ஆடு மாட்னா பிரியாணி அம்மா மாட்னா குர்பானி

மார்ச் 29, 2010

இந்தக் குஞ்சுப்பயல் இருக்கானே, அவனுக்கு எப்பவுமே ஒரே பாலிசிதான்.  ஆடு மாட்னாத்தான் பிரியாணி வைப்பான். அதுவும் தானா விரும்பி மாட்னும். வலுக்கட்டாயமெல்லாம் கிடையாது. அஞ்சலியை பாக்குறேன்னு கிளம்புனவன் இன்னும் வீடு திரும்பல.

ஆனால் சில பேர் இருக்காகளே அவனுங்க ஆடை சிக்க வைக்கவே  பெரிய வலையா விரிப்பானுவ. ஆடு பிடிக்க ஆளுங்களை ரகசியமாய் கூட்டு வைச்சிருக்கானுவ. அப்படி மாட்ன ஆடுக பட்ட கதை ஏகப்பட்டது இருக்கு எனக்கிட்டே.

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க. இந்த முற்போக்கு எழுதாளனுவ, பிற்போக்கு எழுத்தாளனுவன்னு சொல்லிக்கிட்டு திரியிறானுவளே அவனுங்க என்னா செய்வானுங்க தெரியுமா?

ஆடு மாட்னாலும் பிரியாணி வைப்பானுவ. ஆட்டோட அம்மா மாட்டுனாலும் பிரியாணி வைப்பானுவ. இவனுகளெல்லாம் தம்மை பிற்போக்கு, முற்போக்கு, புரட்சி எழுத்தாளனுவன்னு சொல்லிக்கிட்டு திரியுறானுவ. ஜாக்கிரதைப்புய்…..

அஜால் குஜால் பேர்வழிங்க சில பேரு திரிவானுங்க. அவனுங்க எப்படிப்பட்ட ஆளுன்னா, நோகாம நோம்பி கும்பிடுறதுல்ல அஜக் குஜக் மன்னனுவ. அந்தப் பயபுள்ளயோட மவன்  ஒருத்தன் பன்னுன காரியத்தைச் சொல்றேன் கேட்டுக்கோங்க.

அஜக் குஜக்கோட குட்டிப்பயலுக்கு ஆறு வயசுருக்கும். பாக்கிறதுக்கு நாலு வயசுப் பால்குடி மறக்காத பயலாட்டமே இருப்பான். அம்மாட்ட சொல்லிட்டு வெளியே கிளம்பினான். இன்னிக்கு எவன் தலய உருட்டலாம்னு கணக்கு பண்ணிக்கிட்டே நடந்தான்னா,   எதுக்கே போலீஸ் ஸ்டேஷனைப் பாத்தான்.  உடனே என்னா பண்ணினான்னா… அழுவ ஆரம்பிச்சுட்டான். அழுவுறான் அழுவுறான் அழுதுகிட்டே அம்மாட்ட போவனும்… அப்பாட்டா போவனும்னு கதற ஆரம்பிச்சுட்டான்.

போற வாற பயலுக இந்த பயலோட உள்திட்டம் என்னான்னு தெரியாம வலியப் போயி விசாரிக்க ஆரம்பிச்சானுவ. கூட்டம் கூட ஆரம்பிச்சிடுச்சு. பயபுள்ள விடாம அழுகுறான்.  அம்மா எங்கே? அப்பா எங்கேன்னு கேக்குறானுவ கேனப்பயலுவ. அவனுக்கு சொல்லவா தெரியாது. இன்னும் மேட்டர் வல்லயே. வார வரைக்கு அழுகுறதுன்னு முடிவு கட்டி கண்ணீரும் கம்பலையுமா கத்த ஆரம்பிச்சான்.

கூட்டத்துல ஒருத்தன் குழந்தை அழுவுறானேன்னு இரக்கப்பட்டு, கையில வச்சுறுந்த சாக்லேட்டை கொடுத்தான். பசியில சாப்பிடறா மாதிரிப் பிரிச்சு மேஞ்சான்.  உடனே இன்னொருத்தன் புள்ள பசியா இருப்பான் போலருக்குன்னு சொல்லிட்டு பக்கத்து பேக்கரியில போயி சூடா டீ, சமோஷான்னு வாங்கிக் கொடுக்க பயலும் ஒன்னும் சொல்லாம சாப்பிட்டான். சாப்புட்டு முடிச்சவுடனே அம்மா அம்மான்னு அழுகுறான்.

பையா எங்கே இருக்கு உன் வீடுன்னு விசாரிச்சுக்கிட்டு இருக்கும் போது ஸ்டேஷனுக்குள்ளே ஜீப்புல நுழைஞ்ச இஞ்ச்பெக்கிட்டரு கண்ணுல கூட்டம் மாட்டுச்சு. அதைப்  பாத்துப்புட்டு வலிய வந்து இவனுக்கிட்டே மாட்னாறு.

அரட்டல் கிரட்டல் முடிஞ்சு பயலை ஸ்டேஷனுக்குள்ளே கூட்டிக்கிட்டுபோனாரு. இந்த பயலோ பாக்கிறதுக்கு சோக்கா இருப்பான். அப்பா பேரென்ன, அம்மா பேரென்னன்னு விசாரிச்சுக்கிட்டு இருக்கும் போது பசிக்குதுன்னு சொன்னான். அந்த இஞ்ச்பெக்டருக்கு கொழந்த பொறக்கலையேன்னு குறை வேற. இவனோ மொவத்தை சோகமா வச்சுக்கிட்டு பசிக்குதுன்னு சொன்னான்னா, இவருக்கு இரக்கம் பொத்துக்கிட்டு வர பக்கத்துல இருக்கிற ஓட்டலுப் பக்கமா கூட்டிக்கிட்டுப் போயி சாப்பிட வச்சாறு.  ஐஸ்கிரீமு, இட்லின்னு வெளுத்துக் கட்டுனவன் ஒன்னுக்கு வருதுன்னு சொல்லிட்டு பாத்ரூமு பக்கமா போனான்.

பய வருவான்னு இஞ்ச்பெக்டரு காத்துக்கிட்டு இருக்காரு…

இப்படிப்பட்ட பயலுக எல்லாம் வேற இந்த உலகத்துல திரியுறானுவ. அம்மா தாய்மாறுகளே, பொன்னுவளே!  இலக்கியம் படிக்கிறேன், எழுத்தாளனுவ கையிலே முத்தா கொடுக்குறேன்னு கிளம்பினீங்கன்னு வச்சுக்கோங்க.  சாமான் சகதியாயிரும் பாத்துக்கோங்க…

ஆடு மாட்னாலும் பிரியாணி வைப்பானுவ. உன்னோட அம்மா மாட்லுனாலும் பிரியாணி வைப்பானுவ. அவனுகளுக்குத் தேவை பிரியாணிதான். ஆடு அல்ல.  புரியுதா ?

ஜாக்கிரதை… ஜாக்கிரதை…

இப்படிக்கு – அரச்சான் (அனாதியின் நண்பன்)

குறிப்பு : நேற்று  விசாரித்த நண்பருக்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். இந்தத் தளம் நான்கு நண்பர்களால் எழுதப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். அரசியல், பொருளாதாரம் பற்றிய கட்டுரைகள் மட்டுமே அனாதி எழுதுகிறார். மற்ற கட்டுரைகள் அவரின் நண்பர்களால் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும்….


ஹார்ட் அட்டாக்! ஜாக்கிரதை !!

மார்ச் 29, 2010

உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் தொழிலினால் வரக்கூடிய மன அழுத்தம் இவற்றின் காரணமாக மக்கள் ஹார்ட் அட்டாக் நோயினால் பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்து போய் விடுகிறார்கள்.

ஒரு ஆராய்ச்சியாளர் பொட்டாசியம் உப்பினை சாப்பிடாதவர்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக் அதிகம் பாதித்திருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார். இந்த பொட்டாசியம் உப்பு  பசலைக்கீரையில் மற்றும் பச்சைத் தக்காளியில் இருக்கிறது.

இப்படி பல மருத்துவமுறைகளில் உணவுப் பழக்கங்களே ஹார்ட் அட்டாக் நோய் வரக்காரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

என் நண்பனொருவன் நேற்று ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறான்.  மது, சிகரெட் என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை.  இதுவரையில் நோய் என்று சொல்லி படுத்ததே இல்லை.

மருத்துவரைக் கலந்தாலோசித்த போது இவருக்கு எதனால் ஹார்ட் அட்டாக் வந்தது என்பது   எங்களுக்கே புரியாத மர்மமாக இருக்கிறது என்றார்கள்.

அவனுக்கு எப்படி ஹார்ட் அட்டாக் வந்திருக்க முடியும் என்று புரியாமல் ஹார்ட் அட்டாக்கிற்கு வேறு ஏதேனும் மருத்துவரால் கூட கண்டு பிடிக்க முடியாத காரணம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

பையனை நான் சந்தித்த போது ஹாஸ்பிட்டலில் நர்சுகளுடன் உறை(கவனிக்கவும்)யாடிக் கொண்டிருக்கிறான். ச்சீய்.. தப்புத் தப்பு… உரையாடிக் கொண்டிருந்தான்.  நான் அத்தோடு அவனை விட்டிருக்கலாம். ஆனால் விதியின் முடிவோ வேறு மாதிரியாய் இருந்திருக்கிறது. அந்த விதிக்கு என் மேல் ஏன் அத்தனை கோபம் என்றும் புரியவில்லை.

என்ன காரணத்தினால் பாதிக்கப்பட்டான் என்பதைக் கண்டுபிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தினால் அவனிடம் பேச்சுக் கொடுத்தேன். ஹார்ட் அட்டாக் வந்த சமயத்தில் பயல் என்ன செய்து கொண்டிருந்தான் என்று அறிந்து கொண்டால் ஓரளவிற்கு காரணத்தை ஊகித்து விடலாம் என்று  நினைத்துப் பேசினேன். பயலும் உற்சாகமாகத்தான் பேசினான்.

பயலுக்கு டான்ஸ் என்றால் உயிர்.  டிவிக்களில் வரும் டான்ஸ் ஷோக்கள் ஒன்றையும் விடாமல் பார்ப்பான். அப்படி நேற்றைய மோனாட மொயிலாட பார்த்துக் கொண்டிருந்த பயல்,  குலா மாஸ்டரையும் அவரின் மேக்கப்பையும் பார்த்திருக்கிறான்.

அவ்வளவுதான். பார்த்த மாத்திரத்தில் பயலுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டதாம்.  விழித்துப் பார்த்தால் ஹாஸ்பிட்டலில் இருக்கிறேன் என்றான்.

”ஏண்டா அந்த அளவுக்கா குலா மாஸ்டர் அழகாய் இருந்தார்கள்?”  என்றேன் நான்.

கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தான். அவ்வளவுதான். பேசிக் கொண்டிருந்த பயல் நெஞ்சில் கையை வைத்து அழுத்தியபடி  கண்ணைத் திறக்காமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.

ஏதோ பிரச்சினை என்று அலாரத்தை அமுக்கினேன். நர்சுகள் ஓடி வந்தார்கள். அவனுக்கு மறுபடியும் ஹார்ட் அட்டாக் வந்து விட்டது என்று சொல்லி வேகவேகமாய் அவனை மற்றொரு அறைக்குள் கொண்டு சென்றனர்.

கலவரத்துடன் அவனறையிலிருந்து வெளி வந்தேன்.

பயல் இன்னும் ஐசியூவில் இருக்கிறான். என் விதியைப் பார்த்தீர்களா?

– சோகத்துடன் அனாதி


எல்லாமே அஞ்சலி மயம்

மார்ச் 26, 2010

அன்பார்ந்த வாசகர்களே,

அஞ்சலியைப் பார்த்தேன்.  எல்லாவற்றையும் இழந்தேன். கற்றது தமிழ் படத்திலிருந்து இந்த அஞ்சலி மேல் எனக்கு ஒரு அது வந்துடுச்சு.  அங்காடித்தெரு பார்த்தலிருந்து கட்டினா அஞ்சலியை மறுதாரமாக்குவதுன்னு முடிவே பண்ணிட்டேன். என் வீட்டுக்காரம்மா ஓகே சொல்லிடுச்சு.  சோ (மொட்டைத்தலை சோ அல்ல, இது ஆகையால் என்று அர்த்தம் வரும்) இனி அதற்கான முயற்சியில் ஈடுபடப் போகிறேன்.  எப்படியெல்லாம் முயற்சித்தேன்னு வேற எழுதப்போகிறேன். படித்து விட்டு நீங்களும் முயற்சியுங்கள்.

அந்த அஞ்சலிக்குட்டியை நீங்களும் ஒரு பார்வை பார்த்து வச்சுடுங்க.

படங்கொடுத்த வெப்சைட்டு அண்ணாச்சிக்கு தேங்க்ஸ்ன்னோவ்…

இந்த அனாதிப்பயல நினைச்சாத்தான் பயமா இருக்கு.  ஏய் அதெல்லாம் ஒரு மொகரயாடான்னு கேட்டான்,  பய மார்க் போட்டுட்டான்னு நெஞ்சுக்குள்ளே படபடவென்னு வருது. அவன் நெனச்சா என்னவேனாலும் செய்வானேன்னு திக்கு திக்குன்னு இருக்கு.

அடேய் அனாதி ! எனக்கும் என் குறிக்கோளுக்கும் எதிரா ஏதாவது செஞ்சேன்னு வச்சுக்க அனாதி…. உன்னய யாருன்னு போட்டுக் கொடுத்துருவேண்டா … பார்த்துக்க…..

இப்படிக்கு – குஞ்சாமணி


குஞ்சாமணியைக் காணவில்லை

மார்ச் 26, 2010

குஞ்சை காலையிலிருந்து காணவில்லை. எங்கே சென்றான் ? என்ன ஆனான் என்று தெரியவில்லை. அவனின் வீட்டுக்காரம்மா அண்ணே அண்ணேன்னு அழுகுது.  நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. குஞ்சின் போன் மணி ஆஃபாகி கிடக்குது. என்ன கொடுமை நடந்துச்சு அவனுக்குன்னு தெரியாம புலம்பலில் விட்டு விட்டான்.

அனாதி …

அண்ணே, அண்ணே அங்காடித் தெரு படம் பாத்தண்ணே. அஞ்சலியைப் பாத்தண்ணே. மயங்கி விழுந்துட்டண்ணே. தமிழு படத்துலயே கண்ணாலே பேசுச்சுன்னே. அங்காடித்தெருவில என்னக் கொன்னு போட்டுச்சுன்னே.

குஞ்சாமணி


நம்பிக்கைத் துரோகிகள் இவர்கள்

மார்ச் 26, 2010

சார்,
தமிழகத்தின் பிரபலமான டவுனில் இருக்கும் கம்பெனியில் சிஸ்டம் இஞ்சினியராக வேலை செய்கிறேன். உங்களின் சைட்டை தினம் படித்து விடுவேன். எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

1. மிந்துரை அமைச்சர் தினமும் இரண்டு மணி நேரம்தான் பவர் கட் என்று பேப்பரில் சொல்லுகிறார். ஆனால் உண்மையில் நடப்பது தினமும் 5 மணி நேரம் பவர் கட்டாகிறது.
இதைப் பற்றிய கருத்து என்ன

2. பென்னாகரம் – தேர்தல் கமிஷன் – திமுக – அதிமுக – பாமக – உங்களின் பார்வை என்ன?

கருப்புசாமி

என்னைக் கலாய்க்கிறதுன்னு முடிவே செய்து விட்டீர்களா வாசகர்களே ? கேள்வி கேட்டு பதில் சொல்ல நானென்ன சோவா, அரசுவா, மதனா, அல்லியா? உங்க ரகளைக்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது. எழுதிப் பார்ப்போமே என்று எழுதுகிறேன்.

முதல் கேள்விக்கு என் பதில் :

ஆற்காட்டார் அரசியல்வாதி. அவர் அப்படித்தான் பேசுவார். கேட்பவருக்கு புத்தி வேண்டுமல்லவா?

கேழ்வரகில் நெய்யோடு சேர்ந்து குட்டி ஒன்னு காலை விரிச்சுக்கிட்டே வருகிறது  என்று சொன்னால் அதை நீங்கள் நம்புவதுதான் பிரச்சினை.

தமிழகத்தின் கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் கடந்த நான்காண்டுகளாக இருக்கின்றன. மக்கள் மின்வெட்டோடு வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை. போராட்டத்திற்குச் சென்றால் காவல்துறை தடி அடி நடத்தி மண்டையை உடைக்கின்றார்கள். இன்றைய செய்திதாள் செய்தி இது. ஆரம்பத்திலேயே சரி செய்திருக்க வேண்டிய பிரச்சினை இது. ஆனால் தற்போதைய அரசு இலவசத்தைக் கொடுத்தால் ஓட்டுக் போடும் மாங்கா மடையர்கள் இருக்கும் போது அவர்களுக்கு எதுக்கு கரண்ட் என்று நினைத்திருக்கும் போல.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அதிகரிக்க எண்ணற்ற ஸ்பெஷல் எக்கனாமிக் ஷோன்களை உருவாக்கி கோடிக்கணக்கில் வெளி நாட்டு மூலதனத்தை தமிழகத்தில் முதலீடு செய்ய வைத்த அரசுக்கு, அந்தக் கம்பெனிகளுக்கு மின்சாரம் அதிகளவில் தேவைப்படும் என்கிற சிறிய விஷயம் தெரியாமலிருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை. அக்கம்பெனிகளுக்கு மின்சாரம் வழங்கினால் மக்களுக்கு வழங்க முடியாது என்று தெரியாதவர்களா அவர்கள்?

அரசுக்கு சாதாரண மக்களின் நலன் மீது அக்கறை இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. உள் நாட்டு தொழில் வளர்ச்சியை அதிகரிக்க விடாமல் வெளி நாட்டுக்காரனுக்கு நிலத்தையும், தண்ணீரையும், மின்சாரத்தையும், சலுகை வரியையும் வழங்கி அதுதான் தொழிற்புரட்சி என்று முழங்கும் அரசுகளைப் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரிய பெரிய கோடீஸ்வரர்களின் பாக்டரிகளில் பவர் கட்டாகாது. ஆனால் சாதாரண தொழில் செய்யும் முதலாளியின் பேக்டரிக்கு கரண்ட் கொடுக்காது அரசு.

அரசியல்வாதிகள் மிகச் சரியாக மக்களை எடை போட்டு வைத்திருக்கிறார்கள். தேர்தலின் போது ஓட்டுப் போடும் தேதிக்கு முதல் வாரம் வரையிலும் கரண்ட் கட் இல்லை என நண்பர்கள் சொன்னார்கள். தேர்தல் முடிந்து முடிவு வந்ததும் மறு நாளே கரண்டை கட் செய்து விட்டார்கள் என்றார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். உடனே அரசை விமர்சிக்க ஆரம்பித்து விட்டான் என்று கூவ வேண்டாம். உண்மையைச் சொன்னேன்.

இரண்டாவது கேள்விக்குப் பதில் !

பென்னாகரம் – கிட்னி கிடைக்கும் ஊர்
தேர்தல் கமிஷன் – ஜோக் இலவசமாய் கிடைக்கும் இடம்
வியாபாரிகள் யார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இங்கு விற்கப்படும் பொருள் – பறங்கியர்களின் துப்பாக்கிக்கும், அடிக்கும் செத்துப் போன சுதந்திரத்திற்காக உயிரைக் கொடுத்தவர்களின் ஆத்மா அவர்களின் நம்பிக்கை. இந்தியாவின் சுதந்திரம் பென்னாகரத்தில் விற்கப்படுகிறது.


செலக்டிவ் அம்னீஷியா தமிழர்கள் !

மார்ச் 26, 2010

மருந்துக் கடையில் காலாவதியான மருந்து விற்பனையை தற்போதுதான் கண்டு பிடித்தது போல செய்தி தாள்கள் செய்தி வெளியிடுவது வியாபார தந்திரம். பல காலமாய் நடந்து வரும் அக்கிரம் தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது.  காலாவதியான மருந்தினால் பலியானோர் எத்தனை பேரோ யாருக்குத் தெரியும்?  நோய் தீர மருந்து வாங்கியவர்களை தங்கள் குடும்பம் வசதியாக வாழ கொலை செய்த மருந்துக் கடை முதலாளிகளையும், மருந்து விற்ற விற்பனையாளர்களையும் சட்டம் என்ன செய்து விடப்போகிறது.

சாட்சியே இல்லாமல் கொலை செய்த இந்தப் படுபாவிகளும் நாளை ஜாமீனில் வெளி வந்து விடுவார்கள். சாட்சி ஏதும் வராது என்பதால் குற்றவாளிகளும் தப்பி விடுவார்கள். ஏனென்றால் சட்டம் சொல்கிறது ஆயிரம் குற்றவாளி தப்பலாம், ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று. காலாவதியான மருந்தை வாங்கிச் சாப்பிட்டவன் செத்துப்போயிருப்பான். அவனா சாட்சி சொல்ல வரப்போகிறான் ?

இந்தச் சட்டம்தான் மக்களைக் காப்பாற்றுகிறதாம் வேடிக்கையாய் இல்லை.

ஹோட்டலை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பிச் சாப்பிடும் உயர்ரக உணவுகளில் கலக்கப்படும்  மசாலாவை தயாரித்து ஒருமாதம் ஃப்ரிஜ்ஜில் வைத்திருப்பார்கள். ஆட்டினை தோலுறித்து சில்லிட்ட அறையில் தொங்க விட்டு வைப்பார்கள். மீனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குளிர்பதன அறையில் வைக்கப்படும் உணவு அத்தனை சிறந்ததா என்று எவராவது யோசிப்பது உண்டா?

மீந்து போன மாவு, முதல் நாள் சுட்ட பஜ்ஜி,  கொதிக்கும் பாலில் புது பாக்கெட் பாலை பிய்த்து ஊற்றி, பால் கொதிக்கும் முன்பே டீ போட்டுக் கொடுக்கும் டீக்கடைகள்,  மீந்து போன குருமா, புளித்துப் போன இட்லி மாவு என ஹோட்டல்களில் நடக்கும் அயோக்கியத்தனத்தை அரசு பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்ன செய்து விட்டோம்.

பெரிய பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் நடக்கும்  அயோக்கியத்தனமான செயல்களைப் பட்டியலிட்டால் நடுங்கிப் போய் விடுவீர்கள். மனிதனின் அத்தியாவசிய உணவுப் பொருளில் கலப்படம் இல்லாத பொருள் ஏது ?

கிராமப்புறங்களில் விற்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவை கலப்படப் பொருட்கள் அல்லது டூப்ளிகேட் பொருள்கள் தான்.

வியாபாரிகளின் கைகளிலும், நீதியின் கைகளிலும் கொடுக்கப்பட்டிருக்கும் தராசு எப்போதும் ஒரு பக்கமாய் சாய்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு அது நேராகவே இருப்பதாகப் போதிக்கப்படுகிறது. இது தான் அரசியல் என்பது.

பெரும்பான்மையான மக்களுக்கு நீதி என்ற ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையை ஊட்டினால் தான் தான் ஆள முடியும் என்பதால் ஆட்சியாளர்கள் நீதி இருப்பது போலவும், சட்டத்தின் ஆட்சி நடப்பது போலவும் பம்மாத்து காட்டுவார்கள்.  இங்கு ஒரு உதாரணம் பார்த்து விடலாம்.

பென்னாகரத்தில் காசு விளையாடுகிறது. ஜன நாயகத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அல்லலுறும் மக்கள் வேறு வழி இன்றி தங்களையே ஆயிரத்திற்கும், ஐநூறுக்கு விற்கிறார்கள். வறுமை தாங்காமல் கிட்னியை விற்றவர்களுக்கும், கோடிக்கணக்கான மக்கள் உயிர் கொடுத்து வாங்கிக் கொடுத்த ஜன நாயகத்தை விற்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

தேர்தலைக் கட்டுப்படுத்த தேர்தல் கமிஷன் இருக்கிறது என்கிறார்கள். தேர்தல் கமிஷனருக்கு காசு விளையாடுவது தெரிகிறது. அவரால் என்ன செய்து விட முடியும் தற்போது?

இதுதான் இந்தியாவின் சட்டம். இது தான் இந்தியாவின் நீதி….

கேலிக்கூத்து ! கேலிக்கூத்து….. !!!

தமிழர்களுக்கு எப்போதுமே ஒரு நோய் உண்டு அது செலக்டிவ் அம்னீஷியா.  காலாவதியான மருந்துப் பிரச்சினையில் மற்றவற்றை மறந்து விட்டார்கள்.


கோடம்பாக்கம் கும்மாங்குத்துகள்

மார்ச் 20, 2010

சமீபத்தில் இளம் துணை இயக்குனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இவர் புகழ் பெற்ற இயக்குனரிடம் வேலை செய்து வருகிறார். அவர் சொன்ன சில சம்பவங்கள் சுவாரசியமாய் இருந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

சினிமாவில் முதல் படத்திலேயே ஜாக்பாட் அடித்தால் தான் இயக்குனர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். முதல் படம் ஊத்திக் கொண்டால் கோகயாதான். முதல்படத்திலேயே வெற்றிக் கொடி கட்டிய இயக்குனர்களைத் தேடி தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்பார்கள். புத்திசாலி இயக்குனராக இருந்தால் பிழைத்துக் கொள்வார். காசுக்கு ஆசைப்படுபவராக இருந்தால் அத்தோடு முடிந்தது கதை.

புது முகங்களை வைத்து படமெடுப்போருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தால் தான் உண்டு. ஏதாவது வித்தியாசமாய் படத்தில் இருக்க வேண்டும். அல்லது ஏதாவது பிரபலங்களின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். வதந்திகளைக் கிளப்பி விட்டு செயற்கையாக பரபரப்பை எழுப்புவார்கள். அந்தப் பரபரப்பின் சூட்டில் படம் முதல் பத்து நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடி விட்டால் வெற்றி இயக்குனர் என்ற பட்டத்தை பெறுவார் இயக்குனர். வெற்றித் தயாரிப்பாளர் என்ற பெயரைப் பெறுவார் தயாரிப்பாளர். வதந்திகளை கிளப்ப காசு வாங்கிக் கொண்டு செய்திகளை எழுதும் நிருபர்கள் இருப்பதாகச் சொன்னார். நக்கீரனிலும், ஜூவியிலும் வரும் கிசு கிசுக்களை சம்பந்தப்பட்ட நடிக  நடிகர்களின் மேனேஜர்களே காசை வாங்கிக் கொண்டு சொல்லி விடுவாதகவும் சொன்னார். கிசு கிசுக்களை உடனடியாக வெளியிடுவதில் இந்த இரு பத்திரிக்கைகளும் தான் முன்னனி வகிக்கின்றன என்றும் சொல்லிச் சிரித்தார்.

திரு சங்கிலி முருகன் அவர்களின் தயாரிப்பில் உருவாகி சன் டிவி பிக்சர்ஸ் மூலம் வெளியிடவிருக்கும் திரைப்படம் கூட ராசிக்காக  விஜய்யின் அப்பாவால் சங்கிலி முருகனின் (ராசி!) பேனரில் தயாரிப்பதாக பேசிக் கொள்கிறார்கள். உண்மையா என்பது தெரியவில்லை.  இப்படத்தின் மூலமாக இருபதுக்கும் மேலே லாபம் என்றும் பேசிக் கொள்கிறார்களாம்.

துணை இயக்குனரின் நண்பர் ஒருவர் செண்டிமெண்ட், நகைச்சுவை, சண்டைகள் என்று வெகு வித்தியாசமான கதைக் களத்தில் முழு ஸ்கிரிப்டுகளை தயார் செய்து வைத்திருப்பதாகவும் ஒவ்வொரு ஸ்கிரிப்ட்டும் 1000 சதவீத வெற்றிக்கு அச்சாரம் போடும் என்றும் கண்கள் அகலச் சொன்னார். படம் ஆரம்பிப்பதும் முடிவதும் தெரியாதபடி வெகு இயல்பான கதையோட்டத்தோடு ஸ்கிரிப்டுகளை காட்சிப்படிமங்களாக எழுதி வைத்திருப்பதாகவும், பாடல்களில் வர வேண்டிய கருத்துகள், இசைக்கோர்வையின் மாடல் என்று கலந்து கட்டி ரகளையான பல ஸ்கிரிப்ட்டுகளை அவர் வைத்திருப்பதாகவும் சொன்னார். என்ன பிரச்சினை என்றால் ஓப்பனிங் சேல்ஸ் இருக்கும் ஹீரோக்கள் நடித்தால் வெற்றி நிச்சயம் என்பதால் அவ்வாறு மார்க்கெட் உள்ள நடிகர்களின் கால்சீட்டுக்கு முயற்சிப்பதாகவும், ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாகத் தெரியவில்லை என்றும் ஆனால் தொடர்ந்து இருவரும் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் சொன்னார்.

கோடம்பாக்கத்தில் நடக்கும் ஹீரோக்களின் அழிச்சாட்டியத்தைப் பற்றி விலாவாரியாக சொன்னார் அவர். கதை நன்றாக இருப்பதாக ஹீரோ முடிவு செய்து விட்டால், தயாரிப்பாளரை அவரே தான் முடிவு செய்வாராம். கதாநாயகியையும்(????) அவரே தான் முடிவு செய்வாராம். மற்ற டெக்னீஷியன் விஷயத்தில் சில ஹீரோக்கள் தலையிட மாட்டார்களாம். கோடம்பாக்கத்தில் கிட்டத்தட்ட 200 தயாரிப்பாளர்கள் இருக்கின்றார்கள். ஆனால் ஓப்பனிங் சேல்ஸ் இருக்கும் ஹீரோக்கள் 10 பேர் மட்டும்தான் இருக்கிறார்கள். தொடர்ந்து பத்து நாட்கள் ஹவுஸ்புல்லாக ஒரு படம் ஓடி விட்டால் படம் சக்சஸ்தானாம்.

புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் பல படங்களில் சில மட்டும்தான் வெற்றி பெறும். மற்றவை சேட்டிலைட் சேனலுக்காக எடுக்கப்படுகின்றன என்று வேறு சொன்னார்.

இதுபோல நடிகைகளைப் பற்றிச் சொன்ன சில சுவாரசியமான சம்பவங்களை விரைவில் எழுதுகிறேன்.


%d bloggers like this: