நிச்சயம் பதறப் போகின்றீர்கள் !

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான கட்டுரை இது. படித்ததும் பதறி விட்டது. பலரின் கவனத்திற்கும் இக்கட்டுரை வர வேண்டுமென்பதற்காக இங்கு வெளியிடுகிறேன். நன்றி : குமுதம். இது தான் நீதியா? இது தான் சட்டமா? இது தான் ஜெயில் துறையினரின் வேலையா? யார் என்ன செய்வது இப்பிரச்சினையில்? தமிழகத்தின் சிறைத்துறையில் என்ன நடக்கிறது? காவல்துறையினர் மனச்சாட்சியே இல்லாமல் இருக்கின்றனரா? இன்னும் என்னென்னவோ கேள்விகள். பதில் தரத்தான் யாருமில்லை.

முதல்வர் மீது அதீத நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் இப்பிரச்சினை அவரது கவனத்திற்கு சென்றிருக்கும். நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.

மதுரை மத்திய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதி ஒருவருக்குப்
பதில் ஆள்மாறாட்டம் செய்து இன்னொருவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற பகீர் செய்தியை முதன்முதலில் குமுதம் ரிப்போர்ட்டர்தான் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இது தொடர்பாக வக்கீல் ஒருவர் தற்போது தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது `இதெல்லாம் உண்மைதானா’ என வியந்து அதிர்ந்து போனார்களாம் நீதிபதிகள். இந்த வழக்கு விசாரணை மூலம் முன்னாள் அமைச்சர் ஒருவரோடு உயரதிகாரிகளும் சிக்குவார்கள் என்கிறது, வக்கீல்கள் வட்டாரம்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் இளைய நயினார்குளத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர்தான் மணி என்ற ஆயுள் தண்டனைக் கைதிக்குப் பதிலாக ஜெயிலில் இருப்பவர். இந்தச் செய்தியை கடந்த 12. 8. 07 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் `வேறொருவருக்காக நான் ஜெயிலில் இருக்கிறேன்…’ என்ற தலைப்பில் வெளியிட்டோம். ஒரு கட்டத்தில் ஜெயிலுக்குள்ளேயே `நான் குற்றவாளியில்லை’ என போராடிய அவரது உயிருக்கு உயரதிகாரிகளால் ஆபத்து ஏற்பட்டது. அதையும் 2. 7. 2009 தேதியிட்ட நமது இதழில் `ஆபத்தில் இருக்கும் ஆள்மாறாட்டக் கைதி’ என வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில் கடந்த 12-ம் தேதி அவரை மதுரை ஜெயிலில் இருந்து திடீரென கடலூர் ஜெயிலுக்கு மாற்றிவிட்டார்கள். இது இன்னும் ஆபத்து என்பதை உணர்ந்த வக்கீல் சுரேஷ் என்பவர் சிவகுமாருக்காக வழக்குத் தொடர்ந்தார். அவரிடம் பேசினோம்.

“சிவகுமார் சின்ன வயதில், வசதியான அத்தை வீட்டில் வளர்ந்தவர். அதனால் அந்தக் குடும்பத்தின் மீது இவருக்கு அதீத பாசம். அத்தை மகன் மணியும் இவரும் நல்ல நண்பர்கள்.. 1994-ல் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார் மணி. கோர்ட்டில் அவருக்கு ஆயுள்தண்டனை கிடைத்தது. இந்த நிலையில் மணியும் அவரது உறவினரும் சிவகுமாரிடம், `நீ நம்ம குடும்பத்துக்காக ஒரு தியாகம் செய்வாயா?’ எனக் கேட்க.. `நீங்க எது சொல்லி நான் கேட்காமல் இருந்திருக்கேன். சொல்லுங்க..’ என வெள்ளந்தியாகச் சொல்லியிருக்கிறார் சிவகுமார்.

மணிக்கு ஜெயில் தண்டனை கிடைத்திருக்கிறது. `அவர் ஜெயிலுக்குப் போனால் பிசினஸ் எல்லாம் பாதிச்சிடும். அதனால் அவனுக்கு பதில் நீ ஜெயிலுக்குப் போகணும். அதிகபட்சமாக மூணு மாசத்துக்குள் உன்னை வெளியே எடுத்துடறோம். கோர்ட், போலீஸ், ஜெயில், உன் குடும்பம் எல்லாத்தையும நாங்க பார்த்துக்கிறோம் எனக் கூறியிருக்கிறார்கள். முதலில் சிவகுமாருக்கு தயக்கமாக இருந்தாலும் அத்தை குடும்பத்தின் மீதுள்ள பாசத்தின் காரணமாக தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு மணிக்குப் பதிலாக ஜெயிலுக்குச் செல்ல சம்மதித்தார் சிவகுமார்.

சிவகுமார் ஜெயிலுக்குச் செல்வதற்கு ஒப்புக்கொண்டதும் நெல்லையைச் சேர்ந்த அமைச்சரை (அப்போது அ.தி.மு.க. ஆட்சி) சந்தித்து விஷயத்தைச் சொன்னார்கள் மணி தரப்பினர். அவரும், பாளையங்கோட்டை ஜெயில் உயரதிகாரி உள்ளிட்ட சிலரை அழைத்து ஆள்மாறாட்டம் குறித்துப் பேசியிருக்கிறார்.. `நாங்க பார்த்துக்கிறோம்’ என அவர்கள் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். கோர்ட் ரிக்கார்டுபடி மணியின் வலதுபக்க மார்பில் தழும்பு இருக்கும்.. எனவே மணிக்காக ஜெயிலுக்குப் போகும் சிவகுமாரின் மார்பில் சிகரெட்டால் சுட்டு தழும்பை ஏற்படுத்தினர். சிவகுமாரை வீட்டுக்கு அனுப்பாமல் பத்து நாட்கள் போதையிலேயே தங்கள் கஸ்டடியில் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் சொல்லியபடி 24.11.2005 அன்று சிவகுமார், மணியாக கோர்ட்டில் ஆஜரானார். மணியாகவே அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று மாதங்களில் வெளியே வந்துவிடலாம் என நினைத்த சிவகுமாருக்கு, தான் `ஆயுள்தண்டனைக் கைதி’க்குப் பதிலாக வந்திருக்கிறோம் என மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தது. அதற்குள் பதினேழு மாதங்கள் ஓடிவிட்டன.. அவரை உள்ளே அனுப்பிய உறவினர் தரப்பில் இருந்து எந்த உதவியும் எட்டிப்பார்க்கவில்லை. குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டு வந்ததை நினைத்துத் தவித்தார். உண்மையைச் சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்த அவர், பாளையங்கோட்டை ஜெயிலைப் பார்வையிட வந்த மதுரை சரக ஜெயில்துறை உயரதிகாரியிடம் ஆள்மாறாட்டம் நடந்ததை விவரித்தார். அதைத் தொடர்ந்து நான்குநேரி கோர்ட்டிலும் நீதிபதியிடமும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

`இந்த ஆள் மாறாட்ட ஏற்பாட்டை பணம் வாங்கிக்கொண்டு செய்தார்’ என.. எந்த பாளையங்கோட்டை ஜெயில் அதிகாரியைக் குறித்து வாக்குமூலத்தில் சொல்லியிருந்தாரோ, அவரே மதுரை சிறைக்கு உயரதிகாரியாக வந்தார். அதனால் நாட்களை அச்சத்துடன் நகர்த்திக் கொண்டிருந்தார் சிவகுமார்.. தற்போது அந்த அதிகாரியும் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், அவர் உள்பட சிலர் மீது சிவகுமார் கோர்ட்டில் சொன்ன வாக்குமூலம், இப்போது அதிகாரிகள் சிலருக்கு நெருஞ்சி முள்ளாகக் குத்தத் தொடங்கியது. அவர் மீது தாக்குதலும் நடந்தது. இந்தச் சூழலில் அவரை இம்மாதம் 12-ம் தேதி மதுரை ஜெயிலில் இருந்து கடலூர் ஜெயிலுக்கு மாற்றினார்கள். இது அவரது உயிருக்கு ஆபத்து என்பதால் அவருக்காக இந்த வழக்கைத் தாக்கல் செய்தேன்!” என்றார் சுரேஷ்.

இந்த வழக்கில் ஆஜரான வக்கீல் ஜின்னா நம்மிடம், “இது விசித்திரமான வழக்கு. ஆள்மாறாட்டம் செய்து ஜெயிலில் அடைக்கப்பட்ட சிவகுமார் நான்கு ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறார். அவர் மீது ஏதேனும் குற்றம் இருந்தால் கூட அதற்கான தண்டனையை விட அதிக காலம் அவர் தண்டனை அனுபவித்துவிட்டார். கொலைக் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட மணி, இன்னும் வெளியே இருக்கிறார். வசதியானவர் என்பதற்காக அவரைப் பாதுகாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். சிவகுமாருக்கு நாங்கள் ஜாமீன் கேட்டு மனுசெய்த போதே பலத்த எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வந்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் `இதெல்லாம் உண்மையா..?’ என அதிர்ந்து கேள்வி எழுப்பினார்கள். அதுமட்டுமில்லாமல் வழக்கை விரைந்து நடத்தவும் அரசு தரப்பைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது முன்னாள் அமைச்சர், சில உயரதிகாரிகள் என்று பலரும் விசாரணைக்கு உட்படுவார்கள்!” என்றார் ஜின்னா.

பாசத்தின் காரணமாக இன்னொருவர் தண்டனையை, தான் ஏற்றுக்கொண்டு நான்காண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கும் சிவகுமார் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இப்போதுதான் தென்படத் தொடங்கியிருக்கிறது.

– கபிலன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: