முட்படுக்கையின் மீது நான் – நடிகையின் கண்ணீர்

ஜனவரி 31, 2010

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இந்த நடிகைக்கு இன்னும் மவுசு குறையவே இல்லை.

என்னைச் சந்திக்க வேண்டுமென்று கேட்ட போது என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எழுதி வைக்க மாட்டீர்களே என்ற கேள்வியுடன் தான் பேசவே ஆரம்பித்தார்.

அசடாக சிரித்து வைத்தேன். உங்க நண்பர் குஞ்சாமணி குலசேகரனைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி கிலியைக் கிளப்பினார் நடிகை. அவனின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து வைத்தேன்.

பிளாக்கில் எழுதுவான். அப்போது பார்க்கலாம். பயல் இப்போ நம்மை விட்டு ரொம்ப தூரத்துல இருக்கான்.

பீச்சோரம் இருக்கும் பங்களாவிற்கு மாலை நேரத்தில் தானே காரை ஓட்டிக் கொண்டு வந்தார். வாட்சமேன் வந்து விபரம் சொல்ல, நான் பங்களாவின் உட்புறமிருக்கும் நீச்சல் குளத்தருகே நடிகையை வர வேற்க நின்று கொண்டிருந்தேன். ஏனென்றால் காரை குளத்தருகே தான் பார்க்கிங்க் செய்ய முடியும்.

பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின்பு, அங்கேயே இருந்த நாற்காலியில் அமர்ந்தோம்.

சூடாக சுக்கு போட்ட டீயை பரிமாறினேன். அப்போது பார்த்து வீட்டிலிருந்து போன் வர, யாரென்றார். சொன்னேன். போனை வாங்கிக் கொண்டு என்னிடமிருந்து நகர்ந்தார். மனைவியும், நடிகையும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தனர். என்ன பேசினார்களோ தெரியவில்லை. பேசி முடித்து திரும்பி வந்தார். வாடிப்போன முகம், சற்றே மலர்ச்சியாய் இருந்தது.

”பிசினெஸ்ஸெல்லாம் எப்படி போவுது? ” என்று ஆரம்பித்தேன்.

”ம்.. போவுது..போவுது” என்றார்.

”என்னாச்சு? ” என்றேன்.

”கோடிக்கணக்கில் பணமிருக்கு அனாதி. இருந்து என்ன பயன்?” கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

இறுகிய முகத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை நேரத்து சூரிய வெளிச்சத்தில் வெகு அழகாய், கண்கள் பளபளக்க தேவதை போல அமர்ந்திருந்தார் என் முன்னே.

பெரிய பிரச்சினை போலிருக்கு என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.

”கணவரைப் பற்றி நினைச்சா தூக்கமே வர மாட்டேங்குது அனாதி. முதல் மனைவியை டிவோர்ஸ் செஞ்சா மாதிரி வேற எவளாது கிடைச்சா என்னையும் டிவோர்ஸ் செஞ்சிருவாரோன்னு பயமா இருக்கு. உள்ளுக்குள்ளே குத்துது அனாதி. நான் ஏன் இந்தத் தப்பைச் செய்தேன்னு நினைச்சு நினைச்சு தினமும் அழுதுக் கிட்டே இருக்கேன் அனாதி. அந்தப் பொண்ணு எப்படி அழுதிருக்கும்னு இப்ப தோணுது. என்ன செய்யறதுன்னு ஒன்னுமே புரியவில்லை அனாதி” என்று சொல்லி அழுதார்.

”அடிக்கடி வெளி நாட்டுக்கு வேற போயிடுறாரு. பிசினஸ், பிசினஸ்சுன்னு வாரம் பத்து நாளுக்கு வீட்டுக்கே வருவதில்லை. கோடிக் கணக்கில என் அக்கவுண்டுல பணமா கொட்டுறாரு. அவரைப் பார்த்தாலே அப்படியே மயங்கிப் போகிறேன் அனாதி. அவரு கண்ணைப் பார்த்தாலே என்ன கேட்க நினைச்சனோ அதெல்லாம் மறந்து விடுகிறது. அவரு என்னம்மான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டா போதும் எனக்கு அப்படியே உருகிடுது அனாதி. ரொம்ப பயமா இருக்கு அனாதி ” என்று சொல்லி மேலும் தொடர்ந்தார்.

அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரச்சினை இதுவல்ல என்று புரிந்தது. பெரிதாய் என்னவோ இருக்கு.

நடிகையின் கணவர் பெரிய கம்பெனியின் முதலாளி. கோடிக் கணக்கில் டர்னோவர் செய்யும் கம்பெனி. அழகன் என்றால் அழகன் அப்படி ஒரு அழகன். நாற்பத்து இரண்டு வயதில் இருபது வயதுக்காரர் போல இருப்பார். எனது நெருங்கிய நண்பர்.

முதல் மனைவி சொந்த மாமா பெண். என் மீது அண்ணா அண்ணா என்று பாச மழை பொழியும் பெண். நண்பரின் மீது உயிரையே வைத்திருந்தார் அந்தப் பெண். ஏன் டைவர்ஸ் ஆனது என்று இன்றும் எனக்குப் புரியவில்லை.

நடிகையும் அந்தப் பெண்ணும் உயிருக்கு உயிரான தோழிகள்.

(தொடரும் விரைவில்)


தர்மம் கடைசி மூச்சு விடுகிறது !

ஜனவரி 26, 2010

அரசியல்வாதிகளும், ரவுடிகளும் மிகவும் நல்லவர்கள். இவர்களை விட மிகவும் கொடுமையானவர்களால் தான் இவ்வுலகம் நிரம்பிக் கிடக்கிறது. தர்மத்தையும், நீதியையும், மனச்சாட்சியோடு காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் அவர்கள் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விரைவில் எழுதுவேன். அதுவரை பொறுத்தருள்க.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் – இந்திய மக்களுக்கு கிடைத்த மிகப் பெரும் ஆயுதம். அச்சட்டத்தினால் என்ன பயன்? அதை வைத்துக் கொண்டு தனியாளான சமூக மனிதன் என்ன செய்து கிழித்து விட முடியும். சட்டங்கள் பேப்பரில் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு கீழே எழுதப்பட்டிருக்கும் செய்தி ஒரு உதாரணம்.

இன்றைய தினமலரில் ஒரு செய்தி.

மகாராஷ்டிரா புனேயைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சதீஷ் ஷெட்டி என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம், ஊழல்களை வெளிப்படுத்தி, மக்களுக்கு நன்மை செய்து வந்தார். இவர் சமீபத்தில் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

சமூக ஆர்வலர்களை சமூக விரோதிகள் தங்களின் ஊழல் வெளியே வரக்கூடாது என்பதற்காக வெட்டிக் கொல்வதைத் தடுப்பது யார்? தடுக்க வேண்டிய ஆதிக்கசக்திகளும், ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் காவல்துறை, பூனைப்படை பாதுகாப்போடு வலம் வருகின்றார்கள். பெரும் பணக்காரர்கள் அடிதடிகளோடு வலம் வருகின்றார்கள். ஏழைகளும், மத்திய தர வர்க்க மக்களும் சமூக விரோதிகளின் கருணையின் காரணமாய் உயிரோடு உலவுகின்றார்கள். சமூக விரோதிகளும், ஆதிக்க சக்திகளும் நினைத்தால் நினைத்த மாத்திரத்தில் தனி ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா? கேட்க நாதி யார் இருக்கின்றார்கள் 61வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியாவில்.

மீடியாக்கள் என்றைக்கோ அதிகார வர்க்கத்தின் அடியாளாகி விட்டன.

பிறகு காவல்துறையும், அரசியல் சட்டங்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

டென்னிஸ் விளையாட வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் போலீஸ் அதிகாரியை பத்தொன்பது ஆண்டுகளாக காவல்துறையும், சட்டமும் என்ன செய்து கிழித்து விட்டன?

இப்படிப் பட்ட சூழ் நிலைக்கு இந்திய நாட்டைக் கொண்டு வந்து விட்டவர்கள் இத்தனை காலமாய் நாட்டை ஆண்டு வந்தவர்கள் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்க முடியுமா?

இந்தியா தனது சுதந்திர தினத்தை வரலாறு காணாத பாதுகாப்போடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

தர்மம் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது.


1000க்கு 2000ம் – போட்டு பார்க்க ரெடி !

ஜனவரி 26, 2010

சமீபத்தில் தான் தேர்தல் கமிஷன் தனது வைர விழாவைக் கொண்டாடியது. துணை ஜனாதிபதி அவர்கள் தேர்தலில் பயன்படுத்தும் மது, பணம் இவற்றை ஒழிக்க வேண்டுமென்று தன் பேச்சின் போது குறிப்பிட்டார். திருமதி சோனியா காந்தி அவர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்றும் பேசியிருக்கிறார். மிகவும் நல்ல விஷயம். திருமதி சோனியா காந்தி அவர்கள் நினைத்தால் குற்றப் பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்யும் சட்டங்களைக் கொண்டு வரலாம். உள்ளத்தில் இருக்கிறது. சட்ட வரைவாக வர அம்மையார் மனது வைக்க வேண்டும். திருமதி சோனியா அவர்கள் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை முன்னிட்டு, ஆட்சியும் அதிகாரமும் குற்றவாளிகளிடம் சென்று விடக்கூடாது என்று மேற்படி சட்டத்தை தன் கட்சி ஆட்சியின் போதே கொண்டு வந்தே தீருவார் என்று நம்பலாம்.

இலவசத்தினால் தமிழக சென்று கொண்டிருக்கும் பாதையினையும், தமிழகத்தை ஆளும் கட்சிகள் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே தமிழக மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் கொடுமைகளையும் அப்பட்டமாக சுட்டிக் காட்டி இருக்கிறார் பதிவர் ஒருவர்.

http://skyuvaraj.blogspot.com/2010/01/blog-post_22.html

அரசியல்வாதிகளிடம் நெருக்கம் கொண்ட எனது நண்பர் “ அந்தக் கட்சி வோட்டுக்கு 1000 கொடுத்தால், நாம் 2000 கொடுப்போம் என்று மாற்றுக் கட்சியில் முடிவு செய்திருக்கின்றார்கள் என்று பேசிக் கொள்கின்றார்கள்” என்றார். ஒரு நோட்டுக்கு பதிலாக இரண்டு நோட்டு. வாழ்வா சாவா ஒரு கை பார்த்து விடலாமென்று முடிவு செய்திருக்கின்றார்கள் என்று வேறு பல நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்தும் செய்திகள் வந்தன.

இந்திய ஜனநாயகத்தை காசுக்கு விற்கும் ஏழை மனிதர்களின் கூட்டமும், அதை காசுக்கு வாங்கும் கட்சிகளும் வைர விழா நடத்தும் தேர்தல் கமிஷனை பார்த்து கேலியாக பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றார்கள். இன்றோ நாளையோ வெளி நாட்டு அசுர சக்தி ஒன்று ஏதாவதொரு கட்சியை தன் கைப்பாவையாக மாற்றி, காசைக் கொட்டி அதிகாரத்தைப் பிடித்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அந்நியருக்கு கூழைக் கும்பிடு போடும் அரசியல்வாதிகள் இருக்கும் போது மேற்படி சம்பவம் நடந்தாலும் நடக்கும். காசுக்கு வோட்டு வாங்கும் கலாச்சாரம் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை கொண்டு வந்து சேர்த்து விடும்.

இந்தியாவின் மீது உண்மையில் அக்கறையும், தேசப்பற்றும் கொண்டவர்கள் காசுக்கு ஓட்டு என்ற கலாச்சாரத்தை ஒழித்துக் கட்ட முயல வேண்டும். வோட்டுக்கு காசு கொடுக்கும் கட்சிகள் தேர்தலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். என்ன செய்யப்போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

வைர விழாவை நடத்தி உலகத்தின் மிகச் சிறந்த ஜன நாயக நாடு இந்தியா என்று பல நாட்டுப் பிரதி நிதிகள் கூடியிருந்த கூட்டத்தில் பேசிய தலைமைத் தேர்தல் கமிஷனர் அவர்கள் வோட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறார் என்று தெரியவில்லை. வரப்போகும் தமிழக சட்டசபைத் தேர்தலிக் கொட்டப்போகும் பண மழையினை தேர்தல் கமிஷன் என்ன செய்து தடுக்கப்போகிறது என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.


சிறந்த தமிழ்படம் ஆதவன் தேர்வுக்குழுவில் நக்மா

ஜனவரி 24, 2010

இந்திய தேசிய திரைப்பட விருதுக்குழுவில் இடம் பெற்ற ஒருவர் தேர்வின் போது சினிமா நடிகர்களின் தலையீடு இருந்ததாக வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். சிபாரிசுகள் இல்லாமல் இந்தியாவா? அதிலொன்றும் வியப்புகள் இருக்காது.

கடந்த ஆண்டு வெளிவந்த எத்தனையோ சிறந்த தமிழ்ப் படங்கள் இருக்கையில் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படம் என்ற விருது கிடைத்திருக்கிறது என்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திரைப்படத்தேர்வுக் குழுவில் நக்மா அவர்களும் இருக்கின்றார்கள் என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே நக்மா பற்றிய சர்ச்சைகள் பல உண்டு. வேறு வழி இன்றி தேர்வுக் குழுவினரின் தேர்வு பற்றிய சந்தேகங்கள் எழுவது நியாயம் தானே.

சிபாரிசுகளால் தரமற்றவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கானல் நீரைப் போன்றது என்பது உண்மையானாலும் கூட, அந்த சிபாரிசுகளால் கிடைக்கக் கூடிய நன்மைகள் தரமற்றவர்களுக்கு கிடைத்து விடுகிறது என்பது நம்மைச் சுடும் உண்மை.


புதிய குதிரைகள் விற்பனைக்கு வருகின்றன நாள்தோறும் !

ஜனவரி 21, 2010

அது ஒரு சந்தை. அந்தச் சந்தையில் பணக்காரர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். வாங்குபவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள்.

விற்பவர்களோ ஏழைகள். இந்த ஏழைகளுக்கு ஆசையென்னும் ஆர்வமும், நுகர்வுக் கலாச்சாரத்தின் நிழல்களும் மட்டுமே ஆனந்தம் தரும். அப்படிப்பட்ட ஏழைகள் விற்பனைக்கு கொண்டு வருவது குதிரைகள். அக்குதிரைகளின் சொந்தக் காரர்கள் அந்த ஏழைகள்.

குதிரைகளின் நான்கு கால்களும், அடர்ந்த கழுத்து முடிகளும், வாளிப்பான பின்புறங்களும் பார்ப்பவரின் உள்ளங்களை கவர்ந்து விடும் அளவுக்கு அழகானவை. அவை நடந்து வந்தால் ஏறி இறங்கும் பின் புறங்களைப் பார்ப்பவர்களுக்கு காமம் கொப்பளிக்கும். அதன் கண்கள் இருக்கின்றனவே ஆகா சொல்ல வார்த்தை ஏது.

ஏற்கனவே பல கவிஞர்கள் பாடிப் பாடி சலித்துப் போய் குதிரையின் மீதிருக்கும் மயக்கம் தீராமலே இறந்து போய் விட்டனர். ஆனால் இன்றைக்கும் புதிய புதிய கவிஞர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றனர். குதிரைகளைப் பற்றிப் பாடிக் கொண்டே இருக்கின்றனர். கவிஞர்களுக்கு இன்னும் குதிரை மீதான மயக்கம் போகவில்லை.

குதிரைகள் பற்றிய ஒரு கவிதையைக் கேளுங்கள்

அவளுடைய
அழகிய மென்மையான
கைவிரல்களால் கோதப்படும்
என் தலைமுடிக்கு,
சூட்டப்படும் வேறெந்த மகுடத்தையும்
நான் ஏற்கத் தயாராயில்லை.

கவிதையை எழுதியவர் வார்த்தைகளில் உணர்ச்சிகளை கொட்டிய கலில் ஜிப்ரான்.

எழுத்தாளர்கள் இருக்கின்றார்களே அவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்களின் கற்பனைகளில் வலம் வரும் குதிரைகள் பற்றிய வார்த்தைகள் கோடி கோடியாய் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன. வார்த்தைகளை பொங்கி வரும் நீர் வீழ்ச்சியாய்க் கொட்டுகின்றனர். அவர்களிடமிருந்து பிரவாகமெடுத்து வரும் குதிரைவார்த்தைகள் காகிதங்களில் சென்று தங்கி விடுகின்றன. இன்றைக்கும் டிஜிட்டலாய் ஆம் இல்லை குறியீடுகளால் உலகெங்கும் காற்று வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன அவ்வார்த்தைகள்.

குதிரைக்கு பதில் நுகர்வுப் பொருட்கள் தேவை எனக் கூவுவார்கள் குதிரையின் சொந்தக்காரர்கள். நுகர்வுப் பொருளான குதிரையை நுகர்ந்து கொண்டே இருப்பார்கள் வாங்குபவர்கள் குதிரைகளின் பின்புறங்கள் அகன்று பெரிதாகும் வரையில். அக்குதிரையினை பந்தயத்தில் ஈடுபடுத்துவார்கள் சில குதிரைலாயக்காரர்கள். அந்தப் பந்தயத்தில் குதிரை மீதேறி ஓட்டும் சில குதிரைப் பாகன்கள் கோடிகளில் குளிப்பார்கள். சிலர் பதவிகளில் கூட அமர்வார்கள்.

எங்கோ சென்று விட்டேன்.

இனி சந்தைக்கு வரலாம். சந்தையில் ஒரு பொருளைக் காட்சிப் படுத்தும் முன் பொருள் பற்றிய விளக்கவுரையினை குதிரை லாயத்தார் எழுதுகின்றனர். எழுதப்படும் இடம் குதிரைகள் அடைக்கப்பட்ட இன்னுமொரு லாயமாக இருக்கலாம். அந்த லாயம் நவீன வடிவங்களைக் கொண்டதாக இருக்கும். குதிரைகளுக்கு அவ்விடத்தில் ஓப்பனிங் கிடைக்கும். அதற்கு அக்குதிரைகள் தங்கள் உழைப்பினை வழங்க வேண்டும்.

கரன்சிக் கட்டுகளின் வரிசைகள் தான் குதிரைகளை மதிப்பிடுகின்றன. அக்குதிரைகள் எதற்கும் வேண்டுமானாலும் வாங்கப்படலாம். குதிரையின் சொந்தக்காரர்களால் விலைக்கு வைக்கப்படும் குதிரைகள் ரேசில் ஓட வைக்கப்படும். சில குதிரைகள் ஆரம்பத்திலேயே பலராலும் முறை வைத்து வாங்கப்பட்டு விடுகின்றன. அதிலும் சில குதிரைகள் ரேஸில் ஓடிக் களைத்துப் போய், ஏதாவது ஒரு லாயத்து சொந்தக்காரனிடம் அடைக்கலமாகி விடும். லாயத்துக்காரன் சும்மா இருப்பானா, சற்று நேரம் தனது தோட்டத்தில் குதிரை மீதேறி சவாரி செய்து விட்டு, ஏதோ காரணங்களைச் சொல்லி விரட்டி அடித்து விடுவான். மீண்டும் வயதான அந்தக் குதிரைகள் ரேஸுக்கு வரும். பல்லிழந்தால் மதிப்பிழந்து போகும் மாட்டுச் சந்தையில் விற்கப்படும் சில மாடுகள். அது போல ஓடிக் களைத்த குதிரைகள் பின்னர் கிழட்டுப் பொதிகளைச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். வயிற்றுப் பாட்டுக்கு எதை எதையோ சுமக்கும் அடிமாட்டு கழுதை ரேஞ்சுக்கு சென்று விடும் அக்குதிரைகள்.

இழப்பு குதிரைகளுக்கு மட்டும்தானே ஒழிய குதிரையை வளர்த்தவர்களுக்கோ, வாங்கியவர்களுக்கோ இல்லை என்பது தான் வருத்தமான செய்தி.

குறிப்பு : ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆடை அலங்காரப் போட்டியில் ஜட்ஜாக கலந்து கொண்ட எனது நண்பரின் அனுபவம் தான் நீங்கள் மேலே படித்தது – அனாதி என்னும் குடிகாரன்.


நடிகையின் தந்திரம் !

ஜனவரி 6, 2010

காசேதான் காமமடா தொடர் – இரண்டு

இத்தனை காலம் டெல்லியிலிருந்ததால் தொடர்ந்து பதிவுகள் இட முடியவில்லை. டெல்லி தற்போது சரியான கூலாக இருக்கிறது. ஹீட்டர் இன்றி அங்கு இருப்பது முடியாத காரியம் என்பதால் மீண்டும் சென்னை வாசம்.

டெல்லியில் சந்தித்த என் தோழியான நடிகை என்னிடம் பகிர்ந்து கொண்ட மற்றொரு நடிகையின் கதைதான் தொடர்ந்து வருவது.

வெகு சுருக்கமாய் தருகிறேன்.

அந்த நடிகை ஆரம்பத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சைடு ஆக்டிங்க்காக முயற்சி செய்து கொண்டிருந்தாராம். கொஞ்ச நாளில் ஏதோ ஒரு மாடலிங் கம்பெனியின் கண்களில் பட மீடியாவின் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். அந்த மாடலிங் கம்பெனியும் அவருக்கு நடிகையோடு வரும் தோழிக் கதாபாத்திரம், ஒரு காட்சி, இரண்டு காட்சி என்று தலையைக் காட்ட வாய்ப்புகளை பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அதற்கே வாரா வாரம் பார்ட்டி கொடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து இருக்கிறார்.

இதே போல, பார்ட்டிக்குச் சென்று கொண்டிருந்தால் சக்கையாகத்தான் வெளியே வருவோம் என்று எண்ணி வேறு வழிகளில் முன்னனியில் வர என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க பளிச்சிட்டிருக்கிறது ஒரு ஐடியா.

பிரபலமான இயக்குனரிடம் வேலை செய்து கொண்டிருந்த உதவி இயக்குனரைப் பிடித்து இருக்கிறார். உதவி இயக்குனர்களைப் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? அடிமையை விடக் கேவலமாய் வாழ்வில் முன்னேற துடித்துக் கொண்டிருக்கும் பாவ ஆத்மாக்கள் அல்லவா அவர்கள். அந்த வலியையே மனதுள் வைத்து முன்னேறுவது சிலர் தான். அந்த வலி தாங்காமல் விரக்தியாய் தவறு செய்ய ஆரம்பிப்பது பலர். சரி இந்த உளவியல் பிரச்சினை இப்போது நமக்கு வேண்டாம்.

அந்த உ.இக்கு தேவையான பண உதவி, அவ்வப்போது உடல் உதவி என்று அவரைத் தன் பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறார் நடிகை. அந்த உ.இயும் நடிகையின் மீது கொலை வெறி அன்பு கொண்டு தான் வேலை பார்த்த இயக்குனரிடம் அவ்வப்போது நடிகையைப் பற்றிச் சொல்லிச் சொல்லி அசைத்திருக்கிறார். இயக்குனரும் சற்றே அசர, நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடிகையும் இயக்குனரைச் சந்திக்க சென்றிருக்கிறார். இயக்குனருக்கு கொடுத்த அன்பளிப்புகளால் உள்ளம் குளிர்ந்த அவர் தன் அடுத்த படத்தில் ஹீரோயினாக வாய்ப்புக் கொடுத்தார்.

ஆரம்பத்தில் நடிகையின் படம் ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக செல்லவில்லை. என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையே அந்த உ.இ வேறொரு இயக்குனரிடம் சேர்ந்தார். அந்த இயக்குனர் இயக்க விருந்த கதையில் தனது நட்பு நடிகை நடித்தால் எங்கோ சென்று விடுவார் என்று கணக்குப் போட்டார் உ.இ. மெதுவாக வலை வீசினார். இயக்குனரும் வலையில் சிக்கிக் கொண்டார். நடிகையுடன் பல நாட்கள் தனிமையில் டிஸ்கஷன் நடத்தினார். முடிவில் ஹீரோயினாக ஆக்க ஒப்புக் கொண்டார். ஆனால் கதாநாயகனோ வேறொரு நடிகைக்கு சத்தியம் செய்து கொடுத்து அவளை அனுபவித்துக் கொண்டிருந்தார். இடையில் இந்த பிரச்சினை வர இயக்குனருக்கும் நடிகருக்கும் லேசான மனவருத்தம் ஏற்பட்டது.

நடிகை இயக்குனரிடம் நடிகருடன் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டினார். நடிகருடன் நடிகை சந்திக்க, நெருப்புப் பற்றிக் கொண்டது. வெளி வந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். தொடர்ந்து நடிகை நடித்த படங்களும் சூப்பர் டூப்பராக இன்றைக்கு தமிழகத்தின் உச்ச நாயகியாகி விட்டார். கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கொட்டுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்.

அந்த உ.இதான் இன்றளவுக்கு நடிகையின் ஆத்மார்த்த தோழன், காதலன், நண்பன் எல்லாம். ஏன் காதலன் என்று சொல்கிறேன் என்றால் நடிகையையும், உ.இயையும் வெளி நாட்டில் ஹோட்டலில் பார்க்க நேரிட்டுத்தான் என் தோழி நடிகையிடம் விசாரிக்க ஆரம்பித்தேன். அவள் மேற்கண்ட கதையைச் சொன்னாள்.

இன்றைக்கும் அந்த உ.இ தான் அந்த நடிகையை ஆள்வதும், அவள் பணத்தை ஆள்வதும். விரைவில் அது யார் என்று பத்திரிக்கைகள் எழுதத்தான் போகின்றன.

குறிப்பு : இது ஒரு சிறுகதை. யாரையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை. கதை மாந்தர்கள் அனைவரும் கற்பனையே.


சிங்கப்பூர் முருகனுக்கு அபவாதம் ! ஆன்மீகவாதிகள் கவனிப்பார்களா?

ஜனவரி 2, 2010

உலகத்தின் மிகப் புனிதமான, பழைய மதமாக கருதப்படும் இந்து மதம் பலவித ஆச்சார , அனுஷ்டாங்களை கொண்டது. உலகம் முழுதும் இந்துக் கலாச்சாரத்தை பிற மதத்தைச் சேர்ந்த மக்களும் சிலாகிப்பார்கள். கற்புக்கலாச்சாரத்தை முன்னிறுத்தி, குடும்ப வாழ்க்கையை மனிதனின் வாழ்க்கைத் தத்துவமாகவும், ஆதாரமாகவும் கொண்ட இந்து மதத்தில் கோவில் வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்துக்கள் கோவிலை தனது உயிருக்கும் மேலான ஒன்றாக கருதுவார்கள். கோவில்கள் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாமென்ற பழமொழியே இருக்கிறது. ஒரு ஊரில் இருக்கும் கோவிலால் தான் அந்த ஊரின் வளர்ச்சி, ஆன்மீகம், அன்பு, அமைதி ஆகியவை நிலைத்திருக்கும் என்பது பண்டைய காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் இருக்கும் இந்துக்களின் நம்பிக்கை. அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்களை பிரதிபலன் பாராது பல சிவாச்சாரியார்கள் பூஜை புனஸ்காரங்களை அந்த அந்த கோவில்களின் முறைப்படி செய்து வருவார்கள். பனிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.

நான்கு வேதங்களை முறையாக கற்ற வேத விற்பன்னர்களைக் கொண்டு கும்பாபிஷேகத்திற்கு நாள், கிழமை, திதி, வாரம் இவைகளை நிர்ணயம் செய்வார்கள். அதன் படி கும்பாபிஷேகம் நடைபெறும். இதுதான் இந்து மதத்தில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வழக்கம்.

வெளி நாடுகளில் இருக்கும் பல கோவில்களுக்கு தமிழகத்திலிருந்து செல்லும் வேத விற்பன்னர்கள் நாள் கிழமை பார்த்து கும்பாபிஷேகம் செய்து வைப்பார்கள். நிற்க.

தமிழ்க் கடவுள் முருகனுக்கு சிங்கப்பூரில் முருகன் திருக்குன்றம் என்ற இடத்தில் கோவில் ஒன்று இருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களிடையே அக்கோவில் மிகப் பிரபலமான ஒன்றாகும். 931, அப்பர் புக்கிதிமா, 10ம் கல் ஸ்டாப்பில் இயற்கை சூழ் நிலையில் முருகன் திருக்குன்றம் அமைந்திருக்கிறது. அந்தக் கோவிலின் இணையதளத்தினையும், கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழையும் கீழே இருக்கும் அக்கோவிலின் இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்.

http://www.muruganhilltemple.com/?page_id=44

தமிழர்களின் கடவுளான முருகப்பெருமான் வெளி நாட்டில் குடிகொண்டிருக்கும் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவது தமிழர்கள் அனைவருக்கும் மிகவும் உவப்பான சந்தோஷம் தரும் நிகழ்வாகும். ஆனால் இக்கும்பாபிஷேகம் நடைபெறும் தேதி தான் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
திருக்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க கிரிகைகள் தைமாதம் ஒன்றாம் தேதி 14.01.2010 அன்றே ஆரம்பித்து நடைபெற உள்ளன. தைமாதம் ஒன்றாம் தேதியிலிருந்தே கரி நாளாகும். சுவாமியை எந்திர பிரதிஷ்டை செய்ய நேத்ரம், ஜீவன் மிகவும் அவசியம். இவை இல்லையென்றால் அந்த நாள் குருட்டு நாள் என்று பெயர். அதோடு அல்லாமல் 15.01.2010 அன்று முழு சூரிய கிரகணம் வருகிறது. சரியான கிரகண தோஷ நாளில் கும்பாபிஷேகம் செய்ய அந்தக் கோவிலின் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

கிரகண தோஷம் போக்குவதற்கு சாதாரணமாக கிரகணப்பீடை விலகிய பின்பு, புண்ணியவாஜனம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இது அனைத்துக் கோவில்களிலும் நடைபெறும் வழக்கமான சம்பிரதாயம்.

ஆனால் குறிப்பிட்ட தேதிப்படி கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடருமானால் யாக சாலையில் இருக்கின்ற கலச பிம்பத்திலே இருக்கும் சுவாமிக்கு கிரக தோஷத்தை எப்படிப் போக்குவது? சமுத்திர ஸ்னானம் செய்ய வேண்டும். அதை எப்படி செய்ய இயலும்? யாக சாலையில் கலசத்திலே இருக்க கூடிய பிம்பத்திற்கு கிரகதோஷ பரிகாரம் செய்விப்பது எப்படி?

மேற்கண்ட கேள்விகளை முருக பக்தர்கள் கேட்கிறார்கள். கும்பாபிஷேகத்திற்கு எள்ளளவும் ஒத்துவராத ஒரு நாளை தேர்வு செய்திருப்பதாக பக்தர்கள் கருதுகின்றார்கள். வெளி நாட்டுக்கு வேறு தேதி என்றெல்லாம் சொல்லி தட்டிக் கழித்து விட முடியாது. நேரங்கள் மட்டுமே மாறும். மற்றவை எல்லாம் ஒன்றுதானே.

மேலும் தமிழகத்திலிருக்கும் பிள்ளையார்ப்பட்டியைச் சேர்ந்த திரு டாக்டர் பிச்சைக்குருக்கள் என்பவர்தான் இந்தக் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க விருப்பதாகவும் சொல்கிறார்கள். இவர் தமிழகம் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் பிரபலமானவர் என்றும் சொல்கின்றார்கள். இவர் ஏன் ஒரு குருட்டு நாளை கும்பாபிஷேகத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று யாருக்கும் புரியவில்லை. நாள், கிழமை பாராமல் தமிழ்க் கடவுள் முருகன் கோவிலுக்கு தற்போது செய்ய விருக்கும் கும்பாபிஷேகம் முருகன் மீது பக்தி கொண்டுள்ளவர்களின் மனங்களில் பெரும் வேதனையைத் தோற்றுவித்திருக்கிறது.

கோவில் நிர்வாகத்தினர் ஏதாவது செய்வார்களா ? முருகன் தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.

குறிப்பு : சிங்கப்பூரில் இருக்கும் அனாதியின் நண்பர் எழுதி அனுப்பிய இக்கட்டுரையினை இங்கு வெளியிடுகிறோம். இதற்கு ஏதேனும் மறுப்புத் தெரிவித்தாலும் அதனையும் வெளியிட தயாராக இருக்கிறோம். தொடர்பு முகவரி : velichathil@gmail.com.


%d bloggers like this: