தமிழக தேர்தலில் பலரும் எதிர்பார்த்த கூட்டணிகள் அமைந்து வருகின்றன. அதே போல எதிர்பார்த்த ரிசல்ட்டும் கிடைக்கும் என்றே நம்புகிறோம். நாங்கள் முன்பே காங்கிரஸ் திமுகவை அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபடும் என்று எழுதி இருந்தோம். குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருந்த திமுகவை விட, உலகெங்கும் குதிரையோட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்வதை நம்ப நாங்கள் தயாரில்லை. ஸ்பெக்ட்ரம் திமுகவின் சமாதி என்று காங்கிரஸ் முடிவு கட்டி இருக்கிறது போலும்.
இதோ தேமுதிக அதிமுகவுடன் இணைந்து விட்டது. காங்கிரஸ்ஸுக்கு திமுக தலைவர் வைத்த ஒவ்வொரு செக்கிலும் சிக்காமல், காங்கிரஸ் இன்னும் திமிறிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் திமுகவினருக்கு பெரும் ஆப்பு தயாராக இருக்கிறதோ என்று கூட தோன்றுகிறது. வசமாய் சிக்கிக் கொண்டது திமுக என்றும் கருத வேண்டியிருக்கிறது.
காங்கிரஸ்ஸூக்குத் தேவை 80 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி, ஆறு அமைச்சர்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் உலா வருகின்றன. ஆனால் அது தற்கொலைக்குச் சமானம் என்று திமுக தலைவர் சொன்னதாகவும் செய்திகள் வருகின்றன.
இத்தைகைய ஒரு சூழலில் எதிர்கட்சியினரின் அணி வகுப்பு, திமுகவினருக்கு மிகுந்த அச்சத்தை தருவதாகவும், அம்மா ஜெயித்து வந்தால் திமுகவினரின் கதி அதோகதியாகி விடும் என்று அதிமுகவினர் சொல்கின்றார்கள். திமுகவின் பெருந்தலைகளுக்கு எதிரான அத்தனை வழக்குகளும் இப்போதே அதிமுக தலைவியிடம் வந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். என்ன நடக்குமோ தெரியாது?
ஆனால் தேர்தல் கமிஷனின் காமெடிகள் தான் எரிச்சலை ஊட்டுவதாய் இருக்கிறது.
பணப்பட்டுவாடாவை யார் தடுப்பது? என்று தேர்தல் கமிஷனைக் கேளுங்கள். அவர்கள் போலீஸாரை காட்டுவார்கள். ஆனால் போலீஸாரே அந்த வேலையைச் செய்தால், தேர்தல் கமிஷனால் அதைத் தடுக்க முடியுமா? இப்படிப்பட்ட ஒரு அதிகாரத்தை வைத்திருக்கும் தேர்தல் கமிஷன் ஒரு காமெடி பீஸ் தானே?
இதுவரை தேர்தலில் அத்துமீறல்களே நடக்கவில்லையா? ஏதாவது ஒரு கடுமையான நடவடிக்கையாவது இந்த தேர்தல் கமிஷன் எடுத்ததா? பத்திரிக்கைகள் அனைத்தும் ஆதாரங்களைக் கொட்டினவே திருமங்கலம் தேர்தலில். கமிஷன் என்ன செய்து கிழித்தது? கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வீராப்பு பேசி வருகிறது தேர்தல் கமிஷன்.
பணக்கட்டுகள் ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு வெகுபத்திரமாய் பதுக்கப்பட்டிருப்பதாகவும், அது சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் படி அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாகவும் அதிகார வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். இருப்பினும் மக்கள் காசினை வாங்கிக் கொண்டு இவ்வளவுதானா என்று கேட்கப் போகின்றார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்களாம். ஆக இத்தேர்தல் திமுகவினரை திகிலடையச் செய்யும் தேர்தலாக அமையப்போகிறது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இந்த திகிலில் காமெடி பீஸ் : தேர்தல் கமிஷன்.
- பஞ்சரு பலராமன்