குடிகாரன் எழுதிய இலக்கிய கதை

பிப்ரவரி 28, 2009

டாஸ்மாக்கில் ஆஃப் வாங்கிக் கொண்டு, அருகில் இருந்த பாரில் ஒதுங்கினேன். அழுக்காய், தூசியாய், இருளாய் சற்றே வெளிச்சத்தோடு கவுச்சியும், எச்சிலும் சேர்ந்த மணத்தோடு இருந்த பாருக்குள் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். சர்வர் வந்தான். வேண்டியற்றைச் சொல்ல, ஆம்லெட்டும், ப்ளாஸ்டிக் குவளையும், தண்ணீரும் வந்தது.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. அரசு சம்பந்தப்பட்டவைகள் எல்லாம் ஏன் அழுக்காய் இருக்கின்றன ? அழுக்கு மனமுள்ள மனிதர்கள் தாங்கள் என்று நிரூபிக்கின்றார்களா என்னவோ தெரியவில்லை.

போதையில் பேசும் பேச்சுக்களையும், எழுத நினைப்பவைகளும் எழுத்தில் கொண்டு வரும் பொழுது சற்று இலக்கணம் சேர்த்து வருகிறது. ஏன் என்று எனக்குப் புரியவில்லை. போதையில் தான் மனிதன் மனிதனாக இருப்பானோ????

பக்கத்தில் அரவம் போல சத்தம் கேட்க உண்மையில் நாகநாதன் அருகில் நின்று கொண்டிருந்தான். அரவம் என்று எழுதியதற்காக பெயரையும் நாகநாதன் என்று எழுதிவிட்டு என்னை நானே ஒரு சொட்டு வைத்துக் கொண்டேன். பாருங்கள் எழுத்து சற்று மேம்பட்டிருப்பதை. ஹா… ஹா… என்ன சிரிக்கின்றீர்கள் ? இதெல்லாம் இலக்கியமய்யா… இலக்கியம்…. இலக்கியமல்லவா எழுதுகிறேன்.. சுத்த இலக்கியம் எங்கிருந்து வருமென்று நினைக்கிறீர்கள். தண்ணி அடித்தவன் தான் உச்சப்பட்ச இலக்கியத்தைப் படைக்க இயலும் என்று உங்களுக்கெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா. ஆதலால் நான் எழுதுவதெல்லாம் இலக்கியம்.. எதிர்கால சந்ததிக்கு என்று வாழ்வியலின் நாடகங்களையும், கதா பாத்திரங்களின் வசனங்களையும் எழுத்தில் வடிக்கும் முயற்சியாய் தான் குடிகாரன் பேச்சு இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். நல்ல போதை. ஜிவ்வென்று கண்கள் எல்லாம் கனத்தது. உடம்பு மிதந்தது போல தெரிந்தது. எதிரே உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும் நாகநாதன் இருக்கிறானே, அவன் கல்யாண வீட்டுக்குச் சென்றானென்றால் மாப்பிள்ளை இப்போது இறந்தால் எப்படி இருக்குமென்று எண்ணுபவன். விவஸ்தையே இல்லாமல் இடம் பொருள் பார்க்காமல் மனதுக்குள் என்ன நினைக்கிறானோ அதையே பேசி வைப்பான். ஆட்டுப் பிரியாணியை வாய்க்குள் திணித்துக் கொண்டே போன வாரம் லாட்ஜில் புணர்ந்த காட்சியை சாப்பிடுவதோடு ஒப்பிட்டுப் பார்ப்பான். இதுவும் கறிதான் அதுவும் கறிதான். என்ன இந்தக் கறி மசாலாவில் வெந்து வாய் வழியாய் போகிறது. அது மசாலாவாக பேசி உள்ளே செல்கிறது என்றெல்லாம் ஒப்பிட்டுப் பார்ப்பதில் அவனுக்கு நிகர் அவன் தான். போதையின் பிடியில் மிதந்து கொண்டிருந்த என்னிடம் விசுக்கென்று கேள்வி ஒன்றைக் கேட்க, அவன் எப்படி யோசிப்பானோ அப்படியே பதிலும் சொன்னேன். அது தான் இது…

”டேய், குடிகாரா… ?”
“என்ன சொல்லு….!”
“ஏண்டா குடிக்கிறாய்….? குடித்துக் குடித்துக் குடல் வெந்து செத்துப் போகப் போகிறாய். உனக்கோ மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்காவது நீ இந்தக் குடியை நிறுத்தக் கூடாதா ?” என்றான்….

ஒரு நிமிடம் அவனையே உற்றுப் பார்த்தேன்.

”முடியாது நாதா ! முடியாது. விட்டு விடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் விடமுடியாது. குடியின் போது என்னை நானே மறந்து போகிறேன். என்னைச் சுற்றி நடக்கும் மனித உலகத்தின் அவல நாடகங்களை கண்ணுறும் போது ஏற்படும் வெறுப்பு எனக்கு வாழ்வின் மீதான வெறுப்பாய் மாறுகிறது. அதுகூடாது என்பதால் குடிக்கிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வின் மீது என்னைப் போல வெறுப்பேற்பட்டால் சமுதாயம் சீரழியும். குடும்பமும், குழந்தைகளும் அழிந்து போவார்கள். அதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாமல் போவதால் எனக்குள் உண்டான வெறுப்பினை மறக்கக் குடிக்கிறேன் “

”என்னடா, குடிகாரா, இப்படியெல்லாம் பேசுகிறாய். என்னவோ பிளாக் எழுதுகிறேன் என்று சொன்னாய். அதற்காக இப்படியா புரியாத மாதிரி எல்லாம் பேசுவது. என்ன சொல்லுகிறாய் என்றே புரியவில்லை. புரியும் படியாகத்தான் பேசேன்”

”சரி நாதா, உனக்குப் புரியும்படியே சொல்கிறேன் கேள்.

தமிழக அரசின் குடிமகனான நான், நம்மைக் குடிக்க வைக்க கடை நடத்தும் அரசுக்கு உதவி செய்ய வேண்டுமல்லவா? அதனால் தான் குடிக்கிறேன் என்றேன். நான் என்றும் அரசின் சட்ட திட்டங்களுக்கு எதிரானவன் அல்ல. அரசுக்கு உதவி செய்ய விரும்பும் சாதாரண குடிகாரன்.

என்ன சொல்வதென்றே தெரியாமல் ஹக் என்ற சத்தத்துடன் என்னை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான் நாகநாதன்.


மஹாத்மாக்கள் ஆன வக்கீல்கள்

பிப்ரவரி 27, 2009

டிவிக்களில் பார்த்ததையும், கேள்விப்பட்ட செய்திகளையும் வைத்துப் பார்க்கும் போது, ஜன நாயக நாட்டில் ஒரு பிரச்சினையை முன்னிட்டு கோர்ட்டில் ஆஜராக வந்த சக வக்கீல் சுப்பிரமணிய சாமியை இன்று குய்யோ முறையோ என்று கத்தும் வக்கீல்கள் தாக்கியது முதல் குற்றம்.

அழுகிய முட்டையை கோர்ட்டுக்குள்ளேயே, அதுவும் நீதிபதியின் முன்னிலையில் வீசிய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வந்த போலீஸாரை தாக்குகியது இரண்டாவது குற்றம்.

இப்படி வரிசையாக குற்றச் செயலில் ஈடுபட்ட வக்கீல்கள் முத்தாய்ப்பாக கோர்ட்டுக்குள் இருந்த காவல்துறை அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்.

வரிசையாகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை விரட்டி அடிக்க வந்த போலீஸார் மீது கல்லெறிந்த காட்சியினையும் கண்டோம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குற்றமோ, கூட்டமாக சேர்ந்து தாக்குதல்களோ நடந்தால் போலீஸ்கார்ர்கள் கலவரக்காரர்களை விரட்டி அடிப்பது வாடிக்கையான ஒன்று. எவ்வளவோ இடங்களில் கலவரத்தினை அடக்க தடியடி, கண்ணீர்புகை குண்டு முடிவில் துப்பாக்கிச் சூடு எல்லாம் நடத்தினார்களே போலீஸார் அப்போது எங்கே சென்றார்கள் சட்டத்தின் பாதுகாவலர்கள் என்றுச் சொல்லி பொதுமக்களை சட்டத்தின் பெயரால் சுரண்டிக் கொண்டிருக்கும் சில வக்கீல்கள்.

அடுத்து போலீஸார் யாரைக் கேட்டுக் கொண்டு கோர்ட்டுக்குள் சென்றார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

குற்றச் செயல்களை வக்கீல்கள் கோர்ட்டுக்குள் செய்தால் குற்றமில்லையா ? வக்கீல்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? சுப்பிரமணியசாமியைத் தாக்கியது உண்மை என்றால், அப்படித் தாக்கியவர்கள் வக்கீல்கள் என்றால், அவர்கள் இருக்கும் இடம் கோர்ட்டு என்றால், அக்குற்றவாளிகளை கைது செய்ய கோர்ட்டுக்குள் வரக்கூடாதா ? குற்றவாளிகளைப் பாதுக்காக்கும் கூடரமா கோர்ட்டுகள் ? கருப்புக் கோட்டுக்குள் முகம் மறைத்த வக்கீல்கள் சட்டத்தினை தன் கையில் எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தைக் கொளுத்தினார்களே காவல்துறை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? சட்டம் வக்கீல்களுக்கு சம்பாதித்துக் கொடுக்க மட்டும் தானா இருக்கின்றன. இவர்களின் இந்தியாவின் பிரஜைகள் இல்லையா ? இவர்கள் சட்டத்தினை மதிக்க வேண்டாமா ?

போலீஸ்கார்ர்கள் அனுமதி பெற்றுத்தான் கோர்ட்டுக்குள் வரவேண்டுமென்றுச் சொன்னால் மும்பையில் நடந்த்து போல மோசமான நிகழ்ச்சி கோர்ட்டுக்குள் நடந்தால் யாரைக் கேட்டு போலீஸார் கோர்ட்டுக்குள் வரவேண்டுமென்று யாராவது சொல்வார்களா?

கோவிலாக இருந்தால் என்ன கோர்ட்டாக இருந்தால் என்ன ? எல்லா இடங்களும் ஒன்று தான் சட்டத்தின் பார்வையில். குற்றவாளி தாயின் கருவறையில் இருந்தால் கூட கைது செய்யலாமென்று வேடிக்கையாகச் சொல்வார்கள். இன்னொன்றையும் இனிமேல் சேர்த்துக் கொள்ளலாம். வக்கீல்கள் என்றால் போலீஸாரும் கழிந்து விடுவர் என்றும் சொல்லலாம். வக்கீல்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்பது நிதர்சனம்.

சட்டத்தின் படி அத்துமீறி தாக்குதல்களில் ஈடுபட்ட போலீஸ்காரர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் சட்டம் பேசும் வக்கீல்கள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டு விட்டு, இன்று போலீஸார் தான் எல்லாவற்றுக்கும் காரணமென்று நீலீக்கண்ணீர் விடுவது நியாயமா?

தவற்றுக்கு மேல் தவறு செய்து விட்டு பெரிய மஹாத்மாக்கள் போல வக்கீல்கள் போராடுவது கேலிகூத்து என்பது உண்மை.” அடித்து விட்டார்கள் அவர்களை சஸ்பெண்ட் செய்யாமல் விடமாட்டேன்” என்று கொக்கரிக்கின்றார் ஒரு வக்கீல். யார் அடித்தது ? இவர்கள் மட்டும் கையைக் கட்டிக் கொண்டா அடியினை வாங்கிக் கொண்டார்கள்? போலீஸ் ஸ்டேஷனை எரித்தார்களே அது என்ன அஹிம்சைச் செயலா? குற்றமில்லையா? அடிக்க வந்தவர்களை விரட்டி அடித்தால் அது போலீஸ்காரர்களின் தவறா ? சட்டக்கல்லூரியில் வேடிக்கைப் பார்த்த போலீஸாரை என்னவெல்லாம் பேசினார்கள் இந்த வக்கீல்கள். சும்மா இருந்தாலும் குற்றம், சும்மா இல்லையென்றாலும் குற்றமா? ஊருக்கு இளிச்சவாயர்கள் போலீஸாரா?

சரி ஒரே ஒரு கேள்வி : குற்றம் ஒன்று நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அக்குற்றச்செயலில் ஈடுபட்ட இருவரும் நான் குற்றவாளி இல்லை என்று வக்கீல்கள் மூலம் வாதாடுவார்கள். ஆனால் உண்மையில் யாரோ ஒருவர் குற்றவாளி என்பது உண்மை. அக்குற்றவாளிக்கு துணை போகும் அல்லது காப்பாற்ற முனையும் வக்கீலும் குற்றவாளிதானே. இவர்களை எந்தச் சட்டத்தின் வாயிலாக தண்டிப்பது ? குற்றத்திற்கு துணை போனவர்களுக்கும் தண்டனை உண்டு என்று சொல்கிறது இந்திய தண்டனைச் சட்டம். அக்குற்றவாளிக்குச் சப்பைக்கட்டு கட்டி அவர்களைக் காப்பாற்ற துணியும் வக்கீல்கள் என்ன மகாத்மாக்களா ?

வாய்தாக்களில் தனது சொத்துக்களை இழந்த எத்தனையோ ஏழைமக்களின் கண்ணீர்க்கதைகளும், வாய்தாக்களின் மூலம் மாட மாளிகை கூட கோபுரங்கள் கட்டிய எத்தனையோ வக்கீல்களின் கதைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது கோர்ட் வளாகங்கள்…

வக்கீல்களின் வெற்றிக்குப் பின்னால் எண்ணற்ற போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள் என்பதனை மறந்து விட்டு இன்று குதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

போலீஸாரைக் குற்றம் சொல்லும் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதும் போலீஸார் தான் என்பதனை மறந்து விட்டு ”அடிக்கிறார்கள்” என்று அலறுகிறார்கள்.

குற்றச் செயலை முதலில் செய்தது வக்கீல்கள். இச்சம்பவத்திற்கு காரணகர்த்தாக்கள் வக்கீல்கள்தான். தப்புச் செய்தார்கள் அதனால் தான் போலீஸார் அங்கு கைது செய்ய வந்தனர் என்பதை அனைவரும் முதலில் அறிந்து கொள்வது நல்லது. இதை விட்டு விட்டார்கள். போலீஸார் அராஜகம் அது இதுவென்று கூப்பாடு போடுகிறார்கள். போலீஸார் எதற்கு அவ்விடத்தில் நுழைந்தார்கள் என்பதை உலகே அறியும்.

முதலில் நீதித்துறை கருப்புக் கோட்டுக்குள் புகுந்து கொண்டு சட்டத்தினை பாதுகாப்பாய் வைத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்யும் சில வக்கீல்களை அடையாளம் கண்டு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து பொத்தாம் பொதுவாக போலீஸாரின் மீது நடவடிக்கை எடுப்பது காவல்துறையினை கேவலப்படுத்தும் செயல். குற்றச் செயலிலும், காவல் நிலையத்தையும் எரித்த வக்கீல்கள் லைசென்ஸ் பறிக்கப்பட வேண்டும். அந்த வக்கீல்கள் கோர்ட்டுக்குள் நுழைய வாழ் நாள் தடை விதிக்க வேண்டும். வக்கீல்கள் தனது வண்டிகளில் வக்கீல் சின்னத்தினை பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

ஆனால் இது எதுவும் நடக்கப்போவதில்லை. உச்ச நீதி மன்றத்தின் ஆணைக்கே அல்வா கொடுத்த கேரள அரசினை யார் என்ன செய்தார்கள்? சட்டம் என்ன செய்தது? காவல்துறைக்கும், வக்கீல்களுக்கும், சட்டத்தினை சட்டைப்பையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அவர்களது குடும்பதார் நலனுக்கு மட்டுமே சட்டங்கள் இருக்கின்றன. அது பொதுமக்களுக்காக எழுதப்பட்டது என்று புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்வதெல்லாம் வேடிக்கைப் பேச்சு. கேட்டு சிரித்து வைக்கலாம்.

குறிப்பு : இக்கட்டுரை குற்றச் செயல்களில் ஈடுபட்ட வக்கீல்களை முன் வைத்து எழுதப்பட்டது. தர்மத்தினை மூச்சாக கருதும் வக்கீல்கள் யாராவது படிக்க நேர்ந்தால் இது அவர்களைப் பற்றியது அல்ல என்று கருதவும். இது முற்றிலும் குடிகாரனின் நகைச்சுவை கலந்த போதைப் பேச்சு. போதை தெளிந்தால் கருத்துக்கள் மாறுபடலாம். ஹி..ஹீ…


கல்விக்கூடங்கள் அரசுடமை

பிப்ரவரி 24, 2009

டிரஸ்ட் மூலம் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படுகிறது. மேலும் அக்கூடங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு அலுவலர்களாக்கப்படுகிறார்கள். சம்பளம் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அளவினை விட ஒரு பங்கு அதிகமாக வழங்கப்படும். ஆசிரியர்கள் வேறு ஏதும் தொழில் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. ஆசிரியர்கள் அனைவரும் பொதுச் சேவை நோக்குடன் பணி புரிய வேண்டுமென்பதால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமுதாயத்திற்கு மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கித் தருவது ஒவ்வொரு ஆசிரியர்களின் பணி ஆகும்.

பாடங்கள் அனைத்தும் தொழில்கல்வியினை ஆதாரமாகக் கொண்டவையாக உருவாக்கப்படும். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடை, காலை நேரத்து சிறு உணவு, மதியம் சாப்பாடு, மாலை நேரத்தில் சிறு உணவு வழங்கப்படும். புத்தகங்கள், நோட்டுக்கள், பேனாக்கள், சென்று வர வாகனங்கள், பஸ், ட்ரெயின் டிக்கெட்டுகள் அனைத்தும் அரசால் வழங்கப்படும். மத சம்பந்தமான சின்னங்களோ அல்லது விழாக்களோ பள்ளியில் கொண்டாடப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆசிரியர்களின் மீது மானிட்டரி குற்றவியல் மன்றம் மூலமும், பணியாளர் குற்ற உளவியல் துறை மூலமும் குற்றம் நடந்தது நிரூபிக்கப்பட்டால் சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஆசிரியரின் பிற சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆசிரியரின் குடும்பத்தாருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பறிக்கப்படும். மேலும் ஆசிரியர் குடும்பத்தினர் அனைவரும் இரண்டு மடங்கு வருமான வரி கட்டவும் நேரிடும். தவறு செய்யும் ஆசிரியரை தவறு செய்யாமல் தடுப்பது என்பது ஆசிரியரின் குடும்பத்தினரின் கடமை என்பதாகிறது.

எந்த மாணவனாவது பெற்றோராலோ அல்லது அவர்களது உறவினர்களாலோ பாதிக்கப்பட்டால் அப்பெற்றோருக்கு கடுமையான சிறைத்தண்டனை பரிசாக கிடைக்கும். ஒவ்வொரு குழந்தையும் அரசாங்கத்தின் சொத்து என்பதால் அவர்கள் அன்போடும், அரவணைப்போடும் வளர்க்க பெற்றோர்களும், சமூகமும் அரசுக்கு உதவி செய்ய வேண்டுமென அறிவிக்கப்படுகிறது.

தனிச் சொத்தாக இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு சொத்து மதிப்பில் பாதி ஈட்டுத் தொகையாக வழங்கப்படும். பொது டிரஸ்ட் மூலம் இயங்கிய தனியார் கல்விக்கூடங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படமாட்டது. உரிமையாளர்கள் அரசின் மீது ஏதேனும் வழக்குப் போட்டால் மாநிலத்திலிருந்து குடும்பத்தோடு விரட்டப்படுவர் என்று அறிவிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்காக அரசு சான்றிதழ்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு சமுகக் குற்றவாளியாக அறிவிக்கப்படுவர். மனித உரிமைகள் கமிஷனோ அல்லது நீதிமன்றமோ அரசின் இந்த சட்டத்தை திருத்தவோ அல்லது நீக்கவோ அனுமதி மறுக்கப்படுகிறது என்பதனை குடிகாரனின் அரசு தெரிவித்துக் கொள்கிறது.

படிக்கச் சொல்லிக் கேட்ட குடிகாரன் கைநாட்டை அழுந்தப் பதித்தான்


சில கேள்விகளுக்கு காரணமான ஆஸ்கார் அவார்டு

பிப்ரவரி 23, 2009

சிலம்டாக் மில்லியனர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் அவார்டு கிடைத்துள்ளது பற்றி சினிமா உலகம் ஆர்ப்பரிக்கிறது. இந்தியாவே மகிழ்ச்சியில் திளைக்கிறது என்கின்றன மீடியாக்கள். உங்கள் வீட்டில் பாத்திரம் கழுவும் வேலைக்காரிக்கு இந்த ஆஸ்கர் பற்றித் தெரியுமா என்று கேட்டால் இதெல்லாம் ஓவர் என்கிறார்கள். அந்த வேலைக்காரியை மனிதனாகவே மதிக்க மாட்டார்கள்.

சேரிகளில் வளரும் பையன்கள் எப்படி சமூகக் குற்றவாளியாய் மாற்றப்படுகிறார்கள் என்று சொல்கிறது சிலம்டாக் மில்லியனர்ஸ். இந்தப் படத்திற்கு அவார்டு கிடைத்ததும் பிரைம் மினிஸ்டர் பாராட்டுத் தெரிவிக்கிறார். பதவி புகழைப் புகழ்கிறது. ஏழைகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் பிரைம் மினிஸ்டர். ஏழைகளின் படத்திற்கு இசை அமைத்து விருது பெறுகிறார் இசையமைப்பாளர். ஏழ்மையும், ஏழையும் வியாபாரப் பொருட்களாகிவிட்டன என்பது மனதைச் சுடும் உண்மை. ஏழைகள் பெரும் கோடீஸ்வரர்களின் புகழுக்கும், பொருள் வருவதற்கும் காரணமாயிருக்கிறார்கள் என்பது வேதனை.

இளையராஜாவுக்கு கிடைக்காத அவார்ட் ரஹ்மானுக்கு கிடைத்திருக்கிறது ஏன் என்ற கேள்வியும் தற்பொழுது எழுந்தே தீரும். காரணம் தமிழ்ச் சமூகம். மரத்தைச் சுற்றிப் பாட்டுப் பாடும், நடிகைகளில் கழுத்துக்குள்ளும், இடுப்பில் முகம் புதைக்கும், எதிர்த்து வரும் நூறு பேரை அடித்து துவைக்கும் கதா நாயகர்களின் கூச்சலில் தமிழ் சமூகத்தின் உணர்ச்சிகள் மறத்துப் போய் விட்டது. அந்தக் கதா நாயகர்களுக்கு குடைபிடிக்கும் வேலையினை இசை என்ற பெயரில் செய்து வந்த மாஸ்ட்ரோ (ஹி..ஹி…) இளையராஜாவின் இசை தமிழ் நாட்டின் குடிசைகளுக்குள் கும்மி அடிக்கிறது. இசை என்பது உலகளாவியது. அதன் வடிவங்கள் வெவ்வேறானவை. அதையெல்லாம் சிறிதும் அறியாத உலகம் தமிழ் உலகம். ஒரு காலத்தில் உலகெங்கும் கொடி கட்டிப் பறந்த தமிழனின் புகழ் இன்று விஸ்க் விஸ்க் , வச்சுக்கவா வச்சுக்கவா பாடல்களில் தடம் புரண்டு நிற்கிறது.  

இசையின் பல்வேறு வடிவங்களை தான் இசையமைத்த பாடல்களில் இழைய விட்டவர் ரஹ்மான். ஆனால் இளையராஜாவோ சிம்பனி என்ற பெயரில் தன் பழைய பாட்டுக்களின் மெட்டினை மீண்டும் திருவாசகப் பாடல்களில் ஒலிக்க வைத்து சரக்கு முடிந்து போன விஷயத்தை வெளிப்படுத்தினார். 

இளையராஜாவிற்கு ஏன் ரஹ்மான் அளவுக்கு புகழ் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு என் நண்பரின் பதில். ” இளையராஜா போதுமென்று ஆன்மீக வழியில் இறங்கி விட்டதால் இசையின் மீதான அவருக்கான தேடல் ஆன்மீகத்தின் மீது குவிந்து விட்டது. ஆனால் ரஹ்மான் இன்னும் தேடலில் இருப்பதால் அவரைத் தேடி புகழ் மாலைகள் வருகின்றன ”

ஆன்மீகம் ஒருவனுக்கான புகழையும் அழித்து விடக் காரணமாயிருக்கிறது என்பது விநோதம்.

சிலம்டாக் மில்லியனர்ஸ் குழுவிற்குப் பாராட்டுக்கள். 

குடிகாரனின் முதல் கையெழுத்து !

பிப்ரவரி 22, 2009

பள்ளிகளில் பயன்படும் அப்ளிகேஷனில் ஜாதி, மதம் என்ற பிரிவுகளை எடுக்கும் முதல் உத்தரவில் கையெழுத்து விட்டு அமைச்சர்களை சந்திக்க கிளம்பினான் குடிகாரன்.

குடிகாரனுக்குப் ரொம்பவும் பிடித்த சரக்கு, இந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லய்யாவின் கிங் ஃபிஷர் பீர்தான். குடிகாரனுக்கு திடீரென்று தோன்றியது..

இவரும் சாராயம் தான் காய்ச்சுறார். இவருக்கு மட்டும் அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறது. கள்ளு விற்க ஏன் ஏழைகளுக்கு அனுமதி தரவில்லை. அதுபற்றி பீரைக் குடித்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருக்கிறான் குடிகாரன்.

நாளைக்கு என்ன கையெழுத்தோ ? என்ன சட்டமோ அவனுக்குத்தான் வெளிச்சம்…

 

குறிப்பு :  ஆச்சு… அப்படி இப்படின்னு.. என்னென்னவோ ஆயிப்போச்சு. இன்றைக்கு குடிகாரன் தமிழ் நாட்டை ஆளப்போகும் கலப்பட இனத்தைச் சேர்ந்த முதல் முதலமைச்சர். தமிழ் நாடெல்லாம் குடிகாரர்கள் அதிகமாகி விட்டதும், அதன் விளைவாக போதையில் இருந்த எவனோ ஒரு கபோதி குடிகாரன் எழுதும் பிளாக்கைப் படித்து கிளர்ச்சியாகி, அவனவனுக்கு ஏதேதோ பில்டப் பண்ணி சும்மா கிடந்த சங்கை ஊதிக் மாதிரி, குடிகாரனை கட்சி ஆரம்பிக்கச் சொல்லி, பாருங்கள் இன்றைக்கு தமிழ் நாட்டை ஆளும் முதலமைச்சராய் குடிகாரன். இனிமேல் குடிகாரனின் அரசியல் விளையாட்டைப் படித்துச் சுவையுங்கள்..


பாம்பும் நடிகையும்

பிப்ரவரி 22, 2009

பாம்புகள் செவனேன்னு எலியைப் புடிக்கிறது சாப்பிடுறது புதர்களில் ஒளிந்து கொள்வது என்று அதன் வேலையைப் பார்க்கிறதுகள். ஆனா மனிதனுவ இருக்கானுவளே அவனுக அடிக்கிற கூத்து இருக்கே! பாம்பைப் புடிக்கிறானுவ தோலை உறிச்சு விற்கிறானுவ, நாக ரத்தினம் அது இதுவென்று பேசுறானுவ… சரி இது எல்லாம் இருக்கட்டும்..

இருக்கிறதைக் காட்டி காலத்தே பயிர் செய்யும் சிறுக்கிக வீட்டுக்குள்ளே பாம்புகளை விடுறேன் பேர்வழி என்று ஒரு குருப்பு குசும்பைக் கிளம்பி இருக்கிறார்கள். 

“படுகவர்ச்சியாய் நடிக்கும் நயனதாராவின் வீட்டிலும், இவர் நடித்த தியேட்டர்களிலும் பாம்புகளை விடுவதாய் ஒகேனக்கல்  – 2025 அமைப்பினர் சொல்கிறார்கள் “

ஏனப்பா அமைப்பாளர்களே, நாங்களெல்லாம் எத்தனையோ பாம்புகளை பார்த்தவர்கள். இந்தப் பாம்புகளுக்கெல்லாம் அசைந்து கொடுப்போமா என்று நடிகைகள் மனசுக்குள் சிரித்துக் கொள்வது உங்களுக்கு தெரியுமா ?

அவங்க அப்படிக் காட்டறல தான் நடிகனுவ எல்லாம் சூப்பர், கீப்பரு, தல, பதி என்று பட்டப் பெயரு வைக்கிறானுவ. சும்மா உதாரு விடாம, இந்த நடிகனுவ வீட்டுக்குள்ள பாம்பை விடுறது….???? உங்களுக்கு தைரியம் இருக்காவே…..

கட்டவுட்டு, பாலாபிஷேகம், பீராபிஷேகமெல்லாம் செஞ்சு சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிறவங்கே வீட்டுக்குள்ளே பாம்பை விடு..

அறிக்கை விடுறானுவ.. அறிக்கை….

அந்தச் செறுக்கிக காட்டாம இருந்தா இங்கே கற்பழிப்பு அது இதுவென்னு ரகளை நடக்கும்வே….


பீரு பீரோய்

பிப்ரவரி 16, 2009

கோடைக்காலம் வந்தாச்சு… பீர் விற்பனை இனி கொடி கட்டிப் பறக்கும். டாஸ்மாக்குல ஜில் பீர் கிடைக்கிறதுக்கு ஆற்காட்டார் மனசு வைக்கனும். இங்கு ஆற்காட்டார் அமைச்சகத்தின் செயல்பாடு ஒன்றினைப் பாராட்டியே தீர வேண்டிய கட்டாயம். எது எப்படியோ அறிவித்த நேரத்தில் ஒரு துளி முன்னே பின்னே ஆகாமல் பவர் சப்ளையினை நிறுத்துவதில் தமிழக மின்சார வாரியத்தின் செயல் பாராட்டுக்குரியது. ஆற்காட்டர் அவர்களே அப்படியே டாஸ்மாக்குக்கு கோடைக்காலத்தில் மின்வெட்டு இல்லாமல் செய்தால் அடியேனாகிய என்னைப் போன்றவர்கள் ஜில்லுன்னு ஒரு பீரோ இரண்டு பீரோ குடிப்போம். அதற்கு குடிகாரர்களின் சங்கத்தின் சார்பாக வேண்டுகோளினை வைக்கிறேன். இது எனது பர்ஸனல் வேண்டுகோள்.

இனி பொது விஷயத்துக்கு வருகிறேன்.

இரண்டு கோடியே அறுபது லட்சம் பீர் பாட்டில்கள் விற்பனையினை மாதம் இருபது கோடி பாட்டில்களாக விற்பனை செய்ய திருப்பூர், ஈரோடு டாஸ்மாக்குகளில் பிரிட்ஜ் நிறுவ டெண்டர்களை விட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தமிழக மக்களுக்கான நலத்திட்டங்களை(?) நிறைவேற்றும் பாங்கு பாராட்டுக்குரியது.

தமிழக மக்கள் முன்பு சினிமாக்காரனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். இனிமேல் குடிகாரனாய் திரிவார்கள். தமிழக அரசின் வரலாற்றுப் பிழை இது. அச்சாரம் போட்டவர் அதிமுக தலைவி. தொடர்ந்து நடத்துபவர் திமுக தலைவர். வரலாறு மன்னிக்கின்றதோ இல்லையோ நிச்சயம் தர்மம் தண்டிக்கும்.

சாராயம் விற்பதன் மூலம் பொதுமக்களின் உடம்பினை கெடுத்தும், குடும்பங்களை வீதியில் நிறுத்த உதவி செய்யும் தமிழக அரசு பேசாமல் போதை மருந்தினை விற்றால் இன்னும் அதிக லாபம் கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் அரசு நலத் திட்டங்களை நிறைவேற்றலாம் அல்லவா?

தமிழக அரசு ஆவன செய்யுமா ?


%d bloggers like this: