அடகு வைக்கலாமா ?

24.09.2009 ஹிந்துவில் நிருபமா சுப்ரமணியனின் ” Planned Farmland sale to Saudis gives Pakistan jitters ” என்ற கட்டுரை வாசிக்க கிடைத்தது. சவுதி அரேபியாவிற்கு 5 லட்சம் ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதற்காக பாகிஸ்தான் அரசு லீசு அல்லது விற்பனையோ செய்யவிருப்பதாகவும் அதை ஒட்டிய நிலச்சுவான்தாரர்களின் கருத்தும், கட்டுரையாளரின் கருத்தும் முன்வைக்கப்பட்டு இருந்தன. சவுதி அரேபியாவில் விவசாயம் செய்ய ஏற்ற நிலவமைப்பு இல்லாத காரணத்தால் உணவுப் பொருட்களை அந்த நாடு இறக்குமதி செய்து வருகிறது. இறக்குமதியை தவிர்க்கும் பொருட்டு விவசாய நிலத்தை வேறு நாடுகளில் இருந்து லீசுக்கோ அல்லது விலைக்கு வாங்கியோ விவசாயம் செய்து உணவுப் பொருள் தேவையை ஓரளவுக்கு சமாளிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது. அந்த நாட்டைப் பொறுத்த வரை மேற்கண்ட முடிவு மிக நல்ல விஷயம்.

பாகிஸ்தான் அரசு மேற்படி கொள்கை முடிவிற்கு என்ன காரணத்தைச் சொல்கிறது என்று பார்த்தால், வெளி நாட்டு மூலதனம், மற்றும் பாலைவனத்தை விவசாயபூமியாக்கும் டெக்னாலஜி போன்றவையும், எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்கிறது. வேலைவாய்ப்பு கிடைத்தால் மக்கள் சந்தோஷமாயிருப்பார்கள். பாலைவனத்தை விவசாய பூமியாக்கும் டெக்னாலஜியை மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தலாம் மற்றும் இன்னபிற சலுகைகளும் கிடைக்கும். நாட்டிற்கு வருமானமும் கிடைக்கும். மேலும் சவுதி அரேபியாவும் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாகவும் இருக்கும் என்றும் சொல்கிறார் அந்த நாட்டின் மந்திரி ஒருவர்.

சவுதி அரேபியாவிற்கு நிலத்தை விற்கவோ அல்லது குத்தைக்கு விடவோ செய்வது என்பது மேலோட்டமான விஷயம். அதையொட்டிய இன்ன பிற விஷயங்களுக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இறக்குமதி செய்யும் இயந்திரங்களுக்கு இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விற்பனை வரி, ஏற்றுமதி வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அந்தப் பகுதியை முழு வரி விலக்கு பெற்ற பகுதியாய் அறிவிக்க வேண்டும். இலவச மின்சாரம் மற்றும் மேலும் சில சலுகைகள் வழங்க வேண்டும். அவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலையாட்களை அமர்த்தி விவசாய வேலைகளைச் செய்து பொருட்களை உற்பத்தி செய்து எந்தவித வரியும் இன்றி மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை தனது நாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். குறைந்த மூலதனம். அதிக வருமானம் என்பதற்குத்தான் மற்ற நாடுகளின் முதலீட்டாளர்கள் வேற்று நாடுகளில் தொழில் செய்ய வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உன்மை.

சவுதி அரேபியாவிற்கு தேவையான விவசாயப் பொருட்களை தங்களது விவசாயிகளின் மூலம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தாலென்ன என்று கேட்டால் அதற்கு அந்த நாட்டின் மந்திரி என்ன சொல்லுவார் என்று தெரியவில்லை.

இவ்விடத்தில் உள்ளூரில் தொழில் ஆரம்பிக்க அரசு வைத்திருக்கும் சில நடைமுறைகளை உங்களுக்கு நினைவுக்கு கொண்டு வருகிறேன். பாகிஸ்தானில் இருக்கும் ஒருவர் புதிய தொழிலை தொடங்கும் பொருட்டு இயந்திரம் இறக்குமதி செய்ய வேண்டுமென்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு அவர் கட்டாயமாக இறக்குமதி வரி கட்டிதான் ஆகவேண்டும். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அரசுக்கு வரியையும் செலுத்தியே ஆக வேண்டும். தன் நாட்டின் பிரஜைக்கு வழங்காத சலுகையை ஏன் வெளி நாட்டு முதலீட்டாளருக்கு வழங்க வேண்டுமென்று கேட்டால் வெளி நாடுகளில் இருந்து மூலதனம் தன் நாட்டிற்கு வருகிறதாம். அதனால் அன்னியச் செலவாணி லாபம் கூடுதலாகும் என்று சொல்லுவார்கள். அதற்குப் பதிலாக உள்ளூர் தொழிலுற்பத்தியை ஊக்குவித்தால் என்னவென்று கேட்டால் அரசிடம் பதிலிருக்காது என்றே தோன்றுகிறது.

மேற்படி பாகிஸ்தானின் கொள்கைக்கு எதிர்கருத்துகளும் இல்லாமல் இல்லை. மற்ற நாட்டினருக்கு நிலத்தை விற்பது என்பது அந்த நாட்டிற்கு தங்களது நாட்டை அடகு வைப்பது போன்றதாகும் என்று சிலர் சொல்கிறார்கள். மேலும் தண்ணீர்ப்பற்றாக்குறை இருக்கும் போது மற்ற நாட்டினரை விவசாயம் செய்ய அனுமதிப்பது ஏற்கனவே இங்கிருக்கும் விவசாயத்தை அழித்துவிடும் என்றும், அரசு உள்ளூர் விவசாய உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடுகளை செய்யலாம் அல்லவா என்கிறார்கள். மேலும் இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அமுல் போன்ற கோவாப்பரேட்டிவ் முறையில் விவசாயத்தை ஊக்குவித்து உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவும் அடையலாமென்றும் சொல்கிறார்கள்.

மேற்படி விஷயத்தை படித்தீர்கள் அல்லவா. அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவிற்கு வருவோம்.

இந்தியாவில் ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன் என்ற பகுதிகளை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அங்கு செயல்படும் வெளி நாட்டுக் கம்பெனிகளுக்கு இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, சலுகை விலையில் மின்சாரம், தண்ணீர் மற்றும் இன்னபிற சலுகைகளையும் வழங்கி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அரசே பொதுமக்களின் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அன்னிய நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது என்பதும் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரமாகும். தமிழ் நாட்டில் பெருந்துறை சிப்காட் விரிவாக்கத்திட்டத்திற்கு 1500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. வானம் பார்த்த பூமி, விவசாய பூமியாக இருக்க முடியாது என்பதால் சிப்காட்டிற்காக பொது மக்களின் நிலத்தை கையகப் படுத்துகிறோம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அந்த ஊர் மக்களோ எங்கள் பூமியை குழைந்தையை வளர்ப்பது போல வளர்த்து வருகிறோம் என்றும் தமிழக அரசு எங்களிடமிருந்து பூமியைப் பிடுங்கப் பார்க்கிறது என்றும், ஆயிரம் குடும்பங்களுக்கும் மேலாக சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுவோம் என்றும் சொல்லிப் போராட்டம் நடத்துகிறார்கள். மேலும் எங்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி மற்ற கம்பெனிகளுக்கு அதிக விலையில் விற்க முயலுகிறார்கள். ரியல் எஸ்டேட் வேலையை அரசே செய்வது அக்கிரமம் என்றும் சொல்கிறார்கள். ( செய்தி ஆதாரம் : ஒரு வாரப்பத்திரிக்கை)

உள்ளூர் உற்பத்ததியை உயர்த்த தொழிலுக்கு குறைந்த வட்டியில் கடன், தொழில் நடைபெற நல்ல சந்தைகள், வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தல் போன்ற தொழிலூக்கிகளைச் செயல்படுத்தினால் வேற்று நாட்டினரின் மூலதனம் தேவைப்படுமா ? நிச்சயம் தேவை இருக்காது என்றே நம்புகிறேன்.

பாகிஸ்தான் அரசு நிலத்தை மற்ற நாட்டினருக்கு வழங்குவதை நேரடி குத்தகை அல்லது விற்பனை என்று சொல்கிறது. இந்திய அரசு ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன் என்று சொல்கிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தால் கிட்டத்தட்ட ஒன்றுமில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

இவ்விடத்தில் மேலும் ஒரு வரலாற்றுச் சம்பவத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பழங்கால இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியாளர்களால் வியாபாரம் செய்யும் பொருட்டு இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயேக் கம்பெனிகளுக்கு குறைந்த விலையில் இந்திய நிலத்தை விற்கப்பட்டது என்கிறது வரலாறு. அதைத் தொடர்ந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இன்றைய சுதந்திர இந்தியா உருவாக கோடிக்கணக்கானவர்கள் தங்களின் உயிரை இழந்து பெற்றிருக்கிறார்கள் என்பதும் வரலாறு. அதைப் போன்றதொரு சூழ் நிலை வந்து விடுமோ என்ற பயம் ஏற்படுவது வியப்பில்லை. ஆட்சியாளர்கள் ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன் பற்றிய முழு விபரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். வெளி நாட்டுக் கம்பெனிகளிடம் வேலை கிடைக்கிறது என்பதற்காக நாட்டை அடகு வைக்கலாமா ?

நீண்ட நாட்களுக்குப் பிறகு
அனாதி

3 Responses to அடகு வைக்கலாமா ?

 1. soundr சொல்கிறார்:

  just another technique for colony formation.
  and it appears to be working well.
  if a person is duped once, its not his mistake.
  but if it happens again and again then its defenitely his mistake.
  happenings like this would continue until indians continue with their stupid mentality of “whatever is foreign is good and great”.

 2. சுந்தர் சொல்கிறார்:

  மிக அருமையான ஆய்வு …. எந்த பக்கமும் சாயாமல் , தெளிவான ஒரு பார்வை

  • அனாதி சொல்கிறார்:

   நன்றி சுந்தர். நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் மனதுக்கு உவப்பாய் இல்லை என்பது என் கருத்து. விளைவு விபரீதமாய் முடிந்து விட்டால் நம் சந்ததியினர் வெளி நாட்டுக்காரனிடம் அடிமையாய் அல்லவா கிடப்பார்கள்..

   தொலை நோக்குப்பார்வையில் சிந்தித்து இந்தியாவின் வளர்ச்சியை விரும்பும் தலைமை வேண்டும். திரு ராகுல் காந்தியோ அல்லது அத்வானியோ அல்லது வேறு யாரோவா செய்தால் பரவாயில்லை. இந்தியாவின் விதி எப்படி இருக்கப்போகிறது என்பதை விதி தான் சொல்ல வேண்டும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: