உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – கடிதம்

கிளாடியேட்டர் மேக்ஸிமஸ் படித்தேன். சிலிர்த்து விட்டேன். என்ன ஒரு லயம். உள்ளே பொதிந்திருக்கும் கருத்து ஆஹா ஆஹா ரகம். பாராட்டுச் சொல்ல வார்த்தையில்லை.  உங்கள் பதிவுகள் அனைத்தும் ஆயிரம் கருத்துகள் சொல்லும் அம்புகளாய் தெரிக்கின்றன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி உங்களின் காட்டமான கட்டுரையினை இதுவரை பதிவுலகத்தில் எழுதப்படாத முறையில் பதிவு செய்திருக்கின்றீர்கள்.  உங்களின் சிந்தனை வீச்சு செல்லும் பாதை குறித்து வியப்பேற்பட்டது.  நீங்கள் சிறந்த எழுத்தாளராக சிந்தனையாளராக வருவீர்கள்.

கோவைக்கு செம்மொழி விழாவில் கலந்து கொள்ள நாகப்பட்டினத்திலிருந்து வந்திருக்கிறேன்.  கடந்த மூன்று நாட்களாக செம்மொழிக் கலைவிழாவினை கண்டு களித்தேன். சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கலைவிழாவிற்கு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் விழாவை ரசிக்க வரவில்லை.  உலா வந்தார்கள். அரை மணி நேரம் கூட அமர வில்லை. உணவுத் திருவிழா என்ற பகல் கொள்ளைக்காரர்களிடம் ஏமாந்து இருக்கும் காசை இழந்து விட்டுச் சென்றார்கள். ஒரு தோசை 25 ரூபாய். ஒரு சிக்கன் பீஸ் மற்றும் இரண்டு பரோட்டா 80 ரூபாய். சிறிய சைஸ் வடை ரூபாய் 10. காஃபி 10 ரூபாய். இதே போன்று விழா நடந்த அனைத்து அரங்கங்களிலும் உணவின் பெயரில் கொள்ளை அடிக்கப்பட்டது. இக் கொள்ளை அரசு ஆதரவுடன் நடக்கிறது என்பது தான் கொடுமை.

தங்கியிருக்கும் ஹோட்டல் உரிமையாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். காய்கறிகள் விலை எதுவும் 30 ரூபாக்கும் கீழ் இல்லை என்றார். கடந்த ஒரு மாதமாகவே காய்கறிகளின் விலை உச்சத்திலிருக்கிறது என்று சொன்னார். காரணம் இந்த மாநாடு. ஏழைகள் பட்டிருக்கும் சிரமத்தினை எண்ணி வேதனை ஏற்பட்டது. எந்த ஆட்சியாளரும் ஏழை மக்களை என்றைக்குமே கண்டு கொள்வதில்லை என்பது எனக்கு புரிந்தது. ஆனால் ஏழைகள் இன்னும் இது போன்ற அரசியல்வாதிகளை நம்புகிறார்கள் வேறு வழி இன்றி.  கொடுமையான ஜனநாயகம் என்பது இதுதான்.

கோவை முழுவதும் சுற்றி வந்தேன். அருணாசலம் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். ரஜினியின் தகப்பன் 30 கோடியைக் கொடுத்து 30 நாட்களுக்குள் செலவழிக்க வேண்டும் என்று ரஜினியிடம் சொல்லி இருப்பார். செலவழித்த காசால் எந்த வருமானமும் வரக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்திருப்பார். அருணாசலம் படம் போல நடக்குமா என்று கூட நாம் வியந்திருப்போம். ஆனால் அதை விட கொடுமையாக 400 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் எந்த வேலையும் முழுமையாக முடிவடையவில்லை. தரம் பற்றிப் பேச்சே எழவில்லை. கேள்வி கேட்பாரே இல்லை. தமிழனுக்கும் தமிழுக்கும் இதை விட கொடுமை செய்ய வேண்டியதே தேவையில்லை என்ற அளவுக்கு 400 கோடி ரூபாயை தெருவில் கொண்டு போய் கொட்டி இருக்கின்றார்கள். வேறொன்றும் சொல்லவே தோன்றவில்லை.

கோடிக்கணக்கான ரூபாய் விளம்பரங்கள் என்ற பெயரில் வீணடிக்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ ஏழைகள் உடுக்க உடையின்றி, உணவின்றி செத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை ஏழை எளிய மக்களுக்குச் செலவு செய்யலாம். வெறும் பகட்டுக்கும், பதவிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை தினசரியின் முதலாளிகளின் வீட்டுப் பணப்பெட்டிக்குள் செல்கின்றன.

எதுவும் மாறப்போவதில்லை. ஐந்து நாட்கள் சென்ற பிறகு வழக்கம் போல உலகம் இயங்கும்.  ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் இருக்கும் தமிழ் நாட்டில் தமிழ் என்றைக்கும் வளரவே வளராது. எவரும் தமிழும் பேச மாட்டார்கள்.  தமிழனும் தமிழும் ஆங்கிலத்துக்கு அடிமையாகி மாமாங்கம் ஆகி விட்டது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மெட்ரிக் பள்ளிகள் அதிகம். தமிழ் நாட்டில் தமிழ் வளர வழியில்லை. தமிழில் பேசினால் வேலை கூட கிடைக்காது.  இந்தச் சூழ் நிலை இருக்கும் போது தமிழுக்கு விழா நடத்துகிறார்கள்.  வேடிக்கை, விநோதம், விந்தை நிறைந்த மக்களும் ஆட்சியாளர்களும் காலம் காலமாய் வந்து கொண்டே தான் இருப்பார்கள் போலும்.

ராஜேந்திரன்

%^%^%^%

அன்பு ராஜேந்திரனுக்கு,

முதலில் உங்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உலகத் தமிழ் மாநாடு பற்றி நான் அந்தப் பதிவினை எழுதவில்லை. எப்படி அய்யா முடிச்சுப் போட்டுக் கொள்கின்றீர்கள்? இது தான் வேலியில் போற ஓணானை வேட்டிக்குள் விடுவது என்பதா? போதையில் இருந்த போது எனக்குப் பிடித்த மேக்ஸிமஸ் பற்றி எழுதினேன். அதை விழாவோடு தொடர்பு படுத்தி சிண்டு முடிந்து விடுகின்றீரே உமக்கு இது நன்றாக இருக்கிறதா?

என்னைப்  பொறுத்தவரை இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு அரசியல் காரணம் ஏதாவது இருக்கக் கூடும்.  தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததை விழாவாகக் கொண்டாடுவதில் தவறே இல்லை என்று தான் நினைக்கிறேன்.  விழா நடக்கும் போது சில சிரமங்கள் எழத்தான் செய்யும். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. விழா என்றாலே கொண்டாட்டம் தான். சம்பாதிப்பது எதற்காக ? சந்தோஷமாக இருக்கத்தானே? அதைத்தானே தமிழக அரசு செய்கிறது. இதில் என்ன குற்றம் கண்டீரோ தெரியவில்லை. ஏனிப்படி எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் மாமியாரைப் போலவே சிந்திக்கின்றீர்களோ தெரியவில்லை.

தள்ளாத வயதிலும் தமிழுக்கு விழா எடுக்கும் முதல்வரை ஒரு வரியாவது பாராட்டி இருக்கின்றீர்களா என்றால் இல்லை. அண்ணாவிற்குப் பிறகு தமிழக முதலமைச்சர்களின் இவர் ஒருத்தார் தான் தமிழ், தமிழ் என்று எழுதியும் பேசியும் வருகிறார். அவரைக் கரித்துக் கொட்டாதீர் ராஜேந்திரன்.

உணவு விலை பற்றிச் சொன்னீர்கள். எல்லா ஊர்களிலும் நடக்கும் விழாக்களிலும் உணவுப் பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கும். ஏதோ இங்கு மட்டும் தான் இப்படி என்ற தோரணையில் எழுதியிருப்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் விழா பற்றிய தமிழக செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகளை நான் நம்பத் தயாரில்லை. ஏனென்றால் தமிழகச் செய்திதாள்கள் தங்களது பத்திரிக்கை தர்மத்தை இழந்து வியாபாரிகளாகி விட்டனர் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆகவே இந்தச் செம்மொழி மாநாடு பற்றிய விமர்சனத்தை நான் தவிர்க்கிறேன்.  நான் உழைத்தால் எனக்கு காசு கிடைக்கும். அதை வைத்துதான் வயிற்றுப் பசி தீர வேண்டும். விழாவினை ரசித்து, ருசித்து வர வாழ்த்துகிறேன்.

சுண்டல், கோழி வறுவல், பாசிப்பருப்பு அவியல், நிலக்கடலை அவியலோடு சரக்கு ரெடியாக இருக்கிறது.  வா… வா… என்றழைக்கிறது டாஸ்மாக். வருகிறேன். நாளை சந்திப்போம்.

குடிகாரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: