ஞானம் பெற – எண்ணெய் ஸ்ரீயின் தொடர்

மே 29, 2011

அன்பு நண்பர்களே, அனாதியின் நண்பர்களின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, மஞ்சள் துண்டின் மனசு என்ற தொடர் இன்றிலிருந்து ‘ஞானம் பெற’ என்ற மாற்றப்படுகிறது. உடனே ஆகா இவன் ஆன்மீக அரிப்பை நம்மிடம் வந்து தீர்த்துக் கொள்ளப் போகின்றானே என்று நினைத்து விடாதீர்கள். நான் எழுத முற்படுவது நிச்சயம் ‘ஞானம் பற்றி’ தான். ஆனால் இது வேறு வகையான ‘ஞானம்’ என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்குப் போதிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் புத்திசாலியும் இல்லை. ஆன்மீக வாதியும் இல்லை. இன்றைக்கும் தொப்புள் தெரியும் நடிகைகளின் போஸ்டரைப் பார்த்தால் தன்னாலே பார்வை போகும் மனதினைக் கொண்டிருப்பவன் தான் இந்த ஸ்ரீ. ஆனால் இந்த “குஞ்சு” போல மோசமானவன் கிடையாது. போன வாரம் ஒரு குட்டியுடன் ஆஸ்பிட்டலுக்குச் சென்று வந்தான் இந்த குஞ்சு. என்னடா விஷயம் என்றால், அசந்துட்டானாம் அதனால ‘கிளீன்’ பண்ண ஆஸ்பத்திரிக்கு வந்தானாம். படுபாவி. பிரம்மகத்திப் பய.

என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் ‘ நீங்கள் தான்’. உங்களின் உடம்பே கோயில். கோவிலைச் சுத்தமாய் பராமரிக்க வேண்டும். அப்படிப் பராமரித்தால் கடவுள் சந்தோஷமாய் இருப்பார். அந்தக் கோயிலான உடலைப் பராமரிப்பது எப்படி என்பதை எனக்குத் தெரிந்த வகையில் சொல்ல விரும்புகிறேன். உடம்பு நன்றாய் இருந்தால் தானே பிற செயல்களைச் செய்யலாம்.

கடந்த பதிவில் உணவே மருந்து என்பதைப் பார்க்கும் போது எண்ணெய் பற்றிய சில விஷயங்களைச் சொன்னேன். சிலர் நம்பி இருப்பீர்கள். சிலர் இவனுக்கு வேற வேலை இல்லை என்று திட்டி இருப்பீர்கள். இதோ எண்ணெய் தான் உடலுக்கு எதிரி என்பதை காட்டும் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. படித்துப் பாருங்கள்.

அன்பு நண்பர்களே, இது என்னடா பெரிய கட்டுரையாய் இருக்கிறதே என்று நினைக்காமல், இரண்டு நிமிடம் நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாய் படித்துப் பாருங்களேன்.

-உங்களின் தோழன் ஸ்ரீ.

( நண்பர்களிடமிருந்து பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்)

”ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?”

‘என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ – பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது. நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.

பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.

”சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம். இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.

சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட  மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள். அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும். ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.

நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது. பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள்.

அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!” என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.

நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது. இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.

தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது. பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம். சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!” -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி.

- சி.சரவணன்

 நன்றி : டாக்டர் விகடன்


மஞ்சள்துண்டின் மனசு – உணவே மருந்து

மே 12, 2011

அன்பு நண்பர்களுக்கு, மஞ்சள் துண்டின் மனசு என்கிற தொடர் மூலமாக சில விஷயங்களைச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் ஹோட்டல் வேலைகள் கூடி விட்டதால் எழுத இயலவில்லை. இன்றைக்கு மிக முக்கியமான உணவு பற்றிய சில விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவரிடம் செல்வதை நிச்சயம் தவிர்க்கலாம்.

அரிசி உணவு நமக்குப் போதுமான கொழுப்புச் சத்தினை தந்து விடுகிறது. அதனால் நம் சமையலில் சேர்க்கப்படும் எண்ணெய் மேலும் அதிக கொழுப்பாய் சேர்ந்து விடுகிறது. ஆகவே முதலில் சமையலில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள். எண்ணெய் தான் “மாரடைப்புக்கு” காரணம் என்று சாஓல் அமைப்பினர் சொல்லுவார்கள். எண்ணெயில் மிகச் சிறந்தது “ தண்ணீரே” என்றும் சொல்லுவார்கள். கிராமப்புறங்களில் சமைக்கும் போது எண்ணெய் சட்டியில் காட்டப்படும். ஊற்றப்படாது.

எண்ணெய் இல்லாமல் எப்படி சமைப்பது என்று குழம்ப வேண்டாம். எண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் உணவில் மூன்று டீஸ்பூன் எண்ணெய்க்குப் பதிலாக கால் டீஸ்பூன் சேருங்கள். டேஸ்ட் முக்கியமா இல்லை ஆரோக்கியம் முக்கியமா என்பதை ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள்.  கடுகு, வெந்தயம், வெங்காயத்தை மெல்லிய தீயில் பொறித்து, பிறகு தேவையான தண்ணீர் சேர்த்துச் சமைக்கலாம். திருமணமானவர்கள் மனைவியிடம் இதைச் சொல்லுங்கள். டேஸ்ட்டாக சாப்பிட்டே பழக்கப்பட்டவர்களுக்கு “மாரடைப்பு” காத்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அரிசி, கோதுமை, ராகி போன்றவை மாவுப்பொருட்கள்தான். கோதுமை, ராகி ஜீரணமாவதற்கு(தமிழ் வார்த்தை என்ன?) நேரமாகும் என்பதால் பசியைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் கோதுமை சாப்பிடச் சொல்வார்கள். மற்றபடி அரிசிக்கும், கோதுமைக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. அரிசியில் பாலீஸ் செய்யப்பட்ட அரிசி சாப்பிடுவதை முதலில் தவிருங்கள். உடம்பில் கொழுப்புச் சேராமல் இருந்தாலே 90 சதவீத பெரிய நோய்கள் வராது. பாலீஸ் செய்யப்பட்ட அரிசியில் நார்ச்சத்து இருக்காது. அப்படியே கொழுப்பாக மாறி விடும். பாலீஸ் செய்யப்படாத அரிசி மார்க்கெட்டில் கிடைக்கும்.

“ரேஷன் அரிசி” தான் அரிசியில் சிறந்த அரிசி என்பதை அறியவும்.

கலோரி, கிலோரி என்றுச் சொல்லுவார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.  இந்தக் கலோரி கணக்கெல்லாம் வைத்துக் கொண்டு சாப்பிட முடியாது. ஆனால் இதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. அது என்ன? என்பதை அடுத்த பதிவில் சொல்லுவேன். ஒரே பதிவில் எழுதினால் குழம்பி விடுவீர்கள். இன்றைய பதிவில் ”சாப்பாட்டில் எண்ணெய் உபயோகத்தைக் குறையுங்கள்” என்று சொல்லி இருக்கிறேன்.

எண்ணெய் குறைத்தால் என்ன ஆகும்? உடம்பில் கொழுப்புச் சேராது. பிரஷர் வராது, சர்க்கரை வராது, உடல் பருமன் நோய் வராது, மாரடைப்பு வராது. இந்த வராதுக்கள் வராமல் இருக்க வேண்டுமென்றால் வீட்டிற்கு நால்வர் கொண்ட குடும்பம் என்றால் இரண்டு லிட்டர் எண்ணெய்க்கு மேல் உபயோகப்படுத்தக் கூடாது.

ஒரு ஆளுக்கு மாதம் “ அரை லிட்டர்” எண்ணெய் போதுமானது என்பதைக் கவனத்தில் கொள்க. முக்கியமாக கணிணியில் வேலை செய்வோர், உடலுழைப்பு அதிகமில்லாதோர் “அரைலிட்டரே” பயன்படுத்தவும். பிறர் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

எந்த மருத்துவரும் இந்தப் பக்குவத்தைச் சொல்லுவதில்லை. காரணம் ‘வரும் மானம்’ போய் விடும் என்பதால். சாஓல் என்றுச் சொன்னேன் அல்லவா அது என்ன என்பதை கீழே இருக்கும் இணைப்பில் பார்த்து விடுங்கள்.

http://www.saaol.com/healthier_lifestyle.php

- ஸ்ரீ

குறிப்பு : தொடர்ந்து எழுத எனக்கு தூண்டுதல்கள் தேவை. ஆகையால் நண்பர்கள் தங்கள் ஆதரவை பின்னூட்டம் வழியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனாதி, குஞ்சு, பஞ்சு போன்றவர்களைப் பற்றி இங்கு யாரும் எதுவும் பேசக்கூடாது. மிஸ்டர் குஞ்சுவை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது என்பதையும் இவ்விடத்தில் சொல்லி விடுகிறேன். நான் எப்போதும் நேர்மையாக நடக்க எத்தனிப்பவன். 


விஷ வியபாரிகள்

ஜனவரி 24, 2011

மருத்துவமனைப் பக்கம் போக வேண்டாமென்று நினைத்தால் நீங்கள் சில விஷயங்களைக் கடைபிடித்தே ஆக வேண்டும். அப்படி இருக்கவில்லை என்றால் எமன் உங்கள் வீட்டின் வாசலில் வந்து நிற்பான். அது என்ன சில விஷயங்கள் என்பது பற்றிப் பார்க்கலாம்.

டின்களில் அடைக்கப்பட்டு வரும் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த பென்சி அசிடேட், எதில் அசிடேட், அமில் அசிடேட் என்ற வேதிப்பொருட்களைச் சேர்க்கின்றார்கள்.

வெனிலா சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் பைப்பர் ஹோல் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.

சோடியம் அலுமினியத்தை கேக்குகளில் பயன்படுத்தப்படும் வெண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

பாக்கெட் பால் அடர்த்தியாகத் தெரிய, சில வகை வேதிப்பொருட்களைச் சேர்க்கின்றார்கள்.

சிட்ரிக் ஆசிட் கலந்த குளிர்பானங்களால் நரம்பு மண்டலம், சிறு நீரகம், மூளைப் பாதிப்புகள் ஏற்படுகின்றனவாம். புற்று நோய்க்கான காரணிகளும் இருக்கின்றனவாம். சில்லி சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு புற்று நோய் ஏற்பட்டு விட்டது என்பதை ஒரு பதிவர் எழுதியிருந்தார். இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.

மேலும் உணவை விஷமாக்கி விற்பனை செய்து வியாபாரிகளை, இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதைக் கவனியுங்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் கோக்கின் மீதான பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையின் முடிவு என்னவாயிற்று என்பது இதுவரை தெரியவில்லை.

எங்கு நோக்கினும் போலி உணவுப் பண்டங்கள் விற்பனையாகின்றன. சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்கிறார்கள். தமிழக அரசு இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கைகள் எடுத்ததாய் தெரியவில்லை. ஹோட்டல்களும், உணவுப் பண்டங்களும் சோதனைக்குப் பிறகே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு அதுபற்றிய பெரிய அமைச்சகத்தை வைத்திருந்தாலும், ஒன்றும் செய்வதில்லை.

சாக்லேட், மிட்டாய், சூயிங்கம், பர்கர், பீட்சா, கோக், பெப்சி, எண்ணெயில் வறுத்த பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள், ரெடி டூ ஈட் பொருட்கள், இனிப்புகள், கலர் பொடி சேர்த்த உணவுகள், அதிக உப்பு சேர்ந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். ஹோட்டல்களில் சாப்பிடுவதை முற்றிலுமாய் தவிர்த்து விடுங்கள். இன்றைய ஹோட்டல்கள் எமனின் முகவரிகளாய் இருக்கின்றன. கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல் ஹோட்டல்கள் கெட்டுபோன, விஷத்தன்மை உடைய உணவுகளை விற்கின்றார்கள். அதுமட்டுமின்றி பாக்கெட் உணவுப் பொருட்கள் விஷத்துடனே விற்பனையாகி வருகின்றன.

இது பற்றிய ஒரு கட்டுரையை கீழே இருக்கும் இணைப்பில் படியுங்கள்.

உணவில் கலக்கும் விஷம்

ஆரோக்கியம் கெட்டுப் போனால், உங்களின் வாழ்க்கையே சீரழிந்து போகும். தேவையற்ற உணவுப் பொருட்களை உண்பதை விட்டு விட்டு, ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்ள ஆரம்பியுங்கள். இல்லையென்றால் உங்களின் நிம்மதி மட்டுமின்றி, அனைத்தும் உங்களை விட்டுப் போகும். கண்கெட்ட பின்னே சூரிய வணக்கம் வேண்டாம். ஜாக்கிரதை

- அனாதி


உண்மையான செட்டிநாட்டு வாத்து வறுவல்

செப்டம்பர் 3, 2010

சுதந்திரமும், விடுதலையும், குஞ்சுவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். எவன் எவளோடு போன இவனுகளுக்கு என்ன?  இவனுங்க மட்டும் ஒழுங்கா. எவ கிடைப்பா ஆட்டயப்போடுவோம்னு நினைச்சுக்கிட்டு திரியற பயலுவ இவனுங்க. போங்கடா நீங்களும் உங்க அரசியல் புண்ணாக்கும்.

இத்தனை காலமா அரசியல் கட்டுரைகளையே படித்து வந்த வாசகர்களுக்கு உண்மையான மசாலா அயிட்டம் ஒன்றை தரத்தான் இந்தப் பதிவு.

இந்த வாத்துக் கறி இருக்கிறதே அதன் கறி டேஸ்டா இருக்கும். ரம்மை ராவா சாத்தி, அத்தோடு கவுச்சி போக எண்ணையில் வறுத்த வாத்துக் கறியை சாப்பிட்டால், சும்மா அள்ளிக்கிட்டு போவும். இதெல்லாம் அந்தப் பயல்களுக்கு எங்கே தெரியப்போவுது.

சரி, சரி நீ மட்டும் சாப்பிட்டா போதுமாடான்னு நீங்க கேக்குறது புரியுது. இதோ அதன் செயல்முறையை வீடியோவுடன் தருகிறேன்.  வீட்டுல சமைக்கச் சொல்லிக் குடிச்சிப் பாருங்கோ.

ஆமா அது என்ன, இந்த வாத்து கண்ணாடி போட்டிருக்கு? பேசுது? என்ன கருமம்டா இது? வாத்துக் கழுத்து நீளமால்ல இருக்கும்? இது என்ன குண்டா இருக்கு? ஓ குண்டு வாத்தா? அதனால என்ன ருசி நல்லாயிருந்தா போதும். வாத்துக்கறி எப்படி இருந்துச்சுன்னு பின்னூட்டம் போட்றாதீங்க.

சரி, வரட்டா

- குடிகாரன்


பப்பாளி சாப்பிடுங்கோ தகதகவென மின்னுவீர்கள்

ஜூலை 14, 2010

ஆண்டு முழுவதும் கிடைக்கும் அரிய பழங்களுள் ஒன்று, பப்பாளி. இரவு உணவு சாப்பிட்டதும் நிம்மதியாகத் தூங்க வேண்டும். இதற்கு பப்பாளியில் உள்ள நார்ச்சத்து உடனடியாக ஜீரணிக்க வைக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல் இல்லாமல் தூங்குவதுடன் காலையில் மலச்சிக்கல் இன்றி அந்த நாளை சுறுசுறுப்பாகத் தொடங்கலாம்.

வெயில் காலத்தில் அதிக வெப்பத்தை உடல் தாங்கவும், உடலில் ஏற்படும் வீக்கங்கள் குறையவும் பப்பாளி உதவுகிறது.

பப்பாளியைச் சாறாக அருந்தினால் பெருங்குடலில் உள்ள தொற்றுநோய்க் கிருமிகள் உடனடியாக அகற்றப்படுகின்றன.சாறாக அருந்தும் போது மார்பில் உள்ள கெட்டிச் சளி உடனடியாக இதில் உள்ள நார்ச்சத்தால் உடைந்து கரைந்து வெளியேறி விடுகிறது.

மேலும் பப்பாளியில் உள்ள நார்ச்சத்து அதிக கொலஸ்ட்ராலைக் கரைத்து வெளியேற்றுகிறது. பி குரூப் வைட்டமின் ஃபோலிக் அமிலம் பப்பாளியில் தாராளமாக இருப்பதால் இரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டைன் என்ற பொருள் கெடுதல் செய்யாத அமினோஅமிலாக மாற்றப்படுகிறது. இப்படி ஹோமோசிஸ்டைன் மாற்றப்படாமல் இருந்தால் இந்தப் பொருள் இரத்தக்குழாய்களின் சுவர்களில் படிந்து பக்கவாதம்,மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தி விடும். எனவே, தினமும் பப்பாளித் துண்டுகள் சிலவற்றையோ அல்லது ஒரு டம்ளர் பப்பாளிச் சாறோ உணவுடன் சேர்த்து வாருங்கள். உணவு, மகா அசைவ உணவு சாப்பிடும் போதும் கடையில் பப்பாளிச் சாறோ அல்லது துண்டுகளோ சாப்பிடவும்.

இதய நோயையும்,நீரிழிவு நோயையும் முன் கூட்டியே தடுக்கிறது, பப்பாளி.உடல் கொலஸ்ட்ராலைப் பயன்படுத்தும் போது ஏற்படும் கழிவுகள் இதய நோயையும் புற்று நோயையும் உண்டாக்கி விடும் என்ற அபாயம் உள்ளது. இதைத் தடுப்பதற்காக வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ என்ற மூன்று ஆண்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் பப்பாளியில் அபரிதமாக உள்ளன.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விழிப்புடன் பாதுகாக்கிறது. வைட்டமின் ஏ யும், வைட்டமின் சி யும் உள்ளன. இதனால், காய்ச்சல், ஜலதோஷம், சளியுடன் கூடிய காய்ச்சல், காதுகளில் தொற்று நோய்க் கிருமிகள் போன்றவை உடனே குணமாக்கப்படுகின்றன.

காலையில் வாந்தி வருவது போல இருக்கிறதா?

இரவில் ஜீரணமாகாமல் வயிறு மப்பாக இருக்கிறதா? அப்படி எனில் ஒரு டம்ளர் பப்பாளிச் சாறு அருந்தினால் போதும்.

எது எப்படி இருந்தாலும் காலையில் பழத்துண்டுகளாகவோ சாறாகவோ பப்பாளியை உணவாகப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் பப்பாளியில் உள்ள ஜீரணமாக உதவும் நார்ச்சத்து பெருங்குடலில் புற்றுநோயை உண்டாக்கும் விஷப் பொருள்கள் இருந்தால் அவற்றையும் அப்புறப்படுத்தி விடுகிறது.இதனால் பெருங்குடல் ஆரோக்கியமான செல்களும் எளிதாக இயங்கும்.

உடல் நிறம் மெல்ல மெல்ல உறுதியாகச் சிவப்பாக மாற தினமும் பப்பாளிப்பழம் ஒன்று சாப்பிட்டு வரவும்.

நன்றி : கல்கண்டு இதழ்

காப்பி பேஸ்ட் செய்தது : உங்கள் குஞ்சு என்கிற குஞ்சாமணி


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers