வரி இல்லா சம்பளம் – காங்கிரஸ்ஸின் கைங்கர்யம்

லாலுவும் முலாயமும் நாடாளுமன்றத்தை டீக்கடை போல் ஆக்கி வருகின்றார்கள். மக்களின் நலனுக்காக உழைத்த உத்தமர்கள் இருந்த சபையில் இன்றைக்கு கூச்சலும், குழப்பமும் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. மக்கள் பிரதி நிதிகளின் சபை சாதாரண சந்தைக் கடை போல இருக்கிறது. மக்களுக்காக, மக்களின் பிரச்சினைக்காக பேசுபவர்கள் குறைந்து வருகிறார்கள். எல்லாவற்றிலும் சலுகை பெற்றுக் கொண்டிருக்கும் எம்பிக்களுக்கு மீண்டும் சலுகையாக சம்பள உயர்வு. இதுதான் காங்கிரஸ் கட்சியின் அரசாட்சியின் மகிமை. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் – நாளை கட்சிகளுக்கு இந்தியா பகிர்ந்து அளிக்கப்படும். மக்களுக்கு தொண்டு செய்கிறேன் என்கிற பேர்வழிகளுக்கு சம்பளம் எதற்கு? தகுதியற்றவர்களை, மக்களின் பிரச்சினைகளை அறியாதவர்களை, மக்களுக்காக உழைக்கும் மனிதர்களை மறந்ததால் வந்த பிரச்சினை இது. காங்கிரஸ் தன்னை இந்தியாவை ஆள தனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று நிரூபித்து வருகிறது.

இது தொடர்பான ஒரு கட்டுரை தினமணியில் வெளியானது. படித்துப் பார்க்கவும்.

நன்றி தினமணி மற்றும் ஆசிரியர்

– சுதந்திரம்

யாரிடம் போய்முறையிடுவது?

கு.வைத்தியலிங்கம்

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, காஷ்மீரில் தொடர்ந்து வரும் மோதல்கள், மாவோயிஸ்டுகள் பிரச்னை போன்றவற்றால் மக்கள் பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்க, தங்களின் ஊதிய உயர்வுக்காக மக்களவையை ஒத்திவைக்கும் அளவுக்குப் போராட்டங்களை நடத்தி அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் மனசாட்சியே இல்லாத மக்கள் பிரதிநிதிகள்.

இதுவரை பல்வேறு பிரச்னைகளுக்காக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய வரலாற்றில், தங்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் போதாது எனக் கோரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தை நடத்தியிருப்பது மோசமான முன்னுதாரணமாகும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 16,000 ஊதியத்தை 5 மடங்காக உயர்த்தி ரூ. 80,000 வழங்க வேண்டும் என நாடாளுமன்ற ஊதியக் குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால், ரூ. 50,000 ஊதியமாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

எம்.பி.க்களுக்கு ஊதியம் மட்டுமல்லாமல் அலுவலகச் செலவுக்காக வழங்கப்பட்டு வந்த தொகை ரூ. 20,000-த்திலிருந்து ரூ. 40,000 ஆகவும், தொகுதிப் படியும் ரூ. 20,000-த்திலிருந்து ரூ. 40,000 ஆகவும் உயர்த்தி வழங்கவும், தனிப்பட்ட முறையில் எம்.பி.க்கள் வாகனம் வாங்குவதற்காக இதுவரை வழங்கப்பட்ட கடன், ஒரு லட்சத்திலிருந்து  ரூ. 4 லட்சமாக (வட்டியில்லாத வகையில்) உயர்த்தி வழங்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாதத்துக்குச் சுமார் ரூ. 1.30 லட்சம் வரை எம்.பி.க்கள் நேரடியாகப் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களைவிட மத்திய அரசுத் துறைச் செயலர்கள் அதிகமாக ஊதியம் பெறுகிறார்கள், எனவே அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியமான ரூ. 80,000-த்தை விட ரூ. 1 கூடுதலாகச் சேர்த்து தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி பகுஜன் சமாஜ், சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், சிவசேனா, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கட்சி பாகுபாடில்லாமல் மக்களவையை ஒத்திவைக்கும் அளவுக்குப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களே தவிர, தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி மக்களவையை முடக்குவதற்காக அல்ல.

இன்னமும் மின்சார வசதியே பெறாத, கல்விக்கூடங்களைக் கண்டிராத, அடிப்படை மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் சிறிதும் பெறாத பல கிராமங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருக்க, இவற்றுக்கு எல்லாம் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி போராடினால் மக்களவை உறுப்பினர்களைப் பாராட்டலாம்.

ஆனால், தங்களின் ஊதியத்தை உயர்த்தியாக வேண்டும், அதுவும் அரசுத் துறைச் செயலர்களின் ஊதியத்தை விட ரூ. 1 கூடுதலாகச் சேர்த்து வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தியவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.

தாராளமயமாக்கல் கொள்கையால் பொருள்கள் பதுக்கல், செயற்கைத் தட்டுப்பாடு போன்றவற்றால் பெரும் வர்த்தக நிறுவனங்கள் பல தங்கள் இஷ்டத்துக்கும் விலைகளை உயர்த்தி மக்களைப் பாடாய்படுத்தி வருவதைக் கண்டுகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மட்டும் போதாது எனக் கூறுவதை எங்கே போய்ச் சொல்வது?

இன்னும் ஒருவேளை உணவுக்குப் போராடும் மக்களின் வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்யத் திட்டங்களை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தாத, இருக்க இடம் இல்லாமல் சாலையோரங்களிலும், வீதிகளிலும் அலைந்து திரியும் மக்களுக்கு வாழ்விடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தாத இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள்தானா என்ற கேள்வி, அவர்கள் தங்களது ஊதிய உயர்வுக்காக நடத்திய போராட்டங்களுக்குப் பின்னர் எழத் தொடங்கியிருக்கிறது.

நாட்டில் மக்களை வதைத்து வரும் விலைவாசி உயர்வைக் குறைக்க வழிவகை கூறி, அதற்காக மத்திய அரசை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்குப் போராட்டங்களை நடத்தினால் அவர்களைப் பாராட்டலாம். ஆனால், அவர்கள் விலைவாசி உயர்வைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

ஏனெனில், போராட்டம் நடத்திய மக்களவை உறுப்பினர்கள், தாங்கள் வாழும் பகுதியைச் சேர்ந்த மக்கள் எல்லாம் எல்லா வசதிகளையும் பெற்றுவிட்டார்கள் எனக் கருதுகிறார்கள் போலும்.

தேர்தலின்போது மட்டும் வாக்காளர்களைச் சந்தித்து, பிறகு தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காத மக்களவை உறுப்பினர்கள் பலர் இருக்கிறார்கள். பலர் தொகுதியை மறந்தும் இருக்கிறார்கள், சிலர் எப்போதாவது ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் வந்து செல்கிறார்கள். தேர்தல் வந்தால் பணம் கொடுத்தால் போதும், வாக்குகளைப்  பெற்றுவிடலாம் எனக் கருதுகிறார்கள். இவர்களது செயலைக் கண்டு எங்கே போய் முட்டிக்கொள்வது?

மௌனிகளாய் மக்கள் இருக்கிறவரை நம் தலையில் இவர்கள் மிளகாய் மட்டுமல்ல, எல்லாவற்றையுமே அரைப்பார்கள். மக்கள் மாறாதவரை அரசும், மக்கள் பிரதிநிதிகளும்தான் இப்படித்தான் இருப்பார்கள். மக்கள் எடுக்கும் முடிவே தீர்வு காணும். அப்படி இல்லாவிட்டால் இதுபோல இன்னும் பலவற்றை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இணைப்பு :

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=291421&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=யாரிடம்%20போய்முறையிடுவது?

One Response to வரி இல்லா சம்பளம் – காங்கிரஸ்ஸின் கைங்கர்யம்

  1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    NAMAI NAAMAE NONTHU KOLLA VENDIYATHUTHAAN! MAKKAL ORU VOTIRKKU 1000/ MUTHAL 5000/ VARAI PANNAM VANGUM MAKKALIN PIRATHINITHI PIN YEPPADI IRUPPAAR?? NALLA VELLAI GANDHI IVAIKALAI PAARKKAAMAL SORKKAM POIVITTAAR! AANNDAVANAE INTHIYAAVAI KAAPPAAARRRUU!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: