கேவலம்… ! கேவலம்…!

மாமன், மச்சான்கள் எதிரிகளாய் நிற்கும் இந்திய தேர்தல் போர்க்களத்தில் மாமன் ஒரு கட்சி, மைத்துனன் வேறொரு கட்சி, தாய் ஒரு கட்சி, தனயன் வேறு கட்சி என்று இன்றைய அரசியல் களம் குருஷேத்திரப் போரை நினைவுக்கு கொண்டு வருகிறது. குருஷேத்திரப் போர் இந்தியாவில் நடந்த காரணத்தின் விளைவாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இந்தியத் தந்தை தர்மப் போர் நடத்துகிறார் போல. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் சூடு சொரணையற்ற தமிழ் சமூகம் இன்றும் விழிக்காமல் உறங்கிக் கிடக்கிறது. ஜெகதீஸ் டைட்லருக்கு சீட் கிடைக்காமல் போன சமாச்சாரம் போல தமிழ் நாட்டில் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. நடக்குமா என்றும் தெரியவில்லை. அந்த அளவுக்கு ரோசம் கெட்டுப் போய், மானம் கெட்டுப் போய், பன்றியை விடக் கீழான தரத்தில் கிடக்கிறான் தமிழன். சினிமாக்காரனுக்கு கொடி பிடிக்கவும், விசில் அடிக்கவும், கட்சிக்காரனுக்கு கோஷம் போடவும் தன் நிலை மறந்து தமிழ் நாட்டில் பெருகி ஓடும் சாராய நதியில் தானும் மூழ்கி தன் குடும்பத்தினையும் மூழ்கடித்து சாக்கடையில் உழன்று கொண்டிருக்கும் தமிழனுக்கு என்ன சொன்னாலும் உரைக்கப்போவதில்லை. அவனுக்கு சிவப்புத் தோலும், தொடை ஆட்டமும், குவார்ட்டர் பிராந்தியும், கறி பிரியாணியும் போட்டால் பெண்டாட்டியைக் கூட கூட்டிக் கொடுத்து விடும் அளவுக்கு கலகக்காரனாக மாறி விட்டான். இருக்கட்டும் இன்றைக்கு கலகக்காரர்கள் தான் உலகளவில் பரபரப்பாய் பேசப்படுகிறார்களாம்.

அதிமுக திமுகவையும் திமுக அதிமுகவையும் திட்டுவது குற்றம் சொல்வது சகஜம். இரண்டும் பெரிய கட்சிகள், தங்களுக்குள் திட்டிக் கொள்வார்கள்,அவர்களின் பிழைப்பு. ஆனால் மற்ற உதிரிக் கட்சிகள் இருக்கின்றனவே அவைகள் எல்லாம் கட்சிகள் என்று எப்படித் தான் மக்கள் நம்புகிறார்களோ தெரியவில்லை. சந்தர்ப்பவாதத்திற்கு சாட்சியாய், பச்சோந்திகளுக்கு உதாரணங்களாய், நயவஞ்சக நரிகளாய், ரத்தம் உறிஞ்சும் அட்டைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்ற அக்கட்சிகள் லோக்சபா தேர்தலுக்கு ஒரு கட்சி, சட்ட சபை தேர்தலுக்கு ஒரு கட்சி என்று அணி மாறி மாறி மக்களை மகா கேனயர்களாய் ஆக்கி வருகிறார்கள். எப்படி மக்கள் அக்கட்சிகளை நம்பி ஓட்டுப் போடுகிறார்கள் என்றே புரியாமல் இருக்கின்றது. சரி.. மறந்து விட்டேன். சி.தோ. தொ.ஆ, கு.பி. க.பி இருந்தால் தான் பொ.கூ.கு.தமிழன் ஓட்டைக் குத்தோ குத்து என்று குத்தி குதறி விடுவானே.

திமுக அணியில் அங்கம் வகித்த போது எதிரணியினரைப் கூசாமல் பேசி, திமுக தலைவரை உள்ளம் குளிர வைக்கும் அக்கட்சிகள், அதிமுக அணியில் அங்கம் வகிக்கும் போது திமுக தலைவரை சாடி, அதிமுக தலைவரை உச்சி குளிர வைக்கும் தலைவர்களை தேர்தல் தோறும் பார்த்து வருகிறோம். அரசியலில் கொள்கை, கோட்பாடு இன்றி சீட்டுக்கு கட்சி நடத்தி வருவது தான் இப்படிப்பட்ட உதிரிக் கட்சிகளின் உண்மை நிறம். நேற்று ஒரு கட்சித் தலைமை. நாளை வேறொரு கட்சித் தலைமை என்று தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி அதற்கு ஒரு காரணத்தையும் சொல்லி வருவது அவர்களின் அக்மார்க் அயோக்கியத்தனத்திற்கு உதாரணம். திமுகவும் அதிமுகவும் சத்தியவான் சாவித்திரி வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருக்கும் கட்சிகளா என்ன? இவர்களுக்கு காங்கிரஸ் கூட்டணி அல்லது பாஜக கூட்டணி. உதிரிக் கட்சிகள் அவர்களின் தகுதிக்கு தகுந்தவாறும், சற்றுப் பெரிய கட்சிகள் அவர்களின் தகுதிக்கு தகுந்தவாறும் கூட்டணி காண்பது அரசியல் தத்துவமாம். பொய், பித்தலாட்டம், நம்பிக்கை துரோகம் மற்றும் வார்த்தைகளில் வடிக்க இயலாத கொடுமைகளை தேர்தலின் போதும், அதன் பிறகும் மக்களுக்குச் செய்து வரும் கட்சிகளை நம்பி நம்பி இன்னும் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கின்றனர் மக்கள். ஜாதி என்ற பெயராலும், மதமென்ற பெயராலும், ஏழை, பணக்காரன் என்ற பெயர்களால் அரசியல் கட்சிகள் மக்களிடையே பிரித்தாளும் சூட்சியினைச் செய்து வருகின்றன. அதை உணராமல் இன்னும் கட்சிகளின் பின்னால் தெரு நாயை விடக் கேவலமாய் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அடித்தால் கூட என்னவென்று கேட்க நாதியில்லா தமிழர்கள்.

அத்தோடு விட்டார்களா? உதிரிக் கட்சிகள் ஜெயித்தால் அரசியல் பேரத்தில் நிச்சயமாய் ஈடுபடுவார்கள் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை காட்டலாம். தமிழக கட்சி ஒன்றின் காரணமாக ஒரு முறை இந்தியா மறு தேர்தல் கண்டது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். எத்தனை கோடி பணம் வீணாய்ப் போனது. மக்களின் நலன் மீது கிஞ்சித்தும் கவலைப்பட்டதா அந்தக் கட்சி? எந்தக் கட்சியின் ஆட்சியைக் கலைத்தார்களோ அதே கட்சி தேர்தலுக்குப் பின்னர் முன்பு ஆட்சியைக் கலைத்த கட்சியுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்திருக்கிறது. பொதுமக்களின் நலன் மீது கொஞ்சம் கூட கவனமின்றி மக்களுக்கு உழைக்க வருகிறோம். உங்களுக்கு உழைக்க தாருங்கள் வாய்ப்பு என்று பேசி வரும் இக்கட்சிகளா மக்களுக்கு நல்லாட்சி தந்து விடப்போகின்றது. துக்ளக்கை மோசமான அரசனாகச் சொல்வார்கள். இவ்வகை அரசியல் கட்சிகளின் ஆட்சியை என்னவென்று சொல்வது? பெரிய கட்சிகளின் அரசியல் பேரமே வேறு. அவர்கள் விஞ்ஞான ஊழல் செய்வார்கள். இவர்களை எல்லாம் எப்படித்தான் ஒழித்துக் கட்டுவது ? எப்படி ஆப்பு அடிக்கலாம்?

அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஜன நாயகச் சட்டப்படி அது தவறு. ஆனால் எவன் சட்டத்தினை மதிக்கிறான்கள். ஆகையால் தொடர்ந்து படியுங்கள். எப்படி என்று சொல்கிறேன். ஊர் ஒன்று கூடி ஓட்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் என்று மொத்தமாக கணக்கிட்டு போட்டியிடும் இரு கட்சியினரிடம் மொத்தமாக வாங்கி விட வேண்டும். ஒரு குடும்பத்தில் இரண்டு ஓட்டுகள் இருந்தால் நான்கு லட்ச ரூபாய் எளிதில் கிடைத்து விடும். அதை வைத்து இன்னபிற காரியங்களை செய்து கொள்ளலாம். அப்படி பணம் வாங்குவது தப்பு என்று தர்மம் பேசினால் சும்மா ஓட்டுப் போட்டாலும் அரசியல்வாதி பத்தாயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிப்பான். ஆகையால் புத்திசாலித்தனமாக வாங்கிக் கொண்டு அவனைக் கொள்ளை அடிக்க விடுவது சாலச் சிறந்தது என்கிறேன். இப்படி ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் செய்தால் ஆட்சி கலைப்பு என்ற பிரச்சினைக்குள் அரசியல் கட்சிகள் நுழையவே மாட்டார்கள். அடிக்கடி தேர்தல் வந்தால் மக்களுக்கு பணம் கொடுத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் உதிரிக்கட்சிகளும் காணாமலே போய் விடுவார்கள். ஜாதிக் கட்சிகளும் ஒழிந்து போய் விடும். பொது மக்கள் சற்று சுதாரித்து ஒன்று கூடி ஆப்பு அடிக்க ஆரம்பித்தால் அரசியல்வாதிகள் கதி கலங்கிப் போய் விடுவார்கள். ஆனால் செய்ய விட மாட்டார்கள். அரசியல்வாதி அந்த அளவுக்கு முட்டாளா என்ன ? அவன் மக்களை பகுதி பகுதியாக பிரித்து அல்லவா வைத்திருக்கிறான்.

டோக்கன் வழங்குகிறார்கள் பிரியாணி சாப்பிட. மகளிர் உதவிக் குழுக்களை அரசியல் கூட்டங்களுக்கு வராவிட்டால் லோன் தரமாட்டோம் என்று மிரட்டுகிறார்கள். ஓட்டுப் போட்டு என்னை ஜெயிக்க வைத்து விடுங்கள். அதன் பிறகு மனை என்ன கார் கூட தருவேன் என்கிறாராம் ஒருவர். இதற்கெல்லாம் எங்கேயிருந்து பணம் வருகிறது என்று கேட்டால் வொயிட்டாக 5000 கோடிகள் இருக்கின்றன என்று சொல்கிறாராம் அந்த வேட்பாளர். வார இதழ் ஒன்றில் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டு இருக்கின்றார்கள். டோக்கனுக்கும், கைக்கடிகாரத்திற்கும், பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும் வெகு மலிவாக விலை போகிறார்கள் தமிழர்கள். ஒரு காலத்தில் கங்கை வரை சென்று, கடலாடி, நாடு விட்டு நாடு வியாபாரம் செய்து, எண்ணற்ற காவியங்களையும், உலக மறைகளையும் எழுதிய தமிழ் இனம் இன்று டோக்கனை எதிர்ப்பார்த்து நிற்பது கேவலம்.. கேவலம்.. கேவலம்.

மேற்படி கட்டுரை எழுத உந்துதலாய் இருந்தது : சில்லறை மாற்ற காசு கொடுத்து வாங்கிய நக்கீரன் இதழ்.

2 Responses to கேவலம்… ! கேவலம்…!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: