இலவசத்தை வீசி ஓட்டை வாங்கி நாட்டைக் கெடு

 தமிழ் நாட்டின் மாமன்னராக பொறுப்பேற்றிருக்கும் மாமன்னர் திரு திமுகவின் முதல்வர் அவர்களின் பொருளாதார சித்தாந்தத்தைப் பற்றி துக்ளக்கில் திரு சோவின் கட்டுரை கீழே இருக்கிறது. நன்றி துக்ளக்.

நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்பதனையும், நாட்டை ஆளும் தலைவர்களின் லட்சணத்தையும் ஒருக்கணம் எண்ணிப் பார்த்து பெருமூச்சு விட்டு விடுங்கள். சரியாகப் போய்விடும்.

முதல்வரின் பொருளாதார சித்தாந்தம் !

‘கிராமப்புறங்களின் நீர் ஆதார வசதிகளை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை சீரமைத்தல் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி சுமார் 120.98 கோடி ரூபாய், இலவச டி.வி., இலவச கேஸ் அடுப்பு போன்றவற்றை வினியோகிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது…’ என்று இந்திய தணிக்கை அதிகாரி கூறியிருக்கிறார். இது ஆறு மாவட்டக் கணக்கு; அவ்வளவுதான் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தெரிய வந்த விவரம் இது.

‘பொருளாதார நிபுணர்களில் பலர், இலவசங்களை ஏற்கிறார்கள்’ என்று முதல்வர் கூறுகிறார். உயிர் காக்க, கல்வி பெற, அத்தியாவசிய உணவு தானியங்கள் பெற – சில மான்யங்கள் மற்றும் சில இலவசங்கள் தரப்படுவதை நிபுணர்கள் ஏற்கலாம். டெலிவிஷன் தருவதை எந்தப் பொருளாதார நிபுணர் ‘அது ரொம்பச் சரி’ என்று ஏற்பார்? வேலைவாய்ப்பு கிட்டாதவர்களுக்கு, ஒரு அலவன்ஸ் தந்து வருகிற நாடுகளில், இப்போது ‘இதனால் வேண்டுமென்றே பலர் வேலைக்குப் போவதில்லை; உழைக்காமல் கிடைக்கிற அலவன்ஸே போதும் என்று வேலை தேடுவதையே அவர்கள் விட்டு விடுகிறார்கள். இந்தத் திட்டம் சரி அல்ல; பெரும் பொருளாதாரச் சுமையே இது’ என்ற கருத்து பரவி வருகிறது. அரசு கண்மூடித்தனமாக இலவசங்களை அளித்து வந்தால், அது இறுதியில் மனிதனின் சுய முயற்சிக்கு ஊறு விளைவிக்கும்.

சரி, முதல்வர் கூறுகிற மாதிரியே, பொருளாதார நிபுணர்கள் இலவசங்களை ஏற்கிறார்கள் – என்றே ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். ‘வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியில் கை வைத்து, வளர்ச்சியை நிறுத்தி, இலவசத்தைக் கொடு’ என்று எந்தப் பொருளாதார மேதை கருதுகிறார் என்பதை முதல்வர் தெளிவுபடுத்தவில்லை.

ஆனால், முதல்வர் இந்த இலவசங்களை ‘சமூகப் பாதுகாப்புக்கான இலவசத் திட்டங்கள்’ என்றும், ‘இதில் தவறில்லை’ என்றும் கூறி விஷயத்தை முடித்துவிடப் பார்க்கிறார்.

டெலிவிஷன், கேஸ் அடுப்பு போன்றவை ‘சமூகப் பாதுகாப்பு’க்காகத் தரப்படுகிறது என்ற முதல்வரின் பேச்சை எப்படி ஏற்பது? டெலிவிஷனும், கேஸ் அடுப்பும் இல்லா விட்டால் சமூகம் பாதுகாப்பு இல்லாமல் தவிக்குமா? கல்வி வசதி போலவோ, மருத்துவ வசதிக்காக ஆஸ்பத்திரி போலவோ, போக்குவரத்துக்காக சாலை வசதி போலவோ, மின்சாரம் போலவோ – சமூகத் தேவைகளா டெலிவிஷனும், கேஸ் அடுப்பும்? அவற்றை எல்லாம் கொடுத்தால், அது பாதுகாப்பு; அது வளர்ச்சி. டெலிவிஷன் கொடுத்தால் அது வளர்ச்சியா? அது ஆளும் கட்சிக்கு ஓட்டு. அதற்காகத்தானே இந்த இலவசங்கள்? இதுபோன்ற செலவுக்கு வளர்ச்சிக்கான நிதியிலிருந்து எடுக்கப்படுவது என்ன நியாயம்? ஆளும் கட்சிக்கு ஓட்டு சேகரிக்கிற செலவை, அரசின் தலை மீது போடுவது ஆகாதா இது?

இது சரிதான் என்றால், தேர்தலில் ஓட்டுக்குக் கொடுக்கிற பணச் செலவு கூட வளர்ச்சித் திட்டத்திலிருந்து எடுக்கப்படலாமே? அதுவும் கூட சமூகப் பாதுகாப்புதானே? ஓஸியில் ஓட்டைக் கொடுத்து விடாமல், பணம் பெற்றுக் கொண்டு ஓட்டளிப்பது, எத்தனை ஏழைகளுக்கு உதவுகிற திட்டம்! அந்தச் செலவை ஆளும் கட்சி ஏற்பானேன்! கிராமப்புற வளர்ச்சித் திட்டம், அதையும் தாங்காதா என்ன?

முதல்வரின் பொருளாதாரத் தத்துவத்தில் ஒரே ஒரு ‘பொருள்’தான் உள்ளது – அது ஓட்டு. அதற்கு ஒரு ‘ஆதாரம்’ – வளர்ச்சிப் பணிகள். ‘வளர்ச்சியை நிறுத்தி, அந்தச் செலவில் இலவசத்தை வீசி, ஓட்டை வாங்கி, நாட்டைக் கெடு’ என்பதுதான் அந்த பொருளாதாரச் சித்தாந்தம். இதைத் தணிக்கை அதிகாரி புரிந்து கொள்ளாதது, அவருடைய தவறு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: