மீடியாக்கள் பரபரப்பாகிவிட்டன. நிருபர்களும், வீடீயோகிராஃபர்களும் அரசியல் கட்சிகளின் அலுவலங்களை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். தினமும் பேட்டிகளும், கணிப்புகளும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. பரபரப்பாஅன இச்சமயத்தில் இந்திய அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை பற்றி சிறிது எழுதலாம் என்று நினைக்கிறேன்.
இந்திய அரசியல் வரலாற்றில் நடந்த எத்தனையோ அரசியல் சம்பவங்கள் இந்திய மக்களின் வாழ்க்கைப் போக்கினை மாற்றி இருக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலின் முடிவு இந்தத் தேர்தலின் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை லேசில் அனுமானிக்க இயலவில்லை.
தேசியக்கட்சிகள் என்று சொல்லக்கூடிய காங்கிரஸ், பாஜக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலக் கட்சிகளை நம்பி இருப்பது வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. தனக்கென்று ஒரு வாக்கு வங்கியை பெரும்பான்மையாக உருவாக்க முடியாத பரிதாபத்துகுரியதாக அவைகள் இருப்பதும் தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ் நிலையில் அரசியல் கட்சிகளின் போக்கும் நடத்தைகளும், பொது மக்களின் உள்ளத்தினையும் ஒருவாறு அனுமானித்து ஒரு சில முடிவுகளுக்கு வரலாம் என்று இந்தப் பதிவினை தொடர்கிறேன். இந்தப் பதிவு சிலருக்கு முரண்பாட்டினைத் தோற்றுவிக்கலாம் அல்லது வருத்தத்தினை ஏற்படுத்தலாம். அதையெல்லாம் மீறி உண்மை என்ற விசயத்தினை முன்னிறுத்திப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இப்பதிவு என் தனிப்பட்ட கருத்தாக எடுத்துக் கொள்ளவும். உடன்பாடற்ற கருத்துகள் இருப்பதாக தெரிந்தால் தயங்காமல் சுட்டவும். தவறிருக்கும் பட்சத்தில் திருத்திக் கொள்ள ஏதுவாயிருக்கும்.
இந்திய ஜன நாயகத்தில் தேர்தல் கமிஷனின் அறிவிப்புகள் பெரும்பாலும் கேலிக்குரியதாகப் போய் விட்ட சம்பவங்கள் அதிகம். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்பது ஒரு சட்டம். ஆனால் எந்தக் கட்சிகள் இந்த விதியினைக் கடைபிடித்திருக்கிறது? விதிகளை மீறிய சம்பவம் சமீபத்தில் மதுரையில் நடந்தது அனைவருக்கும் தெரியும். தேர்தல் கமிஷனால் என்ன செய்ய முடிந்தது அல்லது செய்து கிழித்தது? தேர்தல் விதிகள் என்பவை ஏட்டுக்கு மட்டும் சொந்தம். அதைக் கடை பிடிக்க வேண்டிய கட்சிகள் சற்றுக் கூட அவ்விதிகளுக்கு கட்டுப்படுவதே இல்லை என்பது கடந்து சென்ற தேர்தல்களின் மூல்மாக கண்டோம். லோக்சபா தேர்தலுக்கு போட்டியாளர் 25 லட்ச ரூபாய் மட்டும் தான் செலவழிக்க வேண்டுமென்ற விதியினை இதுவரை எந்தக் கட்சியாவது செயல்படுத்தி இருக்கிறார்களா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஏழைக் கட்சிகளும், சுயேட்சைகள் மட்டுமே இவ்விதிகளை வேறு வழியின்றி கடை பிடித்திருப்பார்கள். தேர்தல் விதிமுறைகள் மீறுவதற்காகவென்றே இருக்கும் கேலிக்குரிய சட்டங்கள் என்பது உண்மைதானே. மீறிய கட்சிகளின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க இயலாத அதிகாரமுடைய தேர்தல் கமிஷனால் என்ன பயன் என்று பார்த்தோமானால் தேர்தல் நடத்த உதவுகின்றது என்று மட்டும் சொல்லலாம். மேலும் உச்சப்பட்சமாக இன்றைய தேர்தல் கமிஷனர் மீது சர்ச்சைகள் இருப்பது மேற்படி சம்பவங்களை வலுப்படுத்தும் செயலாக கருத வேண்டியிருக்கிறது.
அடுத்து வாக்காளர்கள் பணம் பெறுவது பற்றியது. படித்தவர்கள் அல்லது கையாலாகாதவர்கள் தேர்தல் நடத்தை விதி, சமூக அக்கறை என்றெல்லாம் காரணம் காட்டி பணம் வாங்கக்கூடாது என்று பேசிக் கொள்வார்கள். ஆனால் அன்றாடம் சோற்றுக்கு திண்டாடும் வறுமைக்கூட்டத்தின் தேர்தல் விதி என்ன தெரியுமா ”நான் உனக்கு ஓட்டுப் போட்டால் என்ன தருகிறாய்” என்பது தான். இந்தக் கூட்டத்தின் வறுமை நிலையினை நன்கு பயன்படுத்திக் கொண்டது திமுக மட்டுமே. போன சட்டமன்றத் தேர்தலில் திமுகாவால் அறிவிக்கப்பட்ட இலவசங்கள் இந்தக் காசு வாங்கும் கூட்டத்தினை முன் வைத்து தான் என்பது அனைவராலும் மறுக்க இயலாத ஒன்றாகும். அதற்கு ஆதாரமாக ஜெயித்த பிறகு பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து அளித்த நிகழ்ச்சியினையும் தமிழ் நாட்டு மக்கள் கண்டார்கள். வறுமைக் கூட்டம் ஒழிந்தால் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய இயலாது என்பதால் அந்தக் கூட்டத்தினர் சமுதாய மேன்மையடையக்கூடிய திட்டங்களை செயல்படுத்த மாட்டார்கள். அந்தக் கூட்டத்தினர் தான் கோஷம் போடுவார்கள், கொடி பிடிப்பார்கள், பஸ்ஸை எரிப்பார்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். இந்தக் கூட்டமில்லையென்றால் அரசியல்வாதி காணாமல் போய்விடுவான். தேர்தலில் பணம் கொடுத்தால் மட்டுமே (அது இலவசமாகவும் இருக்கலாம்) ஓட்டுப் போடுவோம் என்ற நிலைக்கு இன்றைய பெரும்பான்மையான இந்திய மக்கள் வந்திருக்கிறார்கள் என்பது உண்மை.
அடுத்ததாக சிறிய வட்டாரக் கட்சிகள். தேர்தல் நேரத்தில் கிடைக்கக் கூடிய பணம் மற்றும் சில இதர வசதிகளை அந்தக் கட்சித் தலைவர்கள் பெறும் பொருட்டு வட்டாரக் கட்சிகள் தொடங்கப்படுகின்றன. அந்த கட்சிகள் ஜாதி, மத அடையாளங்களை முன்னிறுத்தி தங்களுக்கான ஓட்டு வங்கியை ஏற்படுத்திக் கொள்கின்றன. சினிமாக் ஹீரோக்களும் தன் ரசிகர் பட்டாளத்தை ஓட்டு வங்கியாக மாற்றி தனக்கான இடத்தைப் பெறுகிறார்கள். தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் இல்லை. டெபாசிட் இழந்தாலும் பரவாயில்லை கடந்த தேர்தலில் எத்தனை சதவீதம் ஓட்டுப் பெற்றிருக்கின்றோம் என்று ஆதார பூர்வமாக அரசியலுலகிற்கு காட்ட வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருக்கிறது. அப்படிக் காட்டினால் தான் எந்தப் பெரிய கட்சி அதிக பணமும், சீட்டுகளும் மற்ற வசதிகளும் தருகின்றார்களோ அவர்களோடு கூட்டணி என்ற நிலைப்பாட்டிற்கு வர இயலும். இந்தக் கட்சிகளால் ஜாதியினருக்கோ, மதத்தினருக்கோ அல்லது ரசிகர்களுக்கோ பைசா புண்ணியம் கிடைக்காது. அதற்கு உதாரணங்களாக தமிழகத்தில் எத்தனையோ கட்சிகளை விரல் நீட்டிக் காட்டலாம். மேலும் இந்தக் கட்சிகள் ஜெயித்தால் அரசியல் குதிரை பேரங்கள் நடத்தி கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதிக்கவும் ஆரம்பித்து விடுகின்றன.
இப்படிப்பட்ட சூழ் நிலையில் இன்னுமொரு முக்கியமான விஷயத்தை அனைவரும் அவதானிக்க வேண்டும். பாஜக ஆட்சியினை பதிமூன்று மாதங்களில் தூக்கி எறிந்து மீண்டும் பொதுமக்களின் மீது தேர்தல் செலவினை ஏற்றிய கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி தாங்கள் விரும்பிய பதவிகளை தரத் தயங்கினால் வாபஸ் ஆதரவு என்று மிரட்டிய கட்சிகளும் தமிழகத்தில் இருக்கின்றன. இவர்களிடம் இருக்கும் ஓட்டு வங்கியை மனதில் வைத்து தேசியக் கட்சிகளும் வளைந்து நெளிந்து போகின்றன. இதனால் படுபாதக விளைவுகள் உருவாகி விடுகின்றன. இதற்கு உதாரணமாக இன்றைய திமுக அரசின் இக்கட்டான சூழ்நிலையினைச் சொல்லலாம்.
தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளின் போக்கு இவ்வாறு இருக்கிறது.கூட்டணி சேராத மாநிலக் கட்சிகளின் போக்கினை எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. அவர்கள் தேர்தலில் கனிசமான வெற்றியினைப் பெற்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது இந்திய மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். இவர்களால் மீண்டும் இந்தியா பொதுத் தேர்தலைச் சந்திக்க நேரிடும் அபாயம் இருக்கிறது. இந்தக் கட்சிகளுக்கு பொதுமக்களின் மீது எள்ளளவுக்கு கூட ப்ரீதி கிடையாது. குதிரை பேரத்தில் கோடி கோடியாய் பணத்தினை குவித்து செல்வத்தில் மிதப்பார்கள் அல்லது வேறு வழிகளில் நன்மை அடைந்து விடுவார்கள்.
மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி கொண்டுள்ள தேசியக் கட்சிகள் ஜெயித்தால் யாருக்கு என்ன நன்மைகள் கிடைக்குமென்று பார்த்தோமானால் மாநிலக் கட்சிகளே அதிக நன்மை பெறுவார்கள் என்பது உண்மை. கூட்டணி கட்சிகளின் பலத்தில் ஆட்சி அமைக்கும் தேசியக் கட்சிகளின் கைகள் கட்டிப் போடப்பட்டுவிடும். குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு உலகப்போக்கிற்கு ஏற்றவாறு சிந்திக்கத் தெரியாது என்பது கடந்த வரலாற்றில் காணக்கிடைக்கின்றன. எந்த பொது நோக்கிற்கான திட்டத்தினை செயல்படுத்த விரும்பினாலும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களின் அனுமதி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சம்பவங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒப்புதல் பெறாத எத்தனையோ நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் இன்று முடங்கிக் கிடக்கின்றன என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை.
இப்படிப்பட்ட சூழ் நிலையில் என்ன செய்யலாமென்று பார்த்தால் எந்த தேசியக் கட்சி பெரும்பான்மையாக மாநிலக் கட்சிகளுடன் உடன் பாடு காணாமல் தனியாக நிற்கிறதோ அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவது தான் சாலச் சிறந்ததாகும் என்று நம்பலாம். தனி மெஜாரிட்டியுடன் ஜெயிக்கும் தேசியக் கட்சிகளால் தான் சிறிய அளவிற்காவது இந்தியாவிற்கு நன்மை செய்ய இயலும்.
குறிப்பு : நான் எந்தக் கட்சியையும் சாராதவன்.
அனாதி பதிப்பித்தது. 

