சர்வாதிகாரம், ஜனநாயகம் என்பது என்ன?

எனக்கு இப்போது தான் மிகச் சந்தோஷமாக இருக்கிறது. குஞ்சாமணி பெயரைபோட்டு அவன் கேரக்டரை டேமேஜ் பண்ணி விட்டேன். அடேய் குஞ்சு, என்னை நீ திட்டினாய் அல்லவா, அதற்குத் தான் பழி வாங்கி விட்டேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டாய் என்றால் போனால் போவுது என்று விட்டு விடுவேன்.

ஜூனியர் விகடனலில் ஒரு கட்டுரை வெளியானது. அதை இச்சமயத்தில் நாம் நினைவில் கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

– குடிகாரன்

அரிச்சந்திரன் விஸ்வாமித்திரனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியில்… தன்னுடைய அரசைத் துறந்தான்; காசி நகர் அடைந்து மனைவியையும், மகனையும் வேதியன் ஒருவனிடம் விலைக்கு விற்றான். தன்னை ஒரு புலையனிடம் ஒப்புக்கொடுத்து, அவனிடம் அடிமை ஊழியம் ஆற்றினான். உயிரைக் கொடுத்தாவது, வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதே தன்னுடைய சுதர்மம் என்று அவன் உறுதிகொண்டிருந்ததாக… அரிச்சந்திர புராணம் உரைக் கிறது. கைகேயிக்குத் தந்த வாக்கைக் காப்பதற்கு தசரதன் தன் உயிரையே தாரை வார்த்தான் என்கிறது ராமாயண இதிகாசம். ஆனால், நம் அரசியல்வாதிகள் வகுத்துக் கொண்ட வாழ்நெறியே வேறல்லவா! அவர்களுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில், வாக்குறுதியை நினைத்துப் பார்க்க நேரம் எங்கே இருக்கிறது?

துரோணரும், துருபதனும் ஒரே குருகுலத்தில் ஒன்றாக வித்தை பயின்றபோது, இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு மலர்ந்தது. நட்பின் நெகிழ்ச்சியில் ஒருநாள், ‘நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் என் அரசில் பாதியை உனக்குப் பகிர்ந்தளிப்பேன்!’ என்று துரோணரிடம் வாக்களித்தான் துருபதன். காலம் அதன் கதியில் ஓடியது. துருபதன் பாஞ்சாலத்தின் அரசனாகப் பதவியேற்றான். துரோணரோ, தன் பிள்ளை அசுவத்தாமனுக்குப் பால் வாங்கவும் வழியின்றி வறுமையில் வாடினார். பழைய நட்பின் பாசத்தில் அவர் பாஞ்சாலம் சென்று துருபதனிடம் உதவி கேட்டார். ‘அரசனாகிய என்னை நீ எப்படி நண்பனாக நினைக்கலாம்? எந்த நட்பும் எல்லாக் காலமும் நீடிப்பதில்லை. கோழையோடு வீரனும், ஏழையோடு அரசனும் எப்படி நட்புக் கொள்ள முடியும்? என்றோ நான் அளித்த வாக்குறுதியை அன்றே மறக்காமல், இன்று வந்து என்முன் நிற்கும் உன்னைப் போன்ற முட்டாளை எங்கும் பார்க்க முடியாது!’ என்று பழித்து அவமானப்படுத்தினான் துருபதன். ஆட்சி நாற்காலியில் அமர்ந்ததும், அளித்த வாக்குறுதியை மறப்பது மகாபாரதக் காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது.

நாடு விடுதலை அடைந்ததும் பாலாறும் தேனாறும் தானாகப் பாய்ந்தோடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வாக்குறுதி வழங்கினர். சுதந்திரம் வந்து சேர்ந்து 62 ஆண்டுகள் ஆனபின்பும், ஏழைகள் இருக்கும் இடத்தில் பாலாறும் பாயவில்லை; தேனாறும் தென்படவில்லை. பள்ளம் தேடியே தண்ணீர் பாயும். ஆனால், நம் ஆட்சியாளர்களால் பயன் பெற்றவர்கள் மேட்டுக்குடி வர்க்கமே தவிர, பள்ளத்தில் இருக்கும் பாமர ஏழைகள் அன்று. இந்தியாவில் 600 கட்சிகளுக்கு மேல் இருக்கின்றன. நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், தேசியக் கட்சிகள் என்ற தகுதியைப் பெறுகின்றன. தேர்தல் கமிஷனால் 9 கட்சிகள் தேசியக் கட்சிகளாகவும், 38 கட்சிகள் மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வழங்கிய வாக்குறுதிகளை எந்த வாக்காளரும் நினைவில் நிறுத்துவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், தேர்தல் அறிக்கைகளும் தேர்தல் நேரத்து வாக்குறுதிகளும் வெறும் சடங்குகளாகி விட்டதுதான்.

‘காங்கிரஸ் 1952 முதல் 2009 வரை ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் எத்தனை வாக்குறுதிகள் வழங்கியது… அவற்றுள் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன?’ என்று எந்த காங்கிரஸ் தலைவராவது சொல்லக் கூடுமா? தன்னுடைய தகர்ந்து போன அதிகாரக் கூட்டமைப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இந்திரா காந்தி 1971-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ‘வறுமையே வெளியேறு’ என்று போர்ப்பரணி பாடினார். இரண்டு தட்டுத் தட்டினால் இடம் பெயர்வதற்கு வறுமையென்ன எருமையா? இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற நேரு 17 ஆண்டுகளும், அவருடைய மகள் இந்திராகாந்தி 16 ஆண்டுகளும், இந்திராவின் மகன் ராஜீவ் 5 ஆண்டுகளும், சோனியாவின் வழிகாட்டுதலில் மன்மோகன் சிங் 5 ஆண்டுகளும் நாட்டின் உயர் பதவியில் அமர்ந்து ஆட்சி நடத்தினர். சோனியாவின் கண்ணசைவுக்கேற்ப காரியமாற்றும் பிரதமராக மன்மோகன் சிங் இன்றும் தொடர்கிறார். ஒரு குடும்பத்தின் ஆளுகையில் பாரததேசம் 43 ஆண்டுகளுக்கு மேல் ஆட்பட்டுக் கிடந்து என்ன பயன்? வறுமை முற்றாக வெளியேறியதா? இன்றும் எண்பது கோடி மக்களின் ஒருநாள் வருமானம் இருபது ரூபாய்க்கும் குறைவு என்றுதானே சென்குப்தா குழுவின் அறிக்கை அதிர்ச்சித் தகவல் தந்திருக்கிறது. அப்படியானால்… உலக மயமாக்கலும், தாராள மயமாக்கலும், தனியார் மயமாக்கலும் கொண்டு வந்த புதிய பொருளாதாரம் யாருக்குப் பயன் தருகிறது? சிதம்பரம் போன்றவர்கள் நிதியமைச்சர்களாக இருந் ததில் ஆதாயம் அடைந் தவர்கள் அம்பானிகளா? கூவம் நாற்றத்தில் குடிசைக்குள் வாழும் ஏழைக் குப்பன்களா?

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வெறும் தேர்தல் கட்சி களாகத் தேய்ந்து போன பின்பு… வழங்கிய வாக்குறுதிகளுக்குப் பஞ்சமே இல்லை! நிறைவேற்றவே முடியாத வாக்குறுதியைத் தந்து வாக்காளர்களை ஏமாற்றிய முதல் அரசியல் குற்றவாளி அறிஞர் அண்ணா. 1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம்!’ என்று வாக்குறுதி வழங்கி அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் அண்ணா. ‘தவறினால் முச்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்!’ என்று ஆணித்தரமாக அவர் பேசிய பேச்சு, ஏதுமறியாப் பாமரர்களை ஏமாற்றியது. கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத அந்த வாக்குறுதி, மாலை நேரத்து மேடைப் பேச்சில் வந்து விழுந்தது. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டுக் காயக்கட்டுகளுடன் தோற்றம் தந்த எம்.ஜி.ஆர். சுவரொட்டியும், மாணவர்கள் 1965-ல் நடத்திய மொழிப் போராட்டமும், அண்ணாவின் மூன்றுபடி அரிசி வாக்குறுதியும்தான் தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்தின. அண்ணா சொன்னபடி ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போட முடியவில்லை. ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். ‘ஆளுக்கு ஐந்து ஏக்கர் நிலம், இரண்டு காளை மாடுகள் இலவசமாகத் தரப்படும்’ என்று வசனம் பேசியதையே வாக்குறுதியாக நம்பி, அவரை முதல்வராக்கிய ‘அறிவாளிகள்’ நாம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டவர்கள், தமிழுக்கு மத்திய அரசு செம்மொழித் தகுதியைத் தந்து விட்டதையே ‘மாநில சுயாட்சி’ பெற்றவர்கள் போல் பெருமை பொங்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு திராவிடக் கட்சிகளும் தேர்தல் உற்சவத்தின்போது வழங்கும் வாக்குறுதிகள் மக்கள் நலனைப் பெருக்குவதற்காக அன்று. ஜெயலலிதா ஆட்சி நாற்காலியில் அமர்ந்து விடக் கூடாது என்பதற்காக கலைஞரும், முதல்வர் பதவியிலிருந்து கலைஞரை இறக்கியாக வேண்டும் என்ற தவிப்பில் ஜெயலலிதாவும் போட்டி போட்டு வாக்குறுதிகளை வழங்குகின்றனர். இந்த வாக்குறுதிப் போட்டியில் அரசின் நிதிநிலை குறித்த அக்கறை இருவருக்குமே இல்லை.

திருச்செந்தூரிலும், வந்தவாசியிலும் இடைத் தேர்தல் வந்தது. தி.மு.கழகம் திருச்செந்தூரில் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அழகிரி அறிவித்தார். அவர் எந்த இலக்கை நிர்ணயித்தாலும், அதை எளிதாக அடையும் வழி முறையை அவர் அறிவார். மகா பாரதத்தில் சகுனி சொன்னபடி சூதாட்டக் காய்கள் விழுவதைப் போன்று தேர்தல் களத்தில் அழகிரி அறிவித்தபடி வாக்குகள் வந்து விழும். ‘அழகிரி காய்ச்சலில் மூளை குழம்பிய முன்னாள்’ தமிழக நிதியமைச்சர் பொன்னையன் திருச்செந்தூர் சென்று, ‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு பவுன் தங்கம் ஐயாயிரம் ரூபாய்க்குத் தரப்படும்’ என்று திருவாய் மலர்ந்தார். தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் இல்லை என்பதையும், சர்வதேசப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளே தங்கத்தின் அன்றாட விலையைத் தீர்மானிக்கின்றன என்பதையும் நிதியமைச்சராக இருந்தவர் அறியாதவரா? மனச்சான்றை மறந்து மக்களை ஏமாற்றும் மலிவான வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகளை இனியும் நாம் நம்பி ஏமாறப் போகிறோமா?

கலைஞர் 2006- சட்டமன்றத் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறை வேற்றிவிட்டார் என்று புகழாரம்சூட்டப் படுகிறது. வாக்குறுதி வழங்கியபடி நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் உரிய வேகத்துடன் செயற் படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் இன்னொரு பக்கம் எழுப்பப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஏழைகளுக்கான காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சி, நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு அரசு தரிசு நிலம் வழங்கும் திட்டம் என்று பல நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற்றிருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், ஏழ்மையை முற்றாக அகற்றும் பொருளாதாரத் திட்டங்கள் ஒன்று கூட இந்த அரசிடம் இல்லை என்பதும் புறக்கணிக்க முடியாத உண்மை. பழுதாகிவிட்ட பகுதியில் பராமரிப்புப் பணியைச் செய்யாமல், பளபளப்புப் படுதா விரித்து மறைப்பதில் கலைஞரின் கைவண்ணம் ஈடிணையற்றது.

முறைகேடுகள் நடக்காத தேர்தலை இனி நாம் காணக்கூடும் என்ற நம்பிக்கை கால நடையில் பொய்த்து விட்டது. பணபலம், அடியாள் பலம், அதிகார பலம் ஆகிய மூன்றும்தான் தேர்தல் வெற்றியைத் தேடித் தரும் என்றால், உண்மையான ஜனநாயகம் எப்படி உயிர் வாழும்? நியாயமான தேர்தல் நடக்கவில்லை என்று கலைஞர் அரசைக் குறை கூறும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படும் பீகார் அரசியலைப் பின்பற்றியது குறித்து வாய் திறப்பாரா? அமைச்சர்கள் அனைவரும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளை முற்றுகையிடும் போக்கை ஜெயலலிதாதான் முதலில் கும்மிடிப்பூண்டியிலும், காஞ்சிபுரத்திலும் அறிமுகப்படுத்தினார். தவறான அரசியலில் ஜெயலலிதா முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றால், கலைஞரும், அவருடைய சகாக்களும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பதுதானே பொய்மைக் கலப்பற்ற மெய்? கள்ளவாக்குப் போடுவதை ஒரு கலையாகவே கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லவா கழகக் கண்மணிகள்!

திருமங்கலம் பாணிதான் இனி எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுமெனில், நேர்மையும், உண்மையும் சார்ந்த சமூகப் பொறுப்பு உணர்வு மிக்க சாதாரண மனிதர்கள் தேர்தலில் எப்படி நிற்க முடியும்? அழகிரி உருவாக்கிய ‘திருமங்கலம் தேர்தல் முறை’ 1957-ல் காங்கிரஸ் அரசால் பின்பற்றப்பட்டிருந்தால்… அண்ணாவும், கலைஞரும், அன்பழகனும், நாவலரும் சட்டமன்றத்துக்குள்ளேயே நுழைந்திருக்க முடியாதே! அன்றைய தி.மு.க-வின் தலைவர்கள் அனைவரும் ஏழையும் பாழையுமாக இருந்த சாமானியர்கள்தானே! ‘1957 தேர்தலில் தி.மு.கழகம் ஈடுபடும்போது, அதற்கிருந்த வசதிகள் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பணம்… அது பற்றி வாழ்க்கையிலேயே கவலைப்படாத தி.மு.கழகத் தோழர்கள் தேர்தலிலும் கவலைப்படவே இல்லை… ‘எதிர்த்துப் போட்டியிடுபவர்களின் பணபலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்றுங்கள். வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்களை விற்றேனும் அவசியமான செலவுகளைச் சரிக்கட்டித் தேர்தல் பணியாற்றுங்கள்’ என்பது அறிஞர் அண்ணா இட்ட கட்டளை. வாழ்க்கைப் பிரச்னைக்கே பணத்துக்காகத் திணறிக் கொண்டிருந்த கழகத் தோழர்கள், தேர்தல் பணிக்காகப் பணத்துக்கு அலைந்ததை என்னால் மறக்க முடியாது’ (கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் தொகுதி) என்று எழுதியிருக்கும் கலைஞரின் கழகம்தான் ‘திருமங்கலத் தேர்தல் திருவிழா’ நடத்தியது என்பது நம்மை அதிர வைக்கும் உண்மை அல்லவா! அண்ணா அன்று கழகத்தவரை ‘சாலையோரத்துச் சாமானியர்கள்’ என்று வருணித்தார். அந்த சாலையோரத்துச் சாமானியர்களில் பலர் இன்று அம்பானிக்கும், பிர்லாவுக்கும் போட்டியாளர்களாக வளர்ந்தது எப்படி?

‘என்னிடமிருந்த 1335 எண்ணுள்ள ஃபியட் கார், முரசொலி அலுவலகத்திலிருந்து ஒரு பழைய வேன், அச்சடிக்கப்பட்ட என்னுடைய வேண்டுகோள் அடங்கிய துண்டுத்தாள், ஒரு டேப்ரிக்கார்டர். இவைதான் சாதனங்கள்’ என்கிறார் ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர். இந்த சாதனங்களுடன் சென்று குளித்தலையில் 1957-ல் வெற்றிபெற்ற கலைஞர், இதே சாதனங்களுடன் ஒருவர் களத்தில் நின்று சட்டமன்றம் செல்லும் சூழலை இன்றில்லாமல் செய்து விட்டாரே! இந்தியாவிலேயே ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் ஒவ்வொரு தொகுதிக்கும் கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. இன்றுள்ள நிலையில் காமராஜரும், கக்கனும் வெற்றி பெறக்கூடுமா?

‘ஜனநாயகம் பிரபுக்கள் ஆட்சியை விடவும் கீழானது. ஏனெனில், சமத்துவம் என்ற பொய்யான யூகத்தை அது அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, திறமை எண்ணிக்கைக்கு பலியாகிறது. தந்திரங்களால்தான் எண்ணிக்கை இயக்கப்படுகின்றன. மக்கள் மிக எளிதில் திசை திரும்பக் கூடியவர்கள். கருத்தளவில் அவர்கள் திடபுத்தி இல்லாதவர்கள்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே அரிஸ்டாடில் எழுதி வைத்ததற்கு இலக்கணமாக இந்திய ஜனநாயகம் இருக்கிறது. ‘ஒரேயரு அயோக்கியனை மக்கள் சமாளிப்பதற்குப் பெயர் சர்வாதிகாரம். ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்’ என்பது கண்ணதாசனின் கண்டுபிடிப்பு.

எங்கே போகிறோம் நாம் தொடரிலிருந்து – நன்றி தமிழருவி மணியன் மற்றும் ஜூனியர் விகடன்

One Response to சர்வாதிகாரம், ஜனநாயகம் என்பது என்ன?

  1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    KATTURAI MIKA ARUMAI. “KAATTA VAENDIYATHAI KAATTI PERA VAENDIATHAI PERUVOM” ENRU ANNADURAI ANRAE SOLLIVITTAAR!! 1967_ L THODANGKIYATHU INNUM THODARKIRATHU !!!MAKKALAE PANATHTHUKKU ADIMAI AAKAATHEERKAL!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: