நகரம் என்று அறிவித்தது.
உலர்ந்த சுத்தமான சாலைகள்; ஓரமாக ஒதுக்கப்பட்டுள்ள மரத்திலிருந்து விழும் இலைகள் கவனத்தை ஈர்க்கின்றன. ‘‘எங்கள் கிராமமக்கள் குப்பைகளை தெருவில் போட மாட்டார்கள். அவை குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டு இயற்கை உரமாகின்றன” என்கிறார் தசஇ&யிடம் பேசிய கிராமத்தின் தலைவர். இங்கு பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. ‘‘பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மண்பானை களையும் காகிதப்பைகளையும் பயன்படுத்துகிறோம்’’ என்கிறார் இக்கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ரனிலா.
மூன்று மணி நேரத்திற்கொரு முறை கிராமத்தின் வீதிகள் பல்வேறு குழுக்களால் சுத்தம் செய்யப்படு கின்றன. ‘‘இந்த பூமியை அழகாக வைத்திருக்கவே கடவுள் நம்மை அனுப்பியிருக்கிறார். அதுவே கடவுளை வழிபடுவதற்கான வழி’’ என்கிறார் வீதிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களுள் ஒருவரான 60 வயதாகும் பெண். கிராமத்தின் 100% பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். மாலின்னாங்குடன் ஒப்பிடுகிற போது மேகாலயா மாநிலம் மிகவும் பின்தங்கியுள்ளது.
இங்கு புகைப்பதும், பிற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களிடமும், இங்கு வருகை தருபவர்களிடமும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் செயின்ட் எட்மன்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு மொத்தம் 82 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு குழந்தை பிறக்கிற போதும் ஒரு மரம் நடப்படுவதுடன் அது பேணி வளர்க்கப்படுகிறது. ‘‘இந்தியாவின் பல பகுதிகளுக்கு நான் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் இதைப் போன்ற ஒரு தூய்மையாக பாதுகாக்கப்படும் ஊரைப் பார்த்ததேயில்லை. இங்குள்ள மக்கள் நேர்மையானவர்களாக, கடும் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். சுற்றுலாபயணிகளை மரியாதையாக நடத்துகிறார்கள்’’ என்கிறார் இங்கு சுற்றுலா வந்திருக்கும் கொல் கத்தாவைச் சேர்ந்த ஷியாமல் கோஷ். வெளிநாட்டு சுற்றுலாவாசிகளும் வருகை தருகிறார்கள். எல்லா வீடு களுமே மரத்தால் கட்டப்பட்டவை.
மரத்தின் வேர்களைக் கொண்டு கட்டப்பட்ட தனித்துவம் வாய்ந்த பாலம் ஒன்று இங்குள்ளது. 15 வயதான ஃபுல்மூன் கோன்ஜிரா டிக்கெட்டுகளை எண்ணுகிறான்…. 44 இருக்கிறது. ஒரு டிக்கெட் விலை ரூ.5. மொத்த வசூல் ரூ.220.  நேற்று 47 டிக்கெட்டுகள் விற்றன. உயிருள்ள  மர வேர்களாலானது இப்பாலம். இது 40  அடி அகல ஆற்றை  இணைக்கிறது. குளிர்காலத்தில் ஒரு  அடி  தண்ணீர்தான் இதில் இருக்கும். மழைக்காலத்தில் 14 அடிக்கு தண்ணீர் பாய்ந்தோடும். ஆறு அடி அகலமான இந்த பாலம் ரப்பர் மரங்களின் வேர்களைக் கொண்டு 150 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருக் கிறது. மழைக் காலத்தின் போது ஆற்றில் தண்ணீர் கட்டற்று ஓடுவ தால் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு இந்த ஓடையைக் கடந்து செல்வது முடியாத காரியம். ஆகவே 150 வருடங்களுக்கு முன்னர் மக்கள் இந்தப் பாலத்தை உருவாக்கினர் என்கிறார் ஒரு கிறித்துவப் பாதிரியார். படகுகளை ஒன்றுடன் ஒன்று கட்டி ஆற்றின் குறுக்கே பாலத்தை உருவாக்க முயன்றார்கள், ஆனால் இந்த படகுப் பாலம் தாக்குபிடிக்க முடியவில்லை. ஆகவே இயற்கையான வேர்களைக் கொண்டு ஒரு பாலத்தை அவர்கள் உருவாக்கினர் என்கிறார் அவர். மூங்கில்களைப் பயன்படுத்தி இரு ரப்பர் மரங்களின் வேர்களை இணைத்து உருவாக்கினர்.
இந்த வேர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன. இவை மரணிக்கிற போது பாலம் உடைந்து போகும். இக்கிராமத்தை சுற்றியிருக்கும் காடுகள் பல ஆயிரம் வருடங்களாக மனிதர்களால் தொடப்படாது பாதுகாக் கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் எப்படி இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டும் என்பதை அறிந்த மனிதர்கள் இவர்கள்.

 


கொடூரத்தின் விளையாட்டு

பிப்ரவரி 22, 2011

மனிதர்களை சந்தோஷப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை பேணவும் விளையாட்டுகள் இதுகாறும் நடத்தப்பட்டு வந்தன. விளையாட்டுக்களின் போது சந்தோஷமும், மகிழ்ச்சியும் பார்வையாளார்களுக்கு ஏற்படும். இப்படிப்பட்ட விளையாட்டுகளை இன்றைக்கு பிசினஸ் ரீதியாய், விளையாட்டின் முடிவை முன்னரே தீர்மானிக்கும் படியும் நடத்தி வருவது விளையாட்டின் கொடூரத்தை நமக்கு காட்டுகிறது.

கிரிக்கெட் இன்றைய நவ நாகரீக மனிதர்களின் ட்ரேட் மார்க்கான விளையாட்டாய் மாறி விட்டது. இவ்வாறு மாறுவதற்கு முழு பொறுப்பும் மீடியாவையேச் சாரும் என்று குற்றம் சாட்டலாம். அந்தளவுக்கு கிரிக்கெட்டை பிரபலப்படுத்தி, தன் விளம்பர வருவாயைப் பெருக்கிக் கொள்ள மீடியா மாஃபியாக்கள் மக்களை மூளைச் சலவை செய்து வருகின்றன. தன் விளம்பர வருவாயை பெருக்கிக் கொள்ள ஏதாவது ஒருவர் வேண்டும். அதற்கு மீடியா மாஃபியாக்கள் எவரோ ஒருவரை முன்னிலைப் படுத்தி, மக்களிடம் அவரைப் பற்றிய மாயமான பிம்பத்தை உருவாக்கி விடுகின்றன. அதுமட்டுமா, மக்களை அவர்களின் பின்னாலே அலையவும் விடுகின்றன. அதற்கொரு உதாரணம் எந்த வித அதீத திறமையும் அற்ற “சச்சின் டெண்டுல்கர்”. இவருக்கு கிடைத்த சான்ஸ் போல இந்திய டீமில் இருந்தவர்களுக்கு கிடைத்திருந்தால் பல உலக சாதனைகளை செய்திருப்பார்கள். ஆனால் சச்சினுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பலருக்கும் கிடைப்பதில்லை. ஏன் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு விடை கிடைக்கலாம்.

அடுத்து, மீடியாவை நான் ஏன் மாஃபியாக்கள் என்று குற்றம் சொல்கிறேன் என்பதற்கு ஒரு சில உதாரணங்களைப் பார்க்கலாம். அஜய் ஜடேஜா, அஜாருதீன் போன்றவர்கள் மேக்ஸ் பிக்சிங்கில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாய் இந்தியா டீமிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் அனைத்து டிவி சானல்களும் இவர்களை அழைத்து வந்து ஷோக்களை நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.இது என்னவிதமான லாஜிக் என்று அந்த மீடியாக்கள் சொல்லுமா? சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தேவை விளம்பரத்திற்கு ஒரு ஐகான் அதாவது வெத்து வேட்டு டம்மி பீஸ்.

இந்தியாவே ஆவலுடன் ஜெயிப்பார்கள் என்று டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, முன்பே தீர்மானித்தபடி விளையாட்டின் தீர்ப்பினை முடிப்பது அத்தனை மக்களையும் ஏமாற்றி, இந்திய தேசத்திற்கு தேசத்துரோகத்தைச் செய்தவர்களை அழைத்து வந்து மீடியாக்கள் ஷோக்கள் நடத்துகின்றன என்றால், இந்த வகை மீடியாக்கள் அரசியல்வாதிகளை விட மோசமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நம்பிக்கை துரோகத்தை விட மேலான துரோகம் ஏதும் இருக்கிறதா இவ்வுலகில். மரணம் ஒரு நிமிட வலி பின்னர் விடுதலை கிடைத்து விடும். ஆனால் நம்பிக்கைத் துரோகத்தின் வலியை காலமெல்லாம் அனுபவிக்க வேண்டுமே. அது மரணத்தை விட மேலானது அல்லவா. இத்தகைய நம்பிக்கைத் துரோகத்தைச் செய்த கிரிக்கெட்டர்கள் இன்றைக்கு மகிழ்ச்சியாய் வாழ்கிறார்கள். அவர்களை முன்னிலைப்படுத்தி மீடியா மாஃபியாக்கள் சம்பாதிக்கின்றார்கள். இது அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். மக்கள் இன்றைக்கும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரால் என்ன செய்ய இயலும் என்று நினைக்கின்றீர்கள்? எதுவும் செய்ய இயலாது அது மக்களின் முட்டாள்தனத்தின் முன் நடவாத ஒன்று.

இதுபற்றிய ஒரு பதிவினை நாங்கள் முன்னே எழுதி இருந்தோம். அதன் இணைப்புக் கீழே இருக்கிறது.

இந்தியாவில் நடந்த மேட்ச் ஃபிக்சிங் என்னவாயிற்று?

கிரிக்கெட் காலத்தில், சென்னை மட்டுமல்லாது இந்தியாவின் பிரபல பார்களில் சூதாட்டங்கள் கொடி கட்டிப்பறக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் பெட் கட்டப்படுகின்றன. பெரும் பலம் உள்ளவர்களால் வெற்றிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. சரியான கூட்டணியுடன் இணையும் பெட் தாரர்களுக்கு கோடி கோடியாய் கொட்டுகிறது. தவறான கூட்டணியில் இணைபவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதையெல்லாம் நன்கு தெரிந்த அரசு ஏதும் செய்யாமலிருப்பது வாடிக்கையானது.

கிரிக்கெட் என்பது உண்மையில் கொடூரத்தின் விளையாட்டு என்பதில் யாருக்கேனு சந்தேகம் இருக்கிறதா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கிரிக்கெட் – ஒரு கொடூரம்.

– பஞ்சரு பலராமன்


குட்டிச்சுவராகிய தமிழகம் : திமுக

பிப்ரவரி 17, 2011

தமிழகம் முற்றிலுமாய் சீரழிக்கப்பட்டு விட்டதை ஆனந்த விகடன் கட்டுரை உங்களுக்கு ஆதாரத்துடன் சொல்லும். அதுமட்டுமல்லாமல், இந்தியாவையே கொள்ளையடித்த சம்பவங்களையும் நாமெல்லோரும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். இதற்கெல்லாம் யார் காரணம்? என்பதை ஒரு நிமிடம் யோசித்தீர்கள் என்றால் அதுவே இக்கட்டுரையை இங்கு பதிவேற்றியமைக்கான நன்மையாக ஆகும். மிகுந்த வேதனைகளுடன் – பஞ்சரு பலராமன்

நன்றி : ஆனந்த விகடன்

 

‘கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்பதும் பழங்காலத்து மொழி.  தமிழ் நாட்டையே இந்தக் கடன், தலைகீழாகக் கவிழ்க்கக் காத்திருக்கிறது.  10 ஆயிரம் கைமாற்றாக வாங்கியவர்கள், திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் பதறிப் போவதும்… வாங்கிய வீட்டுக் கடனை ஒரு மாதம் ஒழுங்காக அடைக்க முடியாமல் போனால், வங்கிக்காரர்களைப் பார்த்துப் பதுங்க ஆரம்பிப்பதும், மத்திய தர வர்க்கத்தின் அன்றாட வழக்கம். கிராமப்புறங்களில், கூட்டுறவுக் கடனை வசூலிப்பதற்காக அதிகாரிகள் வரும்போது, வயல் காடுகளை நோக்கி ஓடிப் போய் விவசாயிகள் பதுங்கிக்கொள்வார்கள். அவர்களைப் பிடிக்க நிலங்களுக்குள் அதிகாரிகளும் ஓடுவார்கள். இதைவைத்து எழுதப்பட்ட கி.ராஜநாராயணனின் ‘கதவு’ கதை கண்ணீர் வரவைக்கும். அசலையும் வட்டியையும் செலுத்த முடியாத விவசாயியின் வீட்டில் இருந்த நிலைக் கதவை அதிகாரிகள் எடுத்துச் செல்வதை உருகி உருகி எழுதி இருப்பார்.

‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றக் கெடும்’ என்ற வள்ளுவரின் குறளுக்குத் ‘தன் செல்வத்தின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை பல வளமும் இருப்பதுபோல் தோன்றி, இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்’ என்று மு.வ. முதல் மு.க. வரைக்கும் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் வெளிவந்துஇருக்கும் ஒரு செய்தி, பதறவைக்கிறது!

தமிழ்நாட்டின் இன்றைய மொத்தக் கடன் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. சரியாகச் சொன்னால், 1,01,541 கோடி! ‘நான் கடன் வாங்குறதும் இல்ல… கொடுக்கிறதும் இல்ல’ என்று சில ஜென்டில்மேன்கள் சொல்வார்கள். நீங்கள் வாங்காவிட்டால் என்ன, உங்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் வாங்குகிறோமே என்று அரசாங்கம் செய்தது எல்லாம்  இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஊரெல்லாம் கடன் வாங்கிக் கொண்டு… யாரெல்லாம் கடன் தருவார்களோ, அவர்கள் அத்தனை பேரிடமும் கடன் வாங்கிக்கொண்டு, ‘தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உறுதியான பொருளாதார வளர்ச்சித்  திட்டங்களின் காரணமாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது’ என்று நிதி அமைச்சர் அன்பழகன் எப்படிச் சொல்கிறார் என்றே தெரியவில்லை.

இன்றைய தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனையாகச் சொல்லப்படுவது, இலவசங்கள்தான். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இலவசங்களாகவோ, மானியமாகவோ வழங்கி னால், அதை மக்கள் நலத் திட்டம் என்று நினைத்து, தொடர்ச்சியாகச் செய்துவருகிறார்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பது இதில் கவர்ச்சிகரமான முதல் திட்டம். மார்க்கெட் மதிப்பில்   ஏழுக்கு விற்பனையாகும் அரிசிக்கு  அரசாங்கம்  ஆறு கொடுத்து விடுகிறது. மீதி  ஒன்றுதான்  பொது மக்களின் பாக்கெட்டில் இருந்து தரப்படுகிறது. இந்த அரிசியை வாங்கியவர்கள் அனைவரும் சாப்பிடுகிறார்களா என்றால், இல்லை. அதிக விலைக்கு வெளியில் விற்று, சம்பாதிப்பவர்களும் உண்டு. அல்லது மாவு மிஷின் ஆட்கள் இதை மொத்தமாக வாங்கி, அரைத்து விற்றுச் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். இந்த அரிசியை வாங்குபவர்களில், அதிகபட்சம் 25 சதவிகிதம் பேர்கூட இதைப் பொங்கிச் சாப்பிடவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அடுத்த கவர்ச்சித் திட்டம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. 80 லட்சம் குடும் பங்கள் வரை இந்த கலர் டி.வி-யை வாங்கி இருக்கிறார்கள். இதை வைத்துப் பார்த்தால், 2006-க்கு முன்னால் தமிழ்நாட்டில் முக்கால் சதவிகித வீடுகளில் டி.வி-யே இல்லையா என்ன? இருக்கும் வீடுகளுக்கே இவர்களும் கொடுத்தார்கள். ஒரே வீட்டில் இரண்டு மூன்று டி.வி-க்கள் வரை இதனால் குவிந்தன. இவையும் அதிகபட்சம்  3,000 வரை விலை போனது.

நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை அநியாயமாக எகிறியது. விலை ஏன் திடீரென உயர்கிறது, அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்றெல்லாம் ஆலோசனை செய்யாமல், நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் மளிகைப் பொருட்களை அரசாங்கம் வழங்கியது. கலர் டி.வி-யைப்போலவே இலவச எரிவாயு இணைப்பும் அடுப்பும் தருவது தி.மு.க-வை வெற்றி பெறவைத்த வாக்குறுதிகளில் ஒன்று. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ மற்றும் ‘கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டம்’ ஆகிய இரண்டும் மக்களை ஏக்கப் பார்வை பார்க்கவைத்துள்ளன. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால், பொதுமக்கள் அடைந்த பயனைவிட, தனியார் மருத்துவமனைகள் அடைந்த பயன்கள்தான் அதிகம். தேவை இல்லாமல் ஆபரேஷன்கள் செய்கிறார்கள் என்று ஒரு புறமும்… இன்று ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு அரசாங்கம் தரும் இன்ஷூரன்ஸ் பணம் சொற்பமானது என்று மறுபுறமும் கவலை ரேகைகள் படர்ந்து வருகின்றன. கான்கிரீட் வீடுகள் கட்ட அரசாங்கம் தரும்  75 ஆயிரம், இன்றைய நிலையில் நிலம் தோண்டி சுற்றுச் சுவர் எழுப்புவதற்குக்கூடப் போதுமானது அல்ல. இப்படிப்பட்ட இலவசத் திட்டங்களுக்காகத்தான் கோடிக்கணக்கான பணத்தை அரசாங்கம் கடனாக வாங்குகிறது.

”கடன் வாங்காதே என்று சாதாரணமாக எல்லோரும் சொல்வார்கள். ஆனால், இந்தக் கடனில்தான் தமிழகம் வாழ்கிறது” என்று சொல்கிறார் நிதி அமைச்சர். ”இம்மாதிரியான கடனால் தமிழகம் வாழவில்லை. தி.மு.க-தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம்… இதைத் தருவோம்… என்று வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. இலவசங்களால் நிரம்பிய அந்த அறிக்கைக் குத்தான், ‘தேர்தல் கதாநாயகன்’ என்று நிதித் துறையில் கரை கண்ட ப.சிதம்பரம் பட்டமும் கொடுத்தார். அத்தனைப் பொருட்களையும் அரசாங்கமே கொடுத்துவிடும் கம்யூனிச சமுதாயத்தை நோக்கிய பயணமாக இதைக் கருணாநிதி பார்த்தது காலத்தின் கோலம்.

”இலவசம் என்பது கேலிக்கு உரியதல்ல. ஒரு காலத்தில் இலவசம் எவ்வளவு பெருமைக்கு உரியதாக இருந்தது தெரியுமா? மேல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு தான தர்மம் கொடுப்பதுதான் இந்த உலகத்திலேயே பெரிய புண்ணியமாகச் சொல்லப்பட்டது. ஆக, மேல் சாதிக்கு தான தர்மம் கொடுத்தால் சரியானது. ஏழைகளுக்குக் கொடுத்தால் அது கேலியா?” என்று நிதி அமைச்சர் அன்பழகன் கேட்கிறார். அரசாங்கம் இப்போது வழங்கும் அத்தனை இலவசங்களும் சலுகைகளும் ஏழை களுக்கு மட்டும்தான் போய்ச் சேர்கின்றனவா? ஆளும் நாற்காலியைப் பிடித்திருக்கும் ஒரு கட்சி, தனக்கு வாக்கு அளித்த மக்களுக்கு, அல்லது வாக்களிக்கப் போகும் மக்களுக்குத் தரும் மறைமுக ‘லஞ்சமாகவே’ இந்த இலவசங்கள் இருக்கின்றன என்பதை யாரால் மறுக்க முடியும்? ”ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இவை அனைத் தையும் நிறுத்திவிடுவார்” என்று துணை முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராகச் சொல்லி வருவதே உண்மைக் காரணத்தை உணர்த்திவிடுகிறது.

கருணாநிதியைப் பற்றி கேள்வி கேட்டால், ஜெயலலிதா பற்றி பதில் சொல்வதுதான் இன்றைய பாணி. ‘ஒரு லட்சம் கோடி கடன் வைத்து இருக்கிறீர்களே? இது நியாயமா?’ என்று எதிர்க் கட்சிகள் சட்டசபையில் கேள்வி கேட்டார்கள். ‘ஜெயலலிதாவும் அவரது ஆட்சியில் கடன் வாங்கத்தான் செய்தார்’ என்று அன்பழகன் பதில் அளித்துள்ளார். 2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை விட்டு விலகும்போது, வைத்துவிட்டுப்போன கடன்  28 ஆயிரம் கோடி.

2006-ம் ஆண்டு ஜெயலலிதா பதவி விலகும் போது, அதை 56 ஆயிரம் கோடியாக மாற்றினார். கருணாநிதியின் ஆட்சிக் காலம் இப்போது முடியும்போது, அது ஒரு லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. வாங்கிய கடனைக் கட்டவில்லை, அதற்கான வட்டியும் அபராத வட்டியும் செலுத்தவில்லை, மேலும் புதிதாகக் கடன் வாங்கியிருக்கிறார்கள். இந்த மூன்றும் சேர்ந்து தான் எகிறியிருக்கிறது.

”உணவு மானியமாக 4,000 கோடி போய்விடுகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு 2,632 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்துக்கு மான்யம்  1,681 கோடி, முதியோர் பென்ஷனுக்காக 1,379 கோடி. இப்படியே ஆண்டுதோறும் செலவு கூடிக்கொண்டே போவதால்தான், பழைய கடன்களை நம்மால் கட்டவும் முடியவில்லை. இவை எதுவும் லாபம் வரக் கூடிய தொழில்கள் அல்ல. அடுத்த ஆண்டுக்கு மறுபடியும் கடன் வாங்கியே இதற்கும் ஒதுக்க வேண்டியிருக்கிறது” என்று நிதித் துறை அதிகாரி சொல்கிறார்.

மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள பொறுப்புரிமைச் சட்டத்தின் படி, ஒரு மாநில அரசாங்கம் அதன் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்துக்கு மேல் கடன் வாங்கக் கூடாது என்று இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் தமிழ்நாடு தாண்டிவிட்டது. தேர்தல் நெருங்கி வருவதால் பயம் அதிகமாகிறது. கிரைண்டர் தருவோம், மிக்ஸி தருவோம்… என்று எந்தக் கட்சி வாக்குறுதி தந்தாலும், அது இலவசம் அல்ல. உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரைச் சொல்லி கடன் வாங்கித்தான் தருகிறார்கள்.

இவர்கள் போதாது என்று மத்திய அரசாங்கம் வாங்கும் கடன் கணக்கு மலைப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் சமீபத்திய கடன்  31 லட்சத்து 6 ஆயி ரத்து 322 கோடி. சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம்  38 ஆயிரம் என்று வைத்துக்கொண்டால், அவனது 10 மாதச் சம்பளம் கடனாக உள்ளது என் கிறார்கள்.

‘மன்மோகன் சிங்கைவிட நான் பரவாயில்லை’ என்று கருணாநிதி சொல்லிக்கொள்ளலாம்.

நமக்கென்ன பேசவா தெரியாது!

 


இந்தியத் தாயின் அரும்புதல்வர்கள்

பிப்ரவரி 16, 2011

 

ஒரு தமிழனால் இந்தியாவே கொள்ளையடிக்கப்படும் என்று நம்ப வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். ஒவ்வொரு தமிழனின் வரலாற்றிலும் யாராலும் நீக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். வடக்கில் இனி தமிழனுக்கு மரியாதை இருக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியாகி விட்டது. ஊழல், ஊழல், ஊழல் என்று தமிழர் செய்திருக்கும் அட்டூழியம் பதற வைக்கிறது. ஸ்பெக்ட்ரம் பணத்தில் டிவியெல்லாம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் உலகமே பதறிய குண்டு வெடிப்பை செய்த தீவிரவாதியுடன் நட்புக்கொண்டவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டினையும் கொடுத்திருக்கிறார்கள். எவன் எக்கேடு கெட்டால் என்ன, எனக்குத் தேவை பணம் என்று இந்தியாவை அடகு வைத்திருக்கிறார் இந்தத் தமிழர்.

தமிழனை தலைகுனிய வைத்த, தமிழர்கள் பெருமைகளை அழித்தொழித்த சாதனையைச் செய்தவர் ஒரு தமிழர் என்று நினைக்கையில், தமிழர் பாரம்பரியம், தியாகம் எல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் கேலிக்குரியதாகி விட்டது. காமராஜரிடம் மண்டியிட்ட வடக்கு பெருந்தலைகள், இன்றைக்கு தமிழனை பார்த்து நக்கல் அடிக்கின்றார்கள். இந்தப் புகழைப் பெற்றுத் தந்ததில் நம் தமிழனுக்குப் பங்குண்டு.

வெளியே வராமலே புதைய வேண்டிய இந்த மாபெரும் தேசத்துரோகம் வெளியே வர, இந்தியத் தாய் தன் புதல்வர்களிடம் வேண்டுகோள் வைத்திருப்பது போல தெரிகிறது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விகள்.

தன் தாயின் பாதுகாப்பினை மேற்படி நீதிபதிகள் சட்டத்தின் துணையோடு பாதுகாப்பார்கள் என்று அந்தத் தாய் நமக்குச் சொல்லாமல் சொல்கிறார் போலும்.

இந்தியத்தாயின் அரும் புதல்வர்களைப் பற்றி, ஜூவி கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அவர்கள் இவர்கள் தான். முடிந்தால் வாழ்த்துங்கள். இருவரும் பல்லாண்டு பல்லாண்டு நீடித்த புகழுடன், நலத்துடன் வாழ இந்தியாவை நேசிக்கும் ஒருவன் என்ற வகையில் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

– பஞ்சரு பலராமன்

 


%d bloggers like this: